தொழில் முனைவோருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதில் பாதகமில்லை. ஆனால் தேவையற்ற மூட நம்பிக்கைகள்தாம் கூடாது. தாங்கள் செய்யும் தொழில் சிறப்பாக வளருமா என்று சாமியார்களிடம் போய்க் கேட்கிறார்கள். இவர்கள் தொழில் செய்வதே அந்த சாமியாருக்குத் தெரியாது என்கிறபோது, அது வெல்லுமா என்பது எப்படித் தெரிந்திருக்கும்?
அதேபோல நீங்கள் இந்திந்த தொழில்களில் ஈடுபட்டால் ஜெயிப்பீர்கள் என்று சாமியார்கள் ஒரு பட்டியல் தருகிறார்கள். நம்மவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறதா என்று பார்க்காமல் பஞ்சாலை வைக்கச் சொன்ன சாமியார்களைப் பார்த்திருக்கிறோம்தானே!
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நமது தமிழ் தொழில் முனைவோரில் பலருக்கு ஒரு பைத்தியம் பிடித்திருக்கிறது. அது ’சித்தர் பைத்தியம்’.

சித்தர் என்றால் பதினெண் சித்தர்கள் இல்லை.. கொஞ்சம் அழுக்கு ஆடை, கூர்மையான பார்வை, முன்னுக்குப் பின் முரணான, ஆனால் தீர்க்கமான பேச்சு..இரந்து உண்ணுதல் .இவை இருந்தால் அந்த மனிதனுக்கு சித்தர் பட்டம் கொடுக்க நம்மவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் போய் தொழில் ஆலோசனை கேட்கும் நிலையும் இருக்கிறது.
“தமிழகத்தில் ஓரளவுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பலரும் அவர்தம் குடும்பங்களால் புறக்கணிக்கப்பட்டு தெருவில் வீசப்படுகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு சித்தர் பட்டம் கொடுத்து, பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கிறது சமூகம். ஆதரவற்ற இவர்களைக் கணக்கெடுத்து சிகிச்சையளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் மாற்றுத் திறனாளிகளுக்காக டிசம்பர் 3 இயக்கத்தை நடத்தி வருபவரும் மன நல ஆலோசகருமான டி.எம்.என். தீபக்.
இனிமேல் ’சித்தர்’ தேடி ஓடுவீங்க?