உங்களை செயல்பட வைக்கும் எழுத்துப்பயிற்சி (தொடர்)

உங்களை செயல்பட வைக்கும் எழுத்துப்பயிற்சி (தொடர்)

(இந்தத் தளம் தெரியுமா?– தொடரின் 4 ஆம் பகுதி)

 

தினமும் எழுதி பழகுவதற்கு நீங்கள் தயாரா? அதற்கு ஊக்கம் அளிக்கும் இணையதளத்தை தான் இப்போது பார்க்கப்போகிறோம். 750 வேர்ட்ஸ் (750 Words ) எனும் அந்த தளம், தினமும் காலையில் 750 வார்த்தைகள் எழுதி பழக வழிகாட்டுகிறது.

750 வார்த்தைகள் எழுதுவதாக குறிப்பிடப்பட்டிருப்பதால், இதில் ஏதோ ஒரு உத்தி இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆம், இது ஒரு உத்தி தான். தினமும் நீங்கள் நினைப்பதை எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் உத்தி.

இந்த உத்தியை பின்பற்ற நீங்கள் எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் எதை எழுதுகிறீர்கள், எப்படி எழுதுகிறீர்கள்? என்பது பற்றி எல்லாம் இந்த உத்தி கவலைப்படுவதில்லை. நீங்கள் நன்றாக எழுதுகிறீர்களா? இல்லையா? என்பதையும் இந்த உத்தி தீர்மானிப்பதில்லை.

தினமும் காலையில் எழுத வேண்டும் என்பதே இந்த உத்தி. தினமும் எழுதுவது என்றால், எவ்வளவு எழுதுவது என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கான பதில் தான் 750 வார்த்தைகள்- ஒரு பக்கத்திற்கு 250 வார்த்தைகள் என, மூன்று பக்க கணக்கு!

இப்படி தினமும் காலையில் 3 பக்கங்கள் எழுதுவது நல்ல பழக்கம், சிந்தனையை தெளிவாக்கும், செயலாக்கம் பெற வைக்கும் என இந்த உத்தியை ஜூலியா காமரூன் (Julia Cameron ) என்பவர், தி ஆர்டிஸ்ட் வே (The Artist’s Way ) எனும் சுயமுன்னேற்ற புத்தகத்தில், கலையார்வம் கொண்டவர்கள் படைப்பூக்க தடைகளை வெல்வதற்கான வழிகளில் ஒன்றாக, காலையில் எழுதும் பழக்கத்தை முன் வைத்தார்.

’ தினமும் காலையில் எழுந்ததும், மூன்று பக்கங்களுக்கு மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அப்படியே எழுதுவது” என்பதாக இந்த உத்தி அமைகிறது. காலை பக்கங்கள் என ஜூலியா இதை குறிப்பிடுகிறார். இதை செய்ய சரியான வழி என்று எதுவும் இல்லை என்பவர், இது கலையும் அல்ல எழுத்தும் அல்ல என்கிறார். உங்கள் மனதுக்குள் வரும் எதையும் எழுதுவது மட்டுமே இந்த செயல் என்கிறார்.

இது உங்கள் பார்வைக்கு மட்டும் தான். இதை வெளியிடவோ பதிப்பிக்கவோ போவதில்லை என்றும் சொல்கிறார்.

மூன்று பக்கம் மனதில் உள்ளதை எல்லாம் எழுதிய பிறகு வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம்.

இப்படி செய்வதன் மூலம், சிந்தனை தெளிவாகி, அன்றைய தின செயல்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட முடியும் என்கிறார். அதிகம் யோசிக்காமல் இந்த உத்தியை பின்பற்றினால் போதும், இது ஒரு பழக்கமாக, சிந்தனையை தெளிவாக்கு செயல்பட உதவும் என்பது அவர் அளிக்கும் நம்பிக்கை.

ஜூலியா இந்த புத்தகத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்பெல்லாம் நடத்தி வருகிறார்.

புத்தகத்தில் உள்ள மற்ற உத்திகளை விட, இந்த எழுத்து பயிற்சி உத்தி பயனளிப்பதாக கருதப்பட்டு பலரால் பின்பற்றப்படுகிறது. இந்த உத்தியால் பயன்பெற்றவர்களில் ஒருவரான, பஸ்டர் பெண்டன் (https://x.com/buster) தன்னைப்போலவே மற்றவர்களும் இந்த உத்தியால் ஊக்கம் பெறட்டும் என்பதற்காக, 750வேர்ட்ஸ் இணையதளத்தை உருவாக்கினார்.

எது பற்றியும் கவலை இல்லாமல், உரக்க சிந்திப்பதற்கும் எண்ணங்களை வடிகட்டி செயலூக்கம் பெறுவதற்கும் இந்த உத்தி கைகொடுக்கிறது என்கிறார்.

இதே பலனை நீங்களும் பெற வேண்டும் என விரும்பினால், இந்த இணையதளத்தில் உறுப்பினராகி, தினமும் காலையில் 750 வார்த்தைகள் எழுதலாம்.

இதை நீங்கள் கம்ப்யூட்டரிலோ, வலைப்பதிவிலோ எழுதலாம் தான். ஆனால், கம்ப்யூட்டரில் எழுதுவதை விட, இது எளிதானது என்கிறார். மேலும் இதை வெளியிடப்போவதில்லை என்பதால் வலைப்பதிவில் இருந்து மாறுபட்டது. அதே போல பேஸ்புக், இண்ஸ்டா நிலைத்தகவல்களில் இருந்தும் மாறுபட்டது. இது உங்களுக்காக நீங்களே எழுதிக்கொள்வது.

அதோடு, எழுத நினைத்து எழுதாமல் தள்ளிப்போடுவதை தவிர்க்க, இந்த இணையதளத்தை பயன்படுத்துவது ஒரு இலக்காக அமைந்து வழிகாட்டும்.

பெண்டன் பல ஆண்டுகளாக இந்த தளத்தை நடத்தி வருகிறார். 8 லட்சம் பேருக்கு மேல் இப்போது உறுப்பினராக இருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது கூடுதல் அம்சங்களையும் அறிமுகம் செய்துள்ளார். மாத துவக்கத்தில் உங்களுக்கான வெற்று பக்கம் அளிக்கப்பட்டு, தினமும் எழுதும் போது ஒரு பரிசுப்புள்ளி அளிக்கப்படுகிறது. உங்கள் எழுத்து பழக்கத்தை அலசி ஆராய்ந்து தகவல்களும் அளிக்கப்படுகிறது.

நீங்கள் எது குறித்து எல்லாம் அதிகம் கவலை கொண்டீர்கள், உற்சாகம் அடைந்தீர்கள் என்றெல்லாம் அலசி சொல்லப்படுகிறது. எல்லா தகவல்களும் தனியுரிமை மீறல் இல்லாமல் பாதுக்காக்கப்படுவதாக சொல்கிறார்.

துவக்கத்தில் இலவச சேவையாக இருந்த நிலை மாறி இப்போது கட்டணச்சேவையாக நடத்திக்கொண்டிருக்கிறார். நீங்களும் முயன்று பார்க்கலாம்.

கட்டணம் செலுத்த விருப்பம் இல்லை எனில், நீங்களே கூட தினமும் மூன்று பக்கம் எழுதலாம்.

இணையதள முகவரி: https://750words.com/

 

-சைபர் சிம்மன்.

(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர்.- https://cybersimman.substack.com/ )

(Image by OpenClipart-Vectors from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *