தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையின் சிறப்பு அதன் தொழில் வளம்தான். அங்குள்ள சிறிதும் பெரிதுமான நூற்றுக்கணக்கான தொழில்களின் குரலாக ஒலிப்பது கோவை மாவட்ட சிறுதொழில் சங்கமான கொடிசியா அமைப்பு.
அவ்வமைப்பு, சிறு-குறு-நடுத்தரத் தொழில் முனைவோரின் முதலீட்டுத்தேவையை உணர்ந்து, அண்மையில் (15 அக்.2024) தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடத்தியது.
அதுகுறித்து நம்மிடம் கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் விரிவாகப் பேசினார். அதிலிருந்து…
முனைவு : எதற்காக இந்த கடன் வழிகாட்டல் நிகழ்ச்சி?
கார்த்திகேயன் : இந்த ஆண்டில் கோவையில் மொத்தமாக வழங்கப்பட வேண்டிய தொழிற்கடன்களுள் 42% மட்டுமே வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் கூட இது 50%ஐத் தாண்டவில்லை. இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கடன் மேளாக்களை நடத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நாங்கள் மாவட்டத்தொழில் மையத்துடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினோம். மாவட்டத்தொழில் மையம் 50 அமைப்புகளை அழைத்திருந்தது. நாங்கள் அழைத்த 44 வங்கிகளில் 30 வங்கியாளர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.
முனைவு : இந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்.
கார்த்திகேயன் : சுமார் 500 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாங்கள் 200 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தோம் என்றால் அதற்குக் கிடைத்த வரவேற்பு எத்தகையது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (Canara Bank) ஜிதேந்திரன், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் சண்முக சிவா, மற்றும் மாவட்ட தொழில் மையத்தைச் சேர்ந்த வணங்காமுடி முதலியோர் இதில் கலந்து கொண்டனர். இங்கு தொழில்முனைவோருக்கு வங்கிகளின் கடன் பெறும் முறைகள், மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முனைவு: இந்த நிகழ்வு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
கார்த்திகேயன்: இந்நிகழ்வில் தேசிய மற்றும் தனியார் வங்கியாளர்கள் கலந்து கொண்டு, கடன் திட்டங்கள் குறித்துப் பங்கேற்பாளர்களுக்கு விளக்கினர். இதில் பங்கேற்ற சிறு,குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் கருத்துப்படி, வங்கிகள் நல்ல ஒத்துழைப்பு வழங்கின. இந்த சந்திப்பின் மூலம் ஆரோக்கியமான உரையாடல் உருவாகியிருக்கிறது.
தாய்கோ வங்கியின் குறைந்த வட்டி கடன் (7%), முத்ரா கடனுதவி முதலிய வரி குறித்த தகவல்கள் பகிரப்பட்டன. தாய்கோ, எளிதாக ரூ.20 லட்சம்வரை கடன் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சவால்களை எடுத்துரைத்தனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்கக்கூடாது என்று கொடிசியா வங்கிகளிடம் அறிவுறுத்தியிருக்கிறது.
அடுத்தமுறை இந்த சந்திப்பில் மாவட்டத் தொழில் மையத்திலிருந்து 5 பேர், சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் 5 பேர், மற்றும் நெறியாளர் ஒருவர் ஆகியோரை உள்ளடக்கி கூட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கேள்வி: இந்நிகழ்வின் மூலம் எவ்வளவு தொகை கடன் வழங்கப்படும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?
பதில்: கோவையில் மட்டும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ₹35,661 கோடி அளவுக்குக் கடன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 42% மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற ஆண்டு 32% மட்டுமே வழங்கப்பட்டது. எனவே, தொழில் துறையில் நிதித்தேவையை விரைந்து நிறைவேற்றுவதற்காக இந்த மேளா நடத்தப்பட்டது.
வங்கிகளில் தொழிற்கடன் பெற்றோர், முன்கூட்டியே கடன் தொகை முழுவதையும் செலுத்தி கணக்கை முடித்துக்கொள்ள விரும்பினால் அதற்கு ஒரு சிறப்புக் கட்டணம் (Pre-closure charges) வசூலிக்கப்படுவது வழக்கம். இக்கட்டண முறை தற்போது அகற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அக். 9, 2024 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது, ஆனால் இது தற்போதுள்ள கடன்களுக்குப் பொருந்துமா என்ற தெளிவுரைக்காகக் காத்திருக்கிறோம்.
கோவையைப் பொறுத்தவரை எங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால், அடுத்த மாதத்தில் ரூ.20,000 கோடி வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கப்படும் என்பதுதான் (இதுவரை ரூ.14,000 கோடி வழங்கப்பட்டுள்ளது). வங்கிகள் தாராளமாகக் கடனுதவி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 40 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ளனர், ஆனால் 28 லட்சம் பேரே உத்யம் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் பேர் அமைப்புசாரா துறையில் இயங்கி வருகின்றனர். எனவே அனைவரையும் உத்யம் பதிவில் கொண்டுவரவேண்டும், அனைவருக்கும் நிதிச்சேவை கிடைக்கவேண்டும் என்பதே எங்களது விருப்பம் ஆகும்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
Good