முதலீட்டாளர்கள் எதிர்பாராத வேளையில் இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ், 2222 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து அவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
இதனால் பதற்றமடைந்த முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைத்திரும்ப எடுத்துவிடலாமா என்று பரபரப்பாக யோசித்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் எடுக்கவும் செய்திருக்கக்கூடும். அதேபோல, ‘இதுதான் வாய்ப்பு’ என்று பங்குகளை வாங்கிக்குவிக்கும் ஆர்வமும் பலரிடமும் இருக்கிறது. ஆக, என்ன செய்யலாம்?
முதலில் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சூழலுக்கு என்ன காரணம் என்பதை மிக அடிப்படையாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஜப்பானில் வரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள உயர்வு, பங்குச்சந்தைகள் பலவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் தொடர்பான குறியீட்டெண் ஒரு எதிர்மறை சிந்தனையைத் தூண்டிவிட்டிருக்கிறது. இவை தவிர, இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றம், மத்திய கிழக்கு நாடுகளைச் சூழ்ந்திருக்கிறது.
இவ்வாறு கலவையான சூழல் ஏற்பட்டதை அடுத்தே அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது. இதற்கு அடுத்து முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம் என்று யோசிப்போம்.
*பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கு கூடுதல் யூனிட்கள் கிடைக்க வாய்ப்புண்டு. நல்ல லாபம் தரும் திட்டங்களில் நீங்கள் இருந்தால் கூடுதல் யூனிட்களை வாங்கிக்கொள்ளலாம்.
*முதன்முறையாகப் பங்கு வெளியிடும் நிறுவனங்களில் முதலீடு செய்ய நாம் ஆர்வம் காட்டுவோம் இல்லையா… அதுபோன்ற பங்குகளின் விலை, இரண்டாம் நிலை சந்தையில் (secondary market) குறைய வாய்ப்புண்டு. எனவே, விலை அதிகமான பங்குகளை ஐ.பி.ஓ நிலையில் வாங்க வேண்டியதில்லை. சந்தையைக் கவனித்து, குறிப்பிட்ட பங்கின் விலை குறைந்தபிறகு வாங்கிக்கொள்ளலாம்.
*இன்றைய சூழலைக் கருத்தில்கொண்டு பதற்றத்துடன் பங்குகளை விற்றுப் பணமாக்கவும் வேண்டியதில்லை. அவசர தேவைகளுக்காக அவ்வாறு செய்வது வேறு கதை. நட்டத்தைத் தவிர்க்கிறேன் பேர்வழி என்று பெரிய நட்டச் சுழலுக்குள் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
*நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல வாய்ப்புதான். 5 ஆண்டுகளுக்கு உங்களால் காத்திருக்க முடியும் என்றால், விலை குறைந்துள்ள நல்ல பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
*பங்குச்சந்தை தற்போது தன்னை சரிசெய்துகொள்ளும் நேரம் (correction phase) இது. எனவே, தினசரி வர்த்தகம், ஊக பேர வர்த்தகம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. (இன்று சந்தை நேர்மறையாகத் (ஆக.6) தொடங்கியிருப்பதையும் பாருங்கள்)
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடுகளை மேற்கொள்ளும் முன்பு தீர விசாரித்து அறிந்து, முதலீட்டு ஆலோசகர்களின் ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது).
-அருண்மொழி.