அண்மையில் இணையத்தில் உலா வரும்போது ஒரு தகவல் என்னை ஒரு புள்ளியில் நிறுத்தியது. என்னைப்புருவம் உயர்த்தச் செய்யவைத்த அந்த செய்தி என்ன தெரியுமா?
‘உடனடியாக வெளிநாட்டு அங்காடிகளுக்குத்தேவையான உலர் காய்கறிகள் தேவை. ஏற்றுமதியாளர்கள் தொடர்பு கொள்ளவும்’ என்பதுதான் அந்த இணையதளத்தில் இருந்த தகவல். உலர் பழங்கள் (கிஸ்மிஸ், அத்திப்பழம் அளவுக்குத்தான் நமக்கும் தெரியும்) என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன உலர் காய்கறிகள்?

அட, இது என்ன புதிய தகவலாக இருக்கிறதே என்று இன்னும் கொஞ்சம் ஆழமாகத்துழாவியபோது சுவையான பல தகவல்கள் கிடைத்தன.
காய்கறிகள், பழங்களை உலரவைத்து அவற்றை உள்நாட்டுச் சந்தைக்கும் வெளிநாட்டுச் சந்தைக்கும் விற்பனை செய்யும் http://www.naturaldehydration.com என்ற இணையதளம் இன்னும் வியப்பூட்டியது. இதுபோல ஏகப்பட்ட தொழில்முனைவோர் இத்துறையில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருப்பது நமக்குத்தெரியவே இல்லை.
காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து நீர்ச்சத்தை நீக்கி அவற்றை தேவையான போது பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக செய்யும் முறைதான் டி-ஹைட்ரேஷன் ஆஃப் வெஜிடபிள்ஸ். நாம பாரம்பரியமா செய்கிற, பாகற்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், சுண்டைக்காய் வற்றல், உப்புக்கண்டம், கருவாடு, வடகம் போன்றவை தான் இதுவும்.
ஆனால் நேரடியாக வெயிலில் உலரவைக்கப்படுவதால் அவற்றின் நிறத்தில் சிறிது மாற்றம் ஏற்படுகிறது. இந்த குறையை போக்க டி-ஹைட்ரேஷன் ட்ரேக்கள் பயன்படுத்தப் படுகின்றன.
சந்தையில் கிடைக்கும் இவ்வகையான டீ-ஹைட்ரேடிங் ட்ரேக்கள் மூலம் எல்லா விதமான காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், கீரைவகைகள், காளான், இறைச்சி, மீன் வகைகளை உலர வைக்க முடியும்.

இந்த உலர் பழங்கள், காய்கறிகளைக் கொண்டு சூப் வகைகள், ஜூஸ் வகைகள், ஐஸ்கிரீம் சுவையூட்டிகள், சித்த, ஆயுர்வேத மருந்துகள், பல்வேறு வகையான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்க முடியும்.
தயாரிப்பு முறை:
தேவையான காய்கறி அல்லது பழங்களை நன்கு கழுவி அவற்றை செதில் செதிலாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அவற்றை டி. ஹைட்ரேஷன் ட்ரேக்களில் அடுக்கி சுமார் 8 முதல் 12 மணிநேரம் வரை உலரச் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருட்கள்:
ஆம்சூர் பவுடர் என்னும் மாங்காய்ப் பொடி
குளிர் பானங்களில் பயன்படுத்தும் லெமன் பவுடர்
நூடுல்ஸ் களில் பயன்படுத்தும் கேரட், வெங்காயம், பீன்ஸ், பட்டாணி துருவல்கள்
ஐஸ்கிரீம்களில் பயன்படுத்தப்படும் மாம்பழ, வாழைப்பழ சுவையூட்டிகள்
சூப் வகைகளுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி, கீரை வகைகள்
பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுபவை:
ஆப்பிள், வாழைப்பழ, ஆப்ரிகாட், சிப்ஸ் வகைகள்
வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் சீவல்கள், இன்னும் பல.
உள் நாட்டு தேவையைப் பொறுத்தவரை உலரச் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான சந்தை வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது. சேமிப்பு கிடங்குகள் அமைப்பும் நம் நாட்டில் அதிகமாக இல்லாததாலும் அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றி நம் நாட்டவருக்கு தெரியாததாலும் வருடாந்திர உற்பத்தியில் சுமார் 30% வரை வீணாக்கப்படுகிறது.
இத்தகைய தொழில்நுட்ப அடிப்படையில் பதப்படுத்தப்படும் செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களின் செல்ஃப் லைஃப் எனப்படும் அலமாரி சேமிப்புகாலம் இன்னும் அதிகமாக நீட்டிக்கப்படுகிறது. இதனால் எல்லாவிதமான காலங்களிலும் நாம் விருப்பப்படும் காய்கறி, பழங்களை உண்ணலாம்.
இந்திய காய்கறிகளின் சுவை மற்றும் மணத்துக்காக இவ்வாறான காய்கறிகள் மற்றும் பழங்கள் உலகச் சந்தையில் விரும்பி வாங்கப்படுகின்றன. இவற்றை விரும்பி வாங்கும் நாடுகளின் பட்டியல்: ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, பெர்லின் போன்றவை. மேலும் எங்கெல்லாம் நம் இந்திய மக்கள் குடியேறி இருக்கிறார்களோ அங்கெல்லாம் இதற்கான தேவை உள்ளது.
2015-2016 ஆண்டுக்கான உலர் காய்கறி பழங்கள் ஏற்றுமதி 66,189.61 மெட்ரிக் டன்னாகவும் அன்னிய செலாவணி மதிப்பு 914.21 கோடிகள் என இந்திய விவசாயபொருட்கள் ஏற்றுமதிக் கழகம் http://apeda.gov.in/apedawebsite/SubHead_Products/Dried_and_Preserved_Vegetables.htm தெரிவிக்கிறது.
இத்தகைய பொருட்களை சந்தைப்படுத்த மற்றும் ஏற்றுமதி செய்ய அதற்கான சான்றிதழ்களை நாம் பெற வேண்டும். இந்த சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்களைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!
உலர் காய்கறி, பழ வணிகத்தில் ஈடுபட்டுவரும் சில இந்திய நிறுவனங்கள்:
http://www.naturaldehydration.com/naturaldehydration/index.php/corporate-profile.html
http://www.exportersindia.com/aravindfoodproducts/products.htm#dehydrated-vegetables-1704380
http://www.exportersindia.com/srinath-global-sources/products.htm#dehydrated-vegetables-834077
http://www.exportersindia.com/gooseberry-impex/dehydrated-vegetables-chennai-india-1030507.htm
–காயத்ரி சிவகுமார்.