(இந்தத் தளம் தெரியுமா?– தொடரின் 5 ஆம் பகுதி)
இணையம் பலவற்றை எளிதாக்கி இருக்கிறது. குறிப்பாக இதற்கு முன் வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியம் என கருதப்பட்டவற்றை சிறு நிறுவனங்களுக்கும், தனிமனிதர்களுக்கும் சாத்தியமாக்கி இருக்கிறது. ஜாட்பார்ம் (https://www.jotform.com/ ) சேவை இதற்கு அழகான உதாரணம்.
நிறுவனம் சார்பில் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டுமா? அல்லது உங்கள் சேவை பற்றி வாடிக்கையாளர்கள் கருத்து அறிய வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட சேவை தொடர்பான கருத்துக்களை திரட்ட வேண்டுமா?
இப்படி, பயனாளிகள் அல்லது நுகர்வோரிடம் தொடர்பு கொள்ளும் தேவை கொண்ட எந்த செயலாக இருந்தாலும் சரி, அதற்கான படிவத்தை எளிதாக உருவாக்கி கொண்டு தகவல்களை சேகரிப்பதை ஜாட்பார்ம் எளிதாக்குகிறது.
ஜாட்பார்ம் அடிப்படையில், படிவ உருவாக்கும் சேவை. அதாவது, இணையதளங்களை பயனர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப தாங்களே வடிவமைத்துக்கொள்வது போல, ஜாட்பார்ம் வாயிலாக தேவையான படிவத்தை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். இதற்கு புரோகிராமிங் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. படிவம் உருவாக்குவதற்கான தேவை இருந்தால் போதும், ஜாட்பார்மில் அதற்கான தயார் நிலை வடிவமைப்பைப் பார்க்கலாம்.
இணைய படிவங்கள் என்றதும், பலருக்கு கூகுள் பார்ம்ஸ் (Google Forms) நினைவுக்கு வரலாம். எனினும், ஜாட்பார்ம்கூகுள் பார்ம்சுக்கு முன்பே துவங்கப்பட்ட சேவை என்பதோடு, மேம்பட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டது.
அதோடு இந்த துறையில் பல ஆண்டுகளாக இருப்பதாலும், தொடர்ந்து தனது சேவையை மேம்படுத்திக்கொண்டு வந்திருப்பதாலும், படிவங்கள் பயன்பாடு தொடர்பாக ஜாட்பார்மில் பார்க்க கூடிய பரந்துவிரிந்த தன்மை வியக்க வைக்க கூடியது.
ஜாட்பார்ம் சேவையை பயன்படுத்துவது எளிதானது. இதில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு படிவங்களை உருவாக்கத்துவங்கி விடலாம்.
பயனர்கள் தங்கள் தேவை என்னவோ அதற்கு ஏற்ற படிவத்தை தேர்வு செய்து கொள்ளலாம். தயார் நிலை வார்ப்புகள் இருப்பதால் அதில் தகவல்களை மட்டும் இடம்பெறச்செய்தால் போதுமானது. வாடிக்கையாளர்கள் கருத்து அறிவதில் துவங்கி, புதிய சேவைக்கான உறுப்பினர் சேர்க்கை வரை பலவிதமான பயன்பாட்டிற்கான படிவங்களை உருவாக்கி பகிரலாம்.
படிவங்களை உருவாக்கிய பின், அதை இணையதளம் அல்லது கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றில் ஒருங்கிணைக்கும் வசதியும் இருக்கிறது. பண பரிவர்த்தனைக்கான வசதியையும் ஒருங்கிணைக்கலாம். மொபைல் வடிவிலும் பயன்படுத்தலாம்.
இந்த தளத்தில் படிவங்களை வகைப்படுத்தப்பட்டிருக்கும் பட்டியலை பார்த்தால், படிவங்களை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அடிப்படை சேவை இலவசமானது என்றாலும், மேம்பட்ட வசதிகள் கொண்ட பல அடுக்கு கட்டணச்சேவையும் இருக்கிறது.
டைனிபார்ம் (tinyform), சர்வேமங்கி உள்ளிட்ட பல போட்டி சேவைகள் இருந்தாலும் ஜாட்பார்ம் தனது எளிமை மற்றும் பயன்பாட்டு தன்மையால் தனித்து நிற்பதை உணரலாம்.
இந்த சேவையின் மற்றொரு தனித்தன்மை 2006 ம் ஆண்டு அறிமுகமான பிறகு இந்த சேவை மேம்பட்டு வந்திருக்கும் விதம். பயனுள்ள புதிய அம்சங்கள் தொடர்ச்சியாக அறிமுகம் ஆகியுள்ளதோடு அவை அனைத்து தளத்தின் வலைப்பதிவு பகுதியில் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பயனர்கள் ஈடுபாடு கொள்வதற்கான பல்வேறு அம்சங்களும் உள்ளன. படிவங்கள் உருவாக்கும் திறன் தொடர்பான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு சான்றிதழும் அளிக்கப்படுகிறது.
துருக்கியைச் சேர்ந்த அடேகின் டாங்க் (Aytekin Tank) என்பவர் இந்த சேவையின் நிறுவனர். புத்தாயிரமாண்டு வாக்கில் இண்டெர்நெட்.காம் எனும் இணைய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் பணி நிமித்தமாக பல்வேறு படிவங்களை உருவாக்க வேண்டியிருந்தது. இதற்காக ஏதேனும் சேவை இருக்கிறதா என தேடிப்பார்த்த போது சர்வேமங்கியை தவிர வேறு எந்த பொருத்தமான தளமும் இல்லை என உணர்ந்தார். மேலும் சர்வே மங்கி, கருத்துக்கணிப்பு சார்ந்த சேவை என்பதால், எல்லா வகை படிவங்களையும் எளிதாக உருவாக்கும் ஒரு சேவை தேவை என உணர்ந்தார்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் தானே அத்தகைய சேவையை உருவாக்கினார். அது தான் ஜாட்பார்ம்.
இணைய வெற்றிக்கதைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த தளத்தை வெளி முதலீடு இல்லாமல் சுய நிதியில் மட்டுமே வளர்த்தெடுத்திருக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
-சைபர் சிம்மன்.
(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர்.- https://cybersimman.substack.com/ )
(Image by OpenClipart-Vectors from Pixabay)