(இந்தத் தளம் தெரியுமா?– தொடரின் 7 ஆம் பகுதி)
ஒரு தனிமனிதராகவும் சரி, நிறுவனம் ஒன்றை வழிநடத்துபவராகவும் சரி, சமூக ஊடக பயன்பாட்டையும், அதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் அறிந்திருக்கலாம். நிறுவனத்திற்கு என சமூக ஊடக இருப்பு தேவை என்பதையும் உணர்ந்திருக்கலாம். அதற்கேற்ப முக்கிய சமூக ஊடகங்களில் உங்கள் நிறுவனம் சார்பில் சமூக ஊடக செயல்பாட்டையும் கொண்டிருக்கலாம்.
அளவில் பெரிய நிறுவனம் என்றால், சமூக ஊடக கணக்குகளை கையாள்வதற்கு என்றே தனியே டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன துணையையும் நாடியிருக்கலாம். சமூக ஊடக இருப்பு என்பது, விளம்பர நோக்கில் கைகொடுப்பதாக அமையலாம். மக்கள் தொடர்பு முயற்சியின் ஒரு அங்கமாகவும் அமையலாம்.
எல்லாம் சரி, உங்கள் நிறுவனத்திற்கு என்று தனியே வலைப்பூ இருக்கிறதா? அதற்கான தேவையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
வலைப்பதிவு எனும் போது, பரவலாக அறியப்படும் வெளியுலகிற்கான வலைப்பதிவை குறிப்பிடவில்லை: மாறாக நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்படும் ’உள் வலைப் பூ’ (Internal Blogging ) குறிப்பிடுகிறோம். அதாவது ஊழியர்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு என புரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் பிளாகிங் என குறிப்பிடப்படும், வலைப்பதிவில் பல வகை இருக்கின்றன. அவற்றின் பயன்பாடும் பலவிதங்களில் அமைகின்றன. எனினும், பெரும்பாலும் வலைப்பூ என்பது, வெளி உலகில் உள்ள பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக மேற்கொள்ளப்படுபவை. வலைப்பூ, அடிப்படையில் தனிமனிதர்கள் சார்ந்ததாக கருதப்பட்டாலும், இணைய வெளியீட்டு சாதனமாக அவை பிரபலமான பிறகு, வர்த்தக நிறுவனங்களும் வலைப்பதிவு செய்யத்துவங்கின. இவை வர்த்தக வலைப்பூக்கள் எனும் தனிப்பிரிவாக அறியப்பட்டன. அதே நேரத்தில் வல்லுநர்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் வலைப்பதிவு தொழில்முறை வலைப்பதிவாக அறியப்படுகின்றன.
வலைப்பூ வகைகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். இந்த வரிசையில் தான், இண்டர்னல் பிளாக் எனக் குறிப்பிடப்படும் உள் வலைப்பூவும் வருகிறது. ஏற்கனவே பார்த்தது போல, நிறுவனங்களுக்குள் மேற்கொள்ளப்படும் தகவல் தொடர்பு முயற்சியாக உள் வலைப்பூ அமைகிறது. (இனி நிறுவன வலைப்பூ என்று குறிப்பிடப்படும்).
நிறுவனங்களுக்கு தகவல் தொடர்பு முக்கியம் என்பதை நீங்கள் எந்த விவாதமும் இல்லாமல் ஒப்புக்கொள்வீர்கள்தானே! அறிவிப்புகளுக்கான தகவல் பலகை துவங்கி, சுற்றறிக்கை, இமெயில், செய்தி மடல் என பலவகையான நிறுவனங்கள் ஊழியர்களுடன் தொடர்பு கொள்கின்றன. இணைய உலகில் வாட்ஸ் அப்பும், ஸ்லேக் (Slack) சேவையும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கின்றன. ஜூம் கூட்டங்களை அல்லது டிரெல்லோ (Trello) பலகைகளையும் இதில் சேர்க்கலாம்தான்.
இந்த வரிசையில் தான் நிறுவன வலைப்பூவும் அமைகிறது. நிறுவன செயல்பாடுகளையும் அதன் ஊழியர்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இது அமைகிறது. இதன் பார்வையாளர்கள் நிறுவன ஊழியர்கள்தான். நிறுவனம் சார்பில் நடத்தப்படும் செய்தி மடல் சேவையின் இன்னும் மேம்பட்ட, இன்னும் துடிப்பான வடிவமாகவும் நிறுவன வலைப்பூவைக் கருதலாம்.
நிறுவனத் தலைவர் அல்லது தலைமை அலுவலர், ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தியில் துவங்கி, புதிய சேவை தொடர்பான தகவல் வரை நிறுவன வலைபூவின் உள்ளடக்கம் என்னவாக வேண்டுமானாலும் அமையலாம். நிறுவன தரப்பில் ஊழியர்களுடன் பகிர விரும்பும் எல்லா வகை தகவல்களும் உள்ளடக்கம்தான். அதே நேரத்தில் வலைப்பதிவின் ஜனநாயக தன்மைக்கேற்ப ஊழியர்களும் தங்கள் தரப்பு கருத்துக்களை பகிரலாம். அந்த வகையில், ஊழியர்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு வசதியாகவும் அமையலாம்.
நிறுவன வலைப்பூவின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும் என வரையறுப்பதைவிட, நிறுவன வலைப்பதிவினால் உண்டாக கூடிய பலன்களை தெரிந்து கொள்வது இதற்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
நிறுவனம் தரப்பில் தகவல்களை பதிவு செய்வது, அறிவு பகிர்வாக அமையலாம். நிறுவன செயல்பாடுகள் அல்லது கொள்கை முடிவுகளுக்குப் பின்னே உள்ள நோக்கம் மற்றும் உத்திகளை ஊழியர்கள் தெரிந்து கொள்ளலாம். புதிதாக இணையும் ஊழியர்கள், நிறுவன கலாச்சாரத்தை எளிதாக அறிமுகம் செய்து கொள்ளவும் இந்தப் பதிவுகள் உதவும்.
நிறுவன செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் ஒரே இடத்தில் அளிக்கப்படுவது, தகவல் தொடர்பை எளிதாக்குவதோடு, செயல்திறனையும் அதிகரிக்க உதவும். தகவல் இடைவெளி பெருமளவு நீக்கப்படும்.
நிறுவனப் பதிவுகள், ஊழியர்களுக்கு இடையே பிணைப்பை உருவாக்கவும் உதவும். வெளிப்படையான தகவல் பகிர்வு இதை சாத்தியமாக்குகிறது. தகவல் பகிர்வு என்பது ஏதோ ஒரு மட்டத்தில் நிகழ்வது எனும் எண்ணத்தை தகர்த்து அனைவரையும் பங்கேற்க வைக்கிறது.
ஊழியர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிரலாம் என்பது இந்தப் பிணைப்பை மேலும் வலுவாக்கும். தனிப்பட்ட அனுபவங்கள் பணி நுணுக்கங்கள் சார்ந்த உள்ளொளியாகவும் அமையலாம். ஊழியர்கள் மனநிலையையும் புரிந்து கொள்ள உதவும்.
வலைப்பூ, ஊழியர்கள் தங்கள் மனதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஊக்கம் அளித்து, பணியிட சமத்துவத்தை மேம்படுத்தும். சுய வெளிப்பாடு மற்றும் வெளிப்படையான கருத்து பரிமாற்றத்திற்கும் வழிவகுக்கும். முக்கிய அறிவிப்புகள், நிறுவன திட்டங்கள் போன்றவற்றை ஊழியர்கள் அறியவும் வலைப்பூக்கள் ஏற்ற வடிவமாக இருக்கும்.
பல்வேறு துறைகள், மற்றும் கிளைகள் கொண்ட நிறுவனங்களுக்கு இன்னும் ஏற்றதாக இருக்கும். பெரிய நிறுவனங்கள் எனும் போது அவற்றின் இண்ட்ராநெட் சேவைக்கு, வலைப்பூக்கள் பொருத்தமாக அமையும்.
துடிப்பான வலைப்பதிவு, நிறுவனத்தின்மீது ஊழியர்களுக்கான ஈடுபாட்டையும் அதிகரித்து, என் பணியிடம் எனும் உணர்வையும் அளிக்கும்.
நிறுவன வலைப்பூக்களை எப்படி வடிவமைப்பது என்பதை நிறுவனங்கள் தங்கள் நோக்கம், எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். வலைப்பூக்களை உருவாக்க பிளாகர், வேர்டுபிரஸ் போன்ற சேவைகள் இருப்பது போலவே, உள் வலைப்பதிவுக்கான தனிச்சிறப்பான சேவைகளும் இருக்கின்றன. பிளாகின். கோ (https://blogin.co/ ) உள்வலைப்பூ சேவையை வழங்குவதோடு, உள்வலைப்பூ தொடர்பான புரிதலை அளிக்கும் வழிகாட்டி பதிவுகளையும் கொண்டுள்ளது.
நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்புகிறவர்கள் உள் வலைப்பூவை நாடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
சைபர் சிம்மன்.
(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர். https://cybersimman.substack.com/ )
(pic courtesy: Pixabay)