புத்தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இரண்டுநாள் ‘ஸ்டார்ட் அப் திருவிழா’வை தமிழக அரசு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்றும் நாளையும் (செப்.28, 29) நடத்துகிறது.
திரைகடலோடியும் திரவியம் தேடியவன் தமிழன். அத்தகைய நெடிய வணிக வரலாறு கொண்டிருந்தாலும் மெல்ல மெல்ல சொந்தத்தொழில் என்ற பாதையிலிருந்து விலகி, சம்பளம் பெறும் வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். நூறு மாணவர்கள் படிக்கும் ஒரு வகுப்பில் ஒன்றிரண்டு பேரைத்தவிர மற்ற அனைவரும் வேலைக்குப் போகவே விரும்புகின்றனர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சொந்தத் தொழில் முனைவில் நாம் கொஞ்சம் பின் தங்கித்தான் இருக்கிறோம்.
இந்நிலையைக் களைய தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்ற இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியது. அதன் அங்கமாக டான்சிம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் நோக்கமே புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் இளைஞர்களை ஊக்குவிப்பதுதான். சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் புதுமையான யோசனையைக் கொண்ட இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்குவது, பயிற்சி கொடுப்பது, தொடக்க நிலை முதலீடு பெற உதவுவது என்று பல்வேறு அம்சங்களிலும் துணை நிற்பது இதன் சிறப்புக்கூறு ஆகும்.
மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற தொழில் முனைவோரும் புத்தொழில் முனைவோரின் கிரியாஊக்கியுமான திரு.சிவராஜா ராமநாதனை தமிழக அரசு இதற்காகத் தேர்ந்தெடுத்தது. நேட்டிவ் லீட் என்ற பெயரில் அவர் ஒரு தொழில் வழிகாட்டு நிறுவனத்தை நடத்திய பட்டறிவு கொண்டவர். தற்போது டான்சிம் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் இலக்கு இயக்குநராகவும் அவர் நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றிவருவதை தொழில் முனைவோர் அறிவர்.

இச்சூழலில் தொழில் டான்சிம் அமைப்பு, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு முதலிய அமைப்புகள் தனியார் பங்களிப்புடன் சேர்ந்து மதுரையில் புத்தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் திருவிழாவை ‘ஸ்டார்ட் அப் திருவிழா’ என்ற பெயரில் இன்று நடத்துகின்றன. தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்நடவடிக்கைக்குக்கு பெருமளவில் ஆதரவு கிடைத்திருக்கிறது. இணையவழியில் ‘பிரதிநிதி’, ‘உணவுத்தொழில் முனைவோர்’, ‘பார்வையாளர்கள்’ என்று மூன்று வகையான முன்பதிவுகளும் படுவேகத்தில் நிறைவுபெற்றிருக்கின்றன.
திரு.உதயநிதி ஸ்டாலின், பி.மூர்த்தி, தா.மோ. அன்பரசன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சி.கே.குமரவேல் முதலிய தொழில்துறையில் வெற்றிபெற்ற பிரபலங்கள், தனியார் வழிகாட்டி அமைப்புகள், டான்சிம் அமைப்பின் இலக்கு இயக்குநர் சிவராஜா ராமநாதன், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜே.கே.முத்து, நீயா நானா கோபிநாத், கரு.பழனியப்பன் போன்ற ஊடக பிரபலங்கள், சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்திக் காட்டிய திரு.ஆழி செந்தில்நாதன், ஊடகங்கள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் என்று பெரும் பட்டியலே தொழில்முனைவோரை சந்திக்க இருக்கிறது.
அரசுப்பிரதிநிதிகள், தொழில்துறை பிரதிநிதிகள், வெற்றிபெற்ற தொழில்முனைவோர் என்று பலரும் புத்தொழில் முனைவோருக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்க இருக்கின்றனர். தொழில் முனைவோருக்கு நிதி திரட்டல் ஏற்பாடும் நடைபெற இருக்கிறது. துணிகர முதலீட்டாளர்கள், ஏஞ்செல் நிறுவனங்களோடு தொழில்முனைவோர் சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதால் பலருக்கும் சுய தொழில் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இரண்டு நாள் மதிய உணவுடன் கூடிய அனுமதிக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, கோவையை அடுத்து மதுரையில் இதுபோன்ற முதலீட்டுத்திருவிழாக்கள் நடத்தப்படுவது தொழில் முனைவோர் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இனி ஊர்தோறும் இத்தகைய திருவிழாக்களை தமிழக அரசு நடத்தவேண்டும் என்பதே தொழில்முனைவோரின் எதிர்பார்ப்பு ஆகும்.
ஸ்டார்ட் அப் திருவிழாவின் நடப்பு நிகழ்வுகளை (updates) முனைவின் முகநூல் பக்கத்தில் (https://www.facebook.com/munnaivu/) காணலாம்.
-ம.விஜயலட்சுமி