தலைப்பைப் பார்த்தவுடன் வியப்படைந்துவிட்டீர்களா? செய்தி உண்மைதான். நீங்கள் கர்நாடகத்தில் வாழ்ந்துவரும் மகளிரா? ஆம் என்றால் மகளிருக்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் நல்ல திட்டம் ஒன்றை அம்மாநில அரசு தனது மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்படுத்திவருகிறது.
உத்யோகினி (Udyogini) யோஜனா என்ற பெயரில் பெண் தொழில் முனைவோருக்கான நலம் மற்றும் வளர்ச்சியை கருதி மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒரு சிறப்பு திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின்மூலம் குறிப்பிட்ட தொழில்- அதாவது வேளாண் வணிகம், சில்லறை வணிகம் மற்றும் சிறு வணிகம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்கப்படுகிறது. கடன் வழங்குவதற்கு முன், தகுதியான பெண்களுக்கு மூன்று நாட்கள் தொழில் முனைவு பயிற்சி (EDP) அதாவது மின்னணு சாதனங்களை பயன்படுத்தி தரவு சேகரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.5 லட்சம் மட்டும் திரும்பி செலுத்தினால் போதும்.
இதேபோன்று, கடன் பெறும் பெண் சிறப்பு பிரிவினராகவோ அல்லது பொது பிரிவினராகவோ இருந்தால் ரூ. 3 லட்சம் கடனில் அதிகபட்சமாக ரூ.2.1 லட்சத்தை திரும்பி செலுத்தினால் போதும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி, விதவைகள் அல்லது வறுமைக் கோட்டுக்குள் கீழ் வாழ்வோர் போன்ற சிறப்புப் பிரிவுகளில் வரும் பெண்களுக்கு இதில் விலக்கு உண்டு.
விண்ணப்பிக்க விரும்பும் பெண்ணின் வயது 25 முதல் 65க்குள் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி .கடன் பெற விரும்பும் பெண்கள் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை முறையாக திரும்பி செலுத்தியவராக இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்பு சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ரேஷன் அட்டை, பி.பி.எல் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி பாஸ் புக் நகல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
இணைய வழி மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட வங்கிகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.