கேரளத்தின் வயநாடு பகுதியில் கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த வரலாறு காணாத மழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 240 பேர் காணாமல் போயுள்ளனர். அண்மைக்காலத்தில் நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான இயற்கைப் பேரிடர் இதுவே ஆகும். இரவில் தூங்கியவர்கள் வெறும் உயிரற்ற உடலாக ஆன கோலம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழ்நாடு முதலிய அண்டை மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள பல்வேறு நாட்டுத்தலைவர்கள் தங்களது வருத்தத்தையும் ஆதரவையும் கேரளத்துக்கு அளித்து வருகின்றனர். தமிழக அரசு இரண்டு இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தலைமையில் ஒரு குழுவை கேரளத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
ஒன்றிய அரசு, ராணுவம் மற்றும் இதர சீருடைப்பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களைக் கேரளத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இரவு பகலாக மீட்புப் பணிகள் நடந்தவண்ணம் உள்ளன. 1500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மகளிர் அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.
வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா வதேரா ஆகியோர் இன்று நிவாரண முகாம்களைப் பார்வையிட இருக்கின்றனர். பாதிப்புக்கு உள்ளான வயநாட்டுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்யுமாறு ஒன்றிய அரசிடம் ராகுல் காந்தி கோரியிருக்கிறார்.
இதற்கிடையில் ஒன்றிய அரசு, கேரளத்துக்குத் தனது உதவிகளை நிச்சயம் செய்வேன் என்று உறுதியளித்திருக்கிறது. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட கேரள மக்களவை உறுப்பினர்களும் மற்ற மாநில எம்.பி.க்களும் கேரளத்தின் இப்பேரிடரை ‘தேசிய பேரிடராக’ அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு இதுவரை அதுகுறித்து எவ்விதமான கருத்தையும் கூறாமல் இருக்கிறது.
வயநாடு சந்தித்துள்ள இயற்கைப் பேரிடரை தேசிய பேரிடராக அறிவிப்பதன்மூலம் மீட்புப்பணிகள், மறுவாழ்வுப் பணிகள், சுவடு கூட இல்லாமல் மறைந்த குடியிருப்புகள் மற்றும் வாழ்விடப்பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யமுடியும். குடும்ப உறுப்பினர்கள், சொத்துக்களை இழந்தோருக்கு மருத்துவ வசதிகள், வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, மன நல ஆலோசனை, எதிர்காலத்தில் இதுபோன்று பேரிடர்களை சமாளிக்க தகுந்த திட்டமிடல் என்று விரிவான அளவில் பணியாற்ற வாய்ப்பாக அமையும்.
நிலைமை இப்படியிருக்க, ஒன்றிய அரசு, இதனை ‘தேசிய பேரிடர்’ என்று அறிவிக்கத் தயங்க வேண்டியதில்லை. உடனடியாக அவ்வாறு அறிவித்து கேரளம் கேட்கும் அனைத்து விதமான நிதி மற்றும் உதவிகளை வழங்கவேண்டும்.
மனிதர்களின் வாழ்க்கையும் பாதுகாப்பும் கேள்விக்குறியான ஒரு இயற்கைச் சூழலில் அரசியல் விவாதங்களையும் கணக்குகளையும் அனைத்து தரப்பும் தவிர்த்துவிடவேண்டும். ‘இது கேரளத்தின்மீதான சாபம்’ என்கிற ரீதியில் இணையத்தில் வன்ம விஷம் கக்குவோரை மாநில, மத்திய அரசுத்துறைகள் கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
இயற்கைப் பேரிடர்களின்போது மனிதர்களாக ஒன்றிணைவோம்!
அதுஒன்றுதான் நமக்கு முன்பு இருக்கும் ஒரே தெரிவு!
(முகப்புப் படம்: நன்றி: தேசாபிமானி)