ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பு, கடந்த 28, 29 ஆகிய நாட்களில் மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமான ஸ்டார்ட் அப் திருவிழாவை நடத்தியது. சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தமுக்கத்தையே திக்குமுக்காடச்செய்துவிட்டனர். தொழில் முனைவோர், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், துணிகர முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள் என்று எல்லோரையும் உள்ளடக்கிய கூட்டமாக அது அமைந்திருந்தது.
இரண்டு நாட்களும் ஒவ்வொரு தலைப்பில் ஒவ்வொரு அமர்வு மேடையை அலங்கரித்தது. மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழில் துறையினர் என்று அனைவருமே அறிவைப் பகிர்ந்துகொள்ளும் அற்புத மேடையாக அது அமைந்திருந்தது. முதலீட்டாளர்களை சந்திக்கும் நிகழ்வுக்கு மட்டும் முன்பதிவு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும். புத்தொழில் முனைவோரின் எண்ணிக்கை அந்த அளவுக்கு கணிசமாக இருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடு, உணவு, கலந்துரையாடல்கள், தொழில்முனைவோரின் அரங்குகள் அமைப்பு என்று எல்லாமே சிறப்பான வகையில் செய்யப்பட்டிருந்தன. மதுரையைப்போல ஒவ்வொரு மாவட்டந்தோறும் இத்தகைய நிகழ்வுகளைத் தமிழக அரசு நடத்தவேண்டும்.
இதனை முழுக்க ஏற்று நடத்திய ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பின் தலைமைச்செயல் அலுவலர் திரு.சிவராஜா ராமநாதனுக்கு சிறப்பான வாழ்த்துகளை முனைவு தெரிவித்துக்கொள்கிறது.
–ம.விஜயலட்சுமி.