என் நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பங்குச்சந்தையின் தீமைகள்(!) குறித்து அவர் கடும் ஒவ்வாமையுடன் பேசிக்கொண்டிருந்தார். அது, முதலீட்டாளர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தோதான பள்ளத்தாக்கு என்பதுபோல் இருந்தது அவருடைய பேச்சு.
சரி, பங்குச்சந்தை என்றால் என்ன?; பங்கு என்றால் என்ன?; பங்கு வெளியீட்டின்போது என்ன நடக்கும்?; பங்காதாயம் என்றால் என்ன?; முன்னுரிமைப்பங்குகள் என்றால் என்ன?; தினசரி வர்த்தகம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைகள் என்னென்ன?; ஒரு நிறுவனத்தின் பங்குகளை எப்போது வாங்க/விற்க வேண்டும்?…என்றெல்லாம் கேட்டபோது எனக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
அவருக்கு மேலே சொன்ன எதுகுறித்தும் எதுவும் தெரியவில்லை. ‘பங்குச்சந்தை ஒரு சூதாட்டம்’ என்றுமட்டுமே தெரிந்துவைத்திருந்தார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இந்த அறிவை வைத்துக்கொண்டு இவர், இதனை உலகத்துக்கே பரப்பிக்கொண்டும் இருக்கிறார் என்பது வேதனையாக இருந்தது. இருப்பினும் அவர் நமது நண்பர் அல்லவா… பங்கு வெளியீடு என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது, அதில் எப்படி முதலீடு செய்வது, அதில் உள்ள இடர்கள் எத்தகையவை என்று தொடங்கி எனக்குத்தெரிந்த செய்திகளை அவருக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுத்தேன்.
”அட, இவ்வளவு இருக்கா இதுல?” என்றார்.
“இன்னும் நிறையவே இருக்கு” என்றேன்.
இவரைப்போன்ற நண்பர்கள் உங்களுக்கும் இருப்பார்கள். அவர்களுக்கு நம்மிடம் உள்ள அறிவு/அனுபவச்சரக்கைப் பகிரலாம். அவர்களுக்கும் பயன் கிடைக்கும். அவர்கள் அறிந்ததை நாமும் அறிந்துகொள்ளலாம்.
இன்னொரு வகையான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் முந்திரிக்கொட்டை மனிதர்கள்.
“பங்குச்சந்தைதானே…அது என்னன்னு பார்த்துட்டாப்போச்சு!” என்று எவ்வித அனுபவமோ, பயிற்சியோ இல்லாமல் களத்தில் இறங்குவார்கள். அடிப்படையே புரியாமல் பங்குகளை வாங்குவார்கள், விற்பார்கள். ஊக வணிகத்தில் ஈடுபடுவார்கள். லட்சங்களையும் கோடிகளையும் கனவில் காண்பார்கள். கடைசியில் கடும் பண முடைக்குள் மாட்டிக்கொண்டுவிடுவார்கள். இவர்களைத்தான் நாம் பாதுகாக்க வேண்டும்.
எப்படிப் பாதுகாப்பது? ஒருவர் பங்குச்சந்தை குறித்துத் தெரிந்துகொள்ள இணையத்திலும் நேரிலும் நிறைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் பங்குபெற்று தெளிவு பெறலாம். ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களின் அறிவுரைகளைப்பெறலாம். நேரடியாக அவர்களுடன் வர்த்தக நேரத்தி பயிற்சி பெறுவது சாலச்சிறந்தது. பங்குச்சந்தையின் பெயரால் நடக்கும் மோசடிகள் குறித்தும் தெரிந்துகொள்வது நல்லது.
பயிற்சியும் அனுபவமும் பெற்றபிறகு தாராளமாக பங்குச்சந்தையில் முதலீடோ, தினசரி வர்த்தகமோ செய்யலாம். தவறில்லை.
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. வணிகத்தில் ஈடுபடும் முன்பு வல்லுநர்களின் ஆலோசனைகளைப்பெற்றபிறகு கவனமாக செயல்பட்டு முடிவுகளை எடுக்கவும்).
-அருண்மொழி.
(Image designed by freepik)