கடந்த வாரத்தில் ஆனந்த விகடனின் இணைய இணைப்பிதழில் ஓவியம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிகளான இந்தியர்கள் கைவிலங்கு, சங்கிலியால் பிணைக்கபப்ட்டதை விமர்சிக்கும் வகையில் அது தீட்டப்பட்டிருந்தது. நாட்டைப் பிரதிநிதிப்படுத்துபவர் என்ற முறையில் பிரதமரின் கரங்கள் கட்டப்பட்டதாக ஓவியர் சித்தரித்திருந்தார்.
இதுபோன்ற ஓவியங்களும் கேலிச்சித்திரங்களும் இந்திய இதழியல் வரலாற்றில் புதிதன்று. காந்தியும் நேருவும் இந்திராகாந்தியும் வலதுசாரித் தலைவர்களும் பெரியாரும்கூட இவ்வாறு விமர்சிக்கப்பட்டிருக்கின்றனர். கிண்டலுக்கும் வசைக்கும்கூட உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அத்தகைய பெருந்தலைவர்கள் அவற்றையெல்லாம் புன்னகையுடன் கடந்து சென்றிருக்கின்றனர். தற்போதைய கேலிச்சித்திரத்தைக்கூட பா.ஜ.கவின் தேசிய தலைவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுதான் பக்குவம்.
ஆனால், விகடனின் இணையதளம் முடக்கப்பட்டபிறகுதான் விஷயத்தின் விபரீதம் பொதுமக்களுக்குப் புரிகிறது. வேறு கோணத்தில் இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தங்களுக்கு எவ்விதமான தகவலும் கொடுக்கப்படாமலேயே இது நடந்திருக்கிறது என்று விகடன் தரப்பு சொன்னது. ’இதுதான் காரணம்’ என்று தெரியாத நிலையில் என்ன மாதிரியான நிலைப்பாடு எடுப்பது என்று தெரியாமல் அரசியல் கட்சியினரும் பத்திரிகையுலகும் திகைத்தன.
எது எப்படி இருப்பினும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகள் எவ்விதத்தில் முடக்கப்பட்டாலும் அது சமூகத்துக்கான பிரச்சனையே என்ற கோணத்தில் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் இதில் கரம் கோர்த்தன. வி.சி.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார், ’உரிய விளக்கம் கோராமல் இவ்வாறு நடவடிக்கை எடுத்தது தவறு’ என்று மத்திய அமைச்சரவைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். சி.பி.எம். உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் களப்போராட்டத்திலும் இறங்கியிருக்கின்றன.
இந்த சூழலில் வேறொரு தளப் பெயரில் தற்காலிகமாக விகடன் செயல்படத்தொடங்கியிருக்கிறது. இன்று விகடன் வெளியிட்டிருக்கும் செய்தியிலும்கூட, ‘ஒருவேளை நாங்கள் வெளியிட்ட கார்ட்டூன் காரணமாக எங்கள் இணையதளம் ஒன்றிய அரசால் முடக்கப்பட்டிருந்தால் அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று கூறப்பட்டிருக்கிறது. ஆக, ஒன்றிய அரசு தானாக முன்வந்து இந்தப் பிரச்சனையில் என்ன நடந்தது என்று வெளிப்படையாகக் கூறாதவரை இந்தக் குழப்பமும் நீடிக்கவே செய்யும்.
இவ்வேளையில் ஒரு விஷயத்தை இங்கு பேசவேண்டும். ஒருவேளை ஒன்றிய அரசால் விகடன் தளம் முடக்கப்படவில்லை என்றும், ஏதோ தொழில்நுட்பக் கோளாறால்தான் விகடன் தளம் முடங்கியது என்றுகூட வைத்துக்கொள்வோம். அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தை நமது அரசியல்வாதிகள் எதிர்கொண்ட விதம் எவ்விதத்தில் சரி என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பாளர், உடனடியாக ஒன்றிய அமைச்சருக்குக் கடிதம் எழுதுகிறார். ஒரு சிலர், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் இதழியலுக்கு எதிரான வெறுப்பைக் கக்குகின்றனர். இந்தப் போக்கு கவலையளிப்பது மட்டுமல்ல, அபாயகரமானதும் ஆகும்.
அரசால் கவனிக்க முடியாத-சமூகத்தின் இண்டு இடுக்குகளில் இருக்கும் பிரச்சனைகளைக்கூட பொதுத்தளத்துக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்குபவர்கள் பத்திரிகையாளர்கள். உண்மையைச் சொன்னால், ஆட்சி அதிகாரத்தின் ஊதியம் வாங்காத பங்குதாரர்கள் அவர்கள். அத்தகைய ஊடகங்களின் கருத்துகளை நேர்மறையாக அணுகுவதே அரசியல்வாதிகளிடம் ஜனநாயகவாதிகள் எதிர்பார்க்கும் பண்பு ஆகும். தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கும் தங்களின் நல்ல செயல்பாடுகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைக் கண்டு உற்சாகமடைந்து மென்மேலும் அவற்றை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கும் ஊடகங்களே உற்ற துணை. அதற்கு மாறாக, புனித பிம்பங்களை மனதில் உருவாக்கிக்கொண்டு, அவற்றுக்கு எதிரானவர்களை அரசியல் பார்வையில் அணுகுவது சரியான புரிதலன்று.
இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலையாக இருந்தாலும் சரி, எம்.ஆர்.ராதா அவர்களுக்கு எதிராகப் போடப்பட்ட நாடகங்களுக்கான வாய்ப்பூட்டுச் சட்டமாக இருந்தாலும் சரி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த விரல் ரேகைச்சட்டம் உள்ளிட்ட தடுப்புச்சட்டங்களாக இருந்தாலும் சரி, ஒரு கேலிச்சித்திரத்துக்காக விகடனின் முன்னாள் ஆசிரியரைக் கைது செய்த அன்றைய அ.இ.அ.தி.மு.க நிர்வாகத்தின் நடவடிக்கையாக இருந்தாலும் சரி… எல்லாமே காலத்தின் துலாக்கோலில் தவறு என்று நிறுக்கப்பட்டவைதான்.
நாம் இன்று நவநாகரீக, அறிவுசார் உலகில் வாழ்கிறோம். எதிர்கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் காது கொடுக்கவில்லையென்றால் நட்டம் நமக்குத்தான். அந்தப் புரிதல் எல்லா அரசியல் கட்சியினருக்கும் வரட்டும். விகடன், கருத்துரிமைக்கான போரில் வெல்லட்டும்!
(Featured image designed by Freepik)