சென்னை, ஜன.5: தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதேபோல் அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளும் மிக மோசமாக உள்ளது என்பது நாம் அறிந்ததுவே. சைபர்புல்லிங் என்பது உலகளவில் பெரும் சவாலாகவே உள்ளது. இதனால் சிறுவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும் உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணமாக உள்ளது.
சாதாரணமாக 13 வயது நிறைவடைந்தால் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும், ஆனால் போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் சிறாருக்குக் கற்பிப்பதும் அவசியமாக உள்ளது.
இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சமீப காலத்தில் ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்கு குறைவான சிறார் வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை செய்தது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்குகளை தொடங்குவதற்கு பெற்றோரின் அல்லது அவர்களின் பாதுகாவலர்களின் அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு இன்று வெளியிட்ட டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023 வரைவு விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது. கணக்கு தொடங்குவதற்கு முன்னரே இதனை சம்பந்தப்பட்ட வலைதளங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு இந்த வரைவு விதிகளின் படி குழந்தைகளின் தரவுகள் பாதுகாப்புக் கொள்கைக்கான வரைவு விதிமுறைகளுக்கு அனுசரித்து பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறது. தற்போது குழந்தைகளின் தனிப்பட்ட தரவை கையாளுவதற்கு முன், அந்த தரவு சேகரிக்கும் நிறுவனங்கள் பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளது உறுதிப்படுத்தினால் மட்டுமே, நிறுவனங்கள் குழந்தையின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தவோ அல்லது சேமிக்கவோ கூடும் . ஒப்புதலை சரிபார்க்க அது தொடர்பானவர்கள் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை/ டிஜிலாக்கரைப் பயன்படுத்த வேண்டும் .
தனிநபர் தரவைப் பயன்படுத்த புதிய வழிமுறைகளை உருவாக்கும் நிறுவனங்கள் விதிமீறல்களுக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க சட்டத்தில் ஏற்பாடு உள்ளது.
2023 இன் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரைவு விதிகள், குழந்தைகளின் மட்டுமல்ல தனிநபரின் தரவுகளின் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. மேலும் பயனர்களின் உரிமைகளையும் சிறந்த முறையில் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. பயனர்கள் தங்களை குறித்த தரவுகளை நீக்கவும் அதேபோல அவை ஏன் சேகரிக்கப்படுகின்றன என்ற விளக்கத்தையும் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள அனுமதியும் அளிக்கிறது .
இந்த வரைவு விதிகள், டிஜிட்டல் இடையீட்டாளர்களை (Intermediaries) – இ-காமர்ஸ் நிறுவனங்கள், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக இடையீட்டளர்கள் என்று பிரித்து அவர்களுக்கென்று தனித்தனியாக விதிகளை பரிந்துரைக்கின்றன. அதன்படி சமூக ஊடக தளங்களும் தகவல் பகீர்தல், அவற்றை நீக்குதல், மாற்றியமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் இடையீட்டாளர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த விதிகள் சரியாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கென்று தனி டிஜிட்டல் தரவு வாரியம் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் இது டிஜிட்டல் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த வரைவு விதிகளை குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றை www. mygov.in.com / (https://mygov.in) தளத்தில் சமர்ப்பிக்கலாம் .
– ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன் .
(Lead picture designed by Freepik.com)