வாட்ஸ்அப்பிலும் வந்துவிட்டது ஏ.ஐ! 

வாட்ஸ்அப்பிலும் வந்துவிட்டது ஏ.ஐ! 

அறிவியலின் அழகே, அற்புதங்களை நிகழ்த்துவதுதான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு தொழில்நுட்பம் அறிமுகமாகி, அசுர வளர்ச்சியை அடைந்து நமது வாழ்க்கை முறையையே புரட்டிப்போட்டிருக்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

இதுநாள்வரை நமக்கு ஏதாவது ஒரு சேதி தொடர்பாக ஏதாவது ஒரு தகவலைத்தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கூகிள் உள்ளிட்ட தேடுபொறிகளைப் (search engines) பயன்படுத்தி அதனைச் செய்துவந்தோம். இதுபோன்ற தேடுபொறிகள், நாம் தேடும் பொருள் தொடர்பான இணையதளங்களின் பட்டியலை நமக்கு அளித்துவந்தன.

நாம், ஒவ்வொரு இணையதளத்துக்கோ, அல்லது தொடர்புடைய இணைப்புக்கோ சென்று, திரும்பவும் நமக்கான தகவல்களைத் தேடி(!)ப் பயன்படுத்திவந்தோம். இதுவும் நமக்கு அயர்ச்சியைத்தான் ஏற்படுத்தி வந்தது.

‘நான் கேட்ட கேள்விக்கு நேரடியாக  இந்த இணையம் விடை சொல்லாதா?’ என்பதே இணையப் பயனாளர்களின் நெடுநாள் கேள்வி. இதற்கான விடையாக வந்த மாமணிதான் செயற்கை நுண்ணறிவு. ஒரு மனிதனைப்போலவே நம்மிடம் உரையாடி, நமக்குத்தேவையான தகவல்களை அளிக்க வல்லது இத்தொழில்நுட்பம். ஏற்கனவே திரட்டப்பட்ட பல்வேறு தரவுகள், நாம் பகிர்ந்துகொள்ளும் கேள்விகளின்மூலமாகக் கிடைக்கும் தகவல்கள் ஆகியவற்றை வைத்தே இத்தொழில்நுட்பம் தன்னை இயக்கிக்கொள்கிறது.

 

அந்த வகையில் நமக்கு அறிமுகமான முதல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதி இணையதளம்,  சாட்ஜிபிடிதான். ஓப்பன் ஏ.ஐ என்ற நிறுவனத்தின் இந்த இணையதளத்துக்குச் செல்வதன்மூலமாக, நாம் உரையாடல் வடிவிலேயே  தகவல்களைத்தேடுவதும் பெறுவதும் எளிதாக ஆகியிருக்கின்றன. இதைப்பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மளமளவென கூடிக்கொண்டே வருகிறது. இதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, இந்நிறுவனம் சாட் ஜி.பி.டியின் செயலியை (mobile application) அறிமுகம் செய்தது. அதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு.

 

ஏதோ ஒரு துளியூண்டு நிறுவனம், இணையத்தை ஆள்வதை இணைய ஜாம்பவான்கள் பொறுத்துக்கொள்வார்களா? உடனே களத்தில் இறங்கியது கூகிள் நிறுவனம். ஜெமினி என்ற பெயரில் தனது சாட் பாட்டை (அரட்டையடிக்கும் இயந்திரம்) இணைய வடிவத்தில் அறிமுகம் செய்துவிட்டது. கூகிள், ஜிமெயில் பயனாளர்கள் தங்களது தேவைகளுக்காக வெளியில் ஏன் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது ஜெமினி. ஆக, இது வாடிக்கையாளர்களைத்தக்க வைக்கும் இன்னொரு முயற்சிதான்.

 

உலகில் ஒற்றை ஜாம்பவான் என்று எவரும் கிடையாதே… பார்த்தார் மார்க் ஜக்கர்பெர்க். முகநூல், வாட்ஸ் ஆப் என்று ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் அவரால் செயற்கை நுண்ணறிவு என்ற பெயரில்  தனது பல்துறைப் பண்டசாலைக்கு முன்பு சின்னச்சின்ன பெட்டிக்கடைகள் முளைப்பது பொறுக்குமா….? பொறுக்காதே…

 

உடனடியாக  தனது மெட்டா நிறுவனத்தை முடுக்கிவிட்டார் மார்க்.  தனது நிறுவனங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் சென்ற ஆண்டு ‘மெட்டா கனெக்ட்’ நிகழ்ச்சியில் லாமா – 3 தொழில்நுட்பத்தில் இயங்கும் மெட்டா ஏஐயை அறிமுகம் செய்தது மெட்டா. கடந்த ஏப்ரலில் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும்  இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் இதன் பயன்பாட்டை தள்ளி வைத்திருந்தது.

pic courtesy: Freepic

தற்போது வாட்ஸ்அப், முகநூல், மெசேஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் செயற்கை நுண்ணறிவு உரையாடல் வசதியை அறிமுகப்படுத்திவிட்டது.  இருப்பினும் மக்களின் வாழ்க்கையில் முக்கிய தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ் ஆப்பில் இவ்வசதி வந்திருப்பதுதான் முக்கியமான சேதியாகப் பார்க்கப்படுகிறது.

 

அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியிலேயே செயற்கை நுண்ணறிவு உரையாடல் வசதி செயல்படுவதால் பயனாளரின் எந்த ஐயமும்  உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. நீங்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறீர்களா?

 

அப்படியென்றால் ஆண்ட்ராய்டு செல்பேசியின் வலது பக்கத்தில் ஒரு  நீல வட்டத்தைப் பார்ப்பீர்கள். ஆப்பிள் பயனாளராக இருந்தால் (ஐஒஸ்) உங்களது வாட்ஸ் ஆப் பக்கத்தின் மேல் பகுதியில் ஒரு நீல வட்டம் தோன்றும்.  இந்த நீல வட்டத்தை தட்டியவுடனேயே இது செயல்படத் தொடங்கிவிடும்.  அதேபோல எப்படியெல்லாம் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் தானே விளக்குகிறது.

 

தமிழிலும் இதனுடன் உரையாடலாம். தமிழில் கேள்விகேட்டால் புரிந்து கொள்கிறது , அதேபோல தமிழில் பதிலளிக்க முயற்சி செய்கிறது. ஆனால் பாதியிலேயே தன்னால் முடியவில்லை என்றும் பதில் தந்துவிடுகிறது, ஆனால் அது ஆங்கிலத்தில் சரியான விடையாக உள்ளது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

 

இதன் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், நண்பரின் சாட்டிலிருந்தே மெட்டா ஏஐயுடன் உரையாடலாம், அந்த உரையாடலை உங்கள் நண்பரும் காண முடியும், @Meta AI என்று தட்டச்சு செய்து குழுவிலும் மெட்டா ஏஐயுடன் உரையாடலாம்.

 

இவை தவிர,  படங்களைத் தேடவும், உருவாக்கவும்,  இன்ஸ்டா ரீல்ஸ் போன்றவற்றைத் தேடவும், நினைவூட்டவும், குறிப்பிட்ட பணிகளைக் குறித்த நேரத்தில் நினைவுபடுத்தவும் இது உங்களுக்கு உதவும். பிறந்தநாள், திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கான வாழ்த்து அட்டைகள்  உருவாக்கவும் வாட்ஸப் பயனாளர்களுக்கு வசதிகள் உண்டு.

அலாவுதீனின் அற்புத விளக்கிலிருந்து கிளம்பும் அழகிய பூதமான ஜீனியைப்போல நமது கைபேசியிலும் ஒரு ஜீனிதான் இந்த வாட்ஸ் அப் ஏ.ஐ!

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *