(இந்தத் தளம் தெரியுமா?– தொடரின் 2 ஆம் பகுதி)
செயல் திறன் என்பதும், உற்பத்தித் திறன் என்பதும் நிறுவனங்களுக்கு மட்டும் உரியது அல்ல, தனிநபர்களும் தங்கள் உற்பத்தி திறனில் கவனம் செலுத்தியாக வேண்டும்.
நிறுவனங்களுக்கு உற்பத்தி திறன் லாப நோக்கிலானது என்றால், தனிநபர்களுக்கு இது முன்னேற்றம் சார்ந்தது. கல்லூரி மாணவர்கள் துவங்கி, தொழில்முறையாக சாதிக்க நினைப்பவர்களும், படைப்பூக்கம் சார்ந்த செயலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்களது உற்பத்தித் திறனில் கவனம் செலுத்த வேண்டும்.
உற்பத்தித் திறன் என்பது இலக்குகளை நோக்கிச் செல்வதற்கான செயல்களை உரிய நேரத்தில் செய்து முடிப்பதுதான்.
அதாவது, செய்ய நினைக்கும் செயல்களைத் தள்ளிப்போடாமல் அல்லது மறந்துவிடாமல் செய்து முடிப்பது. இதற்கான வழியாக தான், ஆங்கிலத்தில் டு டூ லிஸ்ட் (to do list) எனப்படும், ’செய்ய வேண்டிய செயல்களின் பட்டியல்’ உத்தி முன்வைக்கப்படுகிறது. நாம் ’செயல் பட்டியல்கள்’ என வைத்துக்கொள்வோம்.
பட்டியல் இருக்கா?
அலுவலத்தில் இருந்து திரும்பி வரும் போது மறக்காமல் காய்கறி வாங்கி வர வேண்டும் என்பதில் துவங்கி, வீட்டிற்கு வந்ததும் நடை பயிற்சிக்கு செல்ல வேண்டும் என நினைப்பதுவரை எல்லாம் செயல் பட்டியல்களின்கீழ் வரும்.

செய்ய நினைத்ததை மறப்பதும், மறக்காமல் இருந்தால் தள்ளிப்போடுவதும் மனித இயல்பு என்பதால், செய்ய வேண்டிய செயல்களை சிறிய காகிதத்தில் எழுதி வைப்பது சிறந்த வழியாக இருக்கும்.
பாலை மறக்காதீங்க!
டிஜிட்டல் யுகத்தில் காகிதம் கூட வேண்டாம், அதைவிட சிறந்த முறையில் நம் செயல் பட்டியல்களை குறித்து வைக்க பிரத்யேக சேவைகள் இருக்கின்றன. இந்த வகை சேவைகளில் ஒன்றான ‘ரிமம்பர் த மில்க் (https://www.rememberthemilk.com/ ) சேவை பற்றி பார்க்கலாம்.
பரபரப்பான மனிதர்களுக்கான ஸ்மார்ட்டான செயல் பட்டியல் சேவை என வர்ணித்துக்கொள்ளும் ’ரிமம்பர் த மில்க்’ சேவை பற்றி பார்ப்பதற்கு முன், இதன்ன் சுவையான பின்னணிக் கதையைத் தெரிந்து கொள்ளலாம்.
எமிலி பாயட் மற்றும் உமர் கிலானி ஆகிய இரண்டு ஆஸ்திரேலியர்கள் 2004 ம் ஆண்டு இந்த சேவையை துவக்கினர். பழக்க வழக்கங்களை பொறுத்தவரை இருவருமே தினசரி வாழ்வில் ஒரு ஒழுங்கில்லாமல் தவித்திருக்கின்றனர். பால் வாங்க வேண்டும் என நினைப்பது உள்ளிட்ட பல செயல்களையும், வேலையையும் மறப்பது அவர்கள் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வழி தேடிக்கொண்டிருந்த நிலையில்தான் அந்த ஆண்டு அறிமுகமாகியிருந்த கூகுளின் ஜிமெயில் சேவை கவனத்தை ஈர்த்தது. அதன் பயனாக, செய்ய வேண்டிய வேலையை குறித்து வைத்தால், ஜிமெயில் மூலம் நினைவூட்டும் வகையில் ஒரு சேவையை உருவாக்க விரும்பினர்.
இதன் பயனாக, 2005 ல் ரிமம்பர் த மில்க் இணையதளத்தை அறிமுகம் செய்தனர். இதன் எளிதான இடைமுகத்தில், செயல்களை பட்டியலிட்டால், தேவையான நேரத்தில் அதற்கான நினைவூட்டலை இமெயில் பெறும் வகையில் இந்த சேவை அமைந்திருந்தது.
அதன் பிறகு, ஜிமெயில் போலவே இந்த சேவையும் பிரபலமாக வளர்ந்துள்ளது. தற்போது மேம்பட்ட பல அம்சங்களையும் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் எளிய இடைமுக (interface) அனுபவம் மாறவில்லை.
எப்படிப் பயன்படுத்தலாம்?
இந்தத் தளத்தில் உறுப்பினரான பிறகு, பயனாளிகள் தங்களுக்கான செயல் பட்டியல்களை உருவாக்கி கொள்ளலாம். செயல்களை உள்ளீடு செய்யும் போதே, அதை எப்போது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை குறிப்பிடலாம். செயல்களை துணைச் செயல்களாகவும் பிரித்துக்கொள்ளலாம். பின்னர், இமெயில், எஸ்.எம்.எஸ், மேசேஜிங் உள்ளிட்ட வடிவங்களில் நினைவூட்டலைப் பெறலாம்.
செயல்கள் நினைவூட்டப்படும் போது, தள்ளிபோடும் வசதியும் இருக்கிறது. ஆனால், எத்தனை முறை தள்ளிபோடப்பட்டது என்பதை சேர்த்து நினைவூட்டும். முடித்த செயலை மீண்டும் செய்யவும் நினைவூட்டல் அமைக்கலாம்.
செயல்களை அவற்றுடன் தொடர்புடைய சொற்களால் டேக் செய்யலாம். உதாரணமாக பணி சார்ந்தவை அல்லது மாதக் கட்டணம் தொடர்பானவை என அடையாளம் டேக் செய்து கொள்ளலாம். செயல்களை முன்னுரிமை அடிப்படையிலும் பிரித்து கொள்ளலாம். செயல்களை வண்ணங்களாலும் அடையாளம் காணலாம்.
குறித்து வைத்த செயல்களை அல்லது செய்து முடித்த செயல்களை எளிதாக தேடும் வசதியும் இருக்கிறது. மேலும், செயல்களுக்கான குறிப்போடு, இணைய கோப்பு இணைப்பு அல்லது புகைப்பட இணைப்பையும் சேர்த்துக்கொள்ளலாம். எக்ஸெல் கோப்பு போன்றவற்றை அணுக இது உதவும்.
தேவை எனில் செயல் பட்டியல்களை நண்பர்கள் அல்லது குழு உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொண்டு கூட்டாக செயல்படலாம். கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என எல்லா சாதனங்களிலும், ஒருங்கிணைக்கலாம்.
கவனச்சிதறலை உண்டாக்கும் ஸ்மார்ட் போன் செயலிகளுக்கு மத்தியில், உங்கள் கவனத்தை குவித்து செயல்வீரராக மாற இந்த சேவை உதவும்.
இதே பிரிவில், டுடூயிஸ்ட் (https://todoist.com/), எனி.டூ (https://www.any.do/ ) உள்ளிட்ட சேவைகளும் இருக்கின்றன. இன்னும் நீளமான பட்டியலும் இருக்கிறது.
(வளரும்)
-சைபர் சிம்மன்.
(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர்.- https://cybersimman.substack.com/ )