ஒரு நிறுவனமோ வீடோ, அது சிறியதோ பெரியதோ…எதுவாக இருப்பினும் மின் கட்டணம் இல்லாமல் கட்டாயம் இயங்க இயலாது. மின்கட்டணத்தைக் கொஞ்சம் குறைப்பதன்மூலம் நாம் கணிசமான அளவுக்குப் பணத்தை மீதப்படுத்தமுடியும்.
மின் கட்டணம் எவ்வாறு அளவிடப்படுகிறது ?
நாம் பயன்படுத்தும் மின்சாரம் யூனிட் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் என்பது 1000வோல்ட் ஆகும். நாம் ஒரு 100 வோல்ட் மின் விளக்கை ஒரு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தினால் 100 வோல்ட் மின்சாரம் செலவிடப்படுகிறது. இதுவே அந்த மின் விளக்கை தொடர்ந்து 10 மணி நேரம் பயன்படுத்தினால் 1 யூனிட் மின்சாரம் செலவிடப்படுகிறது .

வீடுகள், குடிசைத் தொழில்களைப் பொறுத்தவரை 100 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தினால் மின் கட்டணம் கிடையாது. 101 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கு தனிப்பட்ட மின் கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் அதற்கு வேறு வகையில் மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. சரி, மின்சாரத்தை எப்படிக் குறைவாகப் பயன்படுத்தி மின் கட்டணத்தைக் குறைக்கலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
எப்படிப்பட்ட மின்விளக்குகளைத் தேர்வு செய்யலாம் ?
மின்விளக்குகளைப் பொறுத்தவரை சாதாரண மின் விளக்குகள் மற்றும் எல்இடி மின்விளக்குகள் என்று இரு வகைகள் உள்ளன. சாதாரண மின் விளக்குகள் 40, 60 மற்றும் 100 வோல்ட் என்ற எரி திறனில் கிடைக்கின்றன.

எல் இ டி பல்புகள் அதிகபட்சமாக 40 வாட்ஸ் மட்டுமே உள்ளன . எனவே எல்இடி மின்விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை குறைக்கலாம். சாதாரண விளக்குகளுடன் ஒப்பிடுகையில் எல்இடி மின் விளக்குகள் அதிக பிரகாசமாக ஒளிரும். பட்டை விளக்குகளிலும் எல்இடி மின்விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் சிக்கனமாக செலவழிக்கப்படும்
எவ்வகை மின்விசிறிகளைப் பயன்படுத்துவது சிறந்தது ?
காப்பர் ஒயர் மற்றும் அலுமினியம் ஒயர் என்ற இரு வகையான ஒயர்களைப் பயன்படுத்தி மின்விசிறிகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் காப்பர் ஒயர் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் ஆனால் தயாரிப்பு செலவு அதிகம்.
அதேவேளையில் அலுமினியம் ஒயர் அதிகம் மின்சாரத்தைச் செலவிடும் ஆனால் தயாரிப்பு செலவு குறைவு . எனவே நம் குறைந்த மின்சார செலவு உடைய காப்பர் ஒயர் பொருத்தப்பட்ட மின்விசிறியை வாங்கலாம். அல்லது பி எல் டி சி மோட்டார் பொருத்தப்பட்ட மின்விசிறியை வாங்கலாம். இவ்வகை மின்விசிறி காப்பர் வயர் படுத்தப்பட்ட மின்விசிறியை விட குறைவான மின்சாரத்தில் இயங்கும் தன்மை கொண்டது .
குளிரூட்டி பயன்பாட்டைக் குறைக்கலாமே!
அதிக குளிர் தன்மை இல்லாமல் குளிரூட்டியை மிதமான வெப்பநிலையில் பயன்படுத்துவது மின்சாரத்தைக் குறைக்கும் (எ.கா: 24 டிகிரியில் வைத்துப் பயன்படுத்தலாம்). குறைவான நட்சத்திர மதிப்பீடு பெற்ற குளிரூட்டிகள் அதிக மின்சாரத்தை செலவிடுகின்றன. அதிகமான நட்சத்திர மதிப்பீடு பெற்ற குளிர்சாதனங்களை தேர்வு செய்வதன் மூலம் குறைவான மின்சாரமே செலவாகும்.
இன்னொரு யோசனையும் இருக்கிறது. 16 டிகிரியில் குளிரூட்டியை வைத்து அறையின் வெப்பநிலை 16 டிகிரிக்கு வந்த பின்பு குளிரூட்டியை அணைத்துவிட்டு மின்விசிறியை இயக்குவதன்மூலம் மின் கட்டணத்தைக் குறைக்கலாம் .
சூரியனுக்கு மாறுங்க!
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு இணங்க வழக்கமான மின்சாரப் பயன்பாட்டிலிருந்து நாம் சூரிய ஆற்றலுக்கு மாறலாம். சூரிய ஆற்றலுக்கு மாறுவதன் மூலம் மின்வெட்டு போன்ற இடையூறுகளில் இருந்தும் விடுதலை பெறலாம். இன்றைய நவீன காலத்தில் மின்விசிறிகள் மற்றும் மின்விளக்குகள் போன்றவை மட்டும் அல்லாமல் பிரிண்டர் மற்றும் கணினி போன்றவற்றிற்கும் சூரிய ஆற்றலை சேமித்து வைத்து பயன்படுத்தும் அளவிற்கு வசதிகள் அமைந்துள்ளன.

நமது வீடு, அலுவலகங்களில் சூரியத்தகடுகளைப் பொருத்தி, அதன்மூலம் கிடைக்கும் மின்சாரம்போக மீதமுள்ள மின்சாரத்தை நம் மின்சார வாரியத்துக்கு விற்க முடியும். இதற்காக தனி கருவிகளைப் பொருத்துவர். நாம் கொடுத்த மின்சாரத்தைவிட, மின்வாரிய மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தியிருந்தால் நாம்தான் கடனீந்தோர் இல்லையா….
எனவே, தான் பெற்ற கடனைப் பணமாகத் தராமல் மின்சார வாரியம் தனது மாதாந்திர கட்டணத்தில் அதனை நேர் செய்யும். இதனால் என்ன ஆகும்? மூன்று ஆண்டுகளில் நீங்கள் மின் கட்டணம் செலுத்துவதிலிருந்தே விடுதலை பெற்றுவிடுவீர்கள்.
இயற்கையே பேராற்றல் அல்லவா!
புகழ் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று சென்னையில் தனது அலுவலகத்தை முற்றிலும் மாறுபட்ட முறையில் வடிவமைத்திருந்தது. இயற்கையோடு ஒன்றி வாழும் முறையை அங்கு பின்பற்றினார்கள். அந்நிறுவனத்தின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது தங்களது அலுவலகத்தில் பகல் பொழுதில் மின் விளக்கோ அல்லது மின்விசிறியோ பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறினார். எப்படி அது சாத்தியம்?
அவர்கள் அலுவலகத்தில் உள்ள ஜன்னல்கள் மிகப்பெரிய அளவிலும் மற்றும் சற்று உயரத்திலும் அமைத்திருப்பதாக கூறினார். இவ்வாறு அமைப்பதன் மூலம் அறையுள் நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் அதிகமாகக் கிடைத்தது. குளிரூட்டிகளுக்கு அவசியமே இல்லை. மாலையில்தான் விளக்குகளைப் பயன்படுத்துவார்களாம்.

அதேபோல டெஸ்க்டாப் கணிப்பொறியில் அதிக மின்சாரம் செலவாகுமாம். எனவே, மடிக்கணினியில் பணியாற்றும் முறையை அந்நிறுவனம் கொண்டு வந்திருந்தது. மேலும் அவர்களது அலுவலகச் சுவர்களுக்கு வெளிர் நிற பூச்சுகள் மற்றும் வெளிர் நிற திரைச் சீலைகளைப் பயன்படுத்தினர். இதனால் அலுவலக அறைகள் பிரகாசமாக இருக்கும்.
என்னவொரு சிந்தனை பாருங்கள்!
சிறு சிறு மாற்றங்கள் என்னென்ன செய்யலாம்?
பயன்பாட்டில் இல்லாத கணினி, பிரிண்டர், ஸ்பீக்கர் போன்றவற்றின் மின் இணைப்பைத் துண்டித்து வைக்கலாம் . இதன் மூலம் சிறிதளவு மின்சாரம் கடந்து கொண்டே இருப்பதைத் தவிர்க்க இயலும் . நிறுவனத்தை சுற்றி சிறிது மரங்களை நட்டு வைக்கலாம். இதனால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் .
மின்விசிறி, குளிரூட்டி செலவு மிச்சம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் செலவைக் குறைக்கலாம். அந்த வகையில் மோஷன் சென்சார் விளக்குகளை அலுவலகத்திலும் வீடுகளிலும் பயன்படுத்தலாம். இவ்வகை விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் அறைக்குள் செல்லும்பொழுது விளக்கு, தானாக ஒளிரும். பின் அறையை விட்டு வெளியே வந்தவுடன் மின்விளக்கு தானாக அணைந்து விடும்.
இவையெல்லம் எங்களுக்குத் தெரிந்த, நாங்கள் கண்ட யோசனைகள், அனுபவங்கள். உங்களிடம் ஏதேனும் யோசனை இருக்கிறதா? அனுபவம் இருக்கிறதா? இருந்தால் பகிருங்களேன்.
-ம.விஜயலட்சுமி.
(cover image: Image by Alexandra_Koch from Pixabay)