நம் கையில் மிச்சமாகியிருக்கும் தொகையை எங்காவது சேமிக்கவோ முதலீடு செய்யவோ விரும்பினால் என்ன செய்வோம்? வங்கியில் போட்டு வைப்போம். சீட்டு கட்டுவோம். கூடுதல் பாதுகாப்பை விரும்புவோர் அஞ்சலகத்தில் உள்ள பல்வேறு திட்டங்களின்மூலம் சேமிக்கத் தொடங்குவார்கள்.
நம் நாட்டின் மிகப்பழைய சேமிப்பு முறை என்றால் அது, அஞ்சலக சேமிப்பு முறைதான். அஞ்சல்துறை, ஒன்றிய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுவதால் நமது சேமிப்பு/முதலீட்டுக்கு முழுப்பாதுகாப்பு இருக்கிறது என்பதால் பலரின் தெரிவாக அஞ்சலங்கள் இருக்கின்றன. அஞ்சலகங்களில் உள்ள திட்டங்களில் 4 திட்டங்கள் குறித்து மட்டும் இங்கு கொஞ்சம் பார்ப்போம்.
*சேமிப்புக்கணக்கு: வங்கிகளைப்போலவே அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குத்திட்டம் (Savings Bank Account) உண்டு. இதில் தொடக்கத்தில் ரூ.500 ஐக்கொண்டு கணக்கு தொடங்கவேண்டும். பின்னர் எவ்வளவு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் போடலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. ஆண்டுக்கு 4% வட்டி இதில் கிடைக்கும்.
*தொடர் வைப்புக் கணக்கு (Recurring Depostit): மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க விரும்புவோர் இதனைத் தேர்ந்தெடுக்கலாம். தொடக்கத்தில் ரூ.100 ஐ செலுத்தி கணக்கு தொடங்கவேண்டும். பின்னர் ரூ.10ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். ஒரு முறை எவ்வளவு செலுத்துகிறீர்களோ, அதே தொகையைத்தான் அடுத்தமாதமும் செலுத்தவேண்டும். மொத்தம் 3 ஆண்டுகளில் கணக்கு முதிர்வடையும். ஆண்டுக்கு 6.7% வட்டி இதில் கிடைக்கும்.
*தேசிய குறித்தகால வைப்புக் கணக்கு (National Savings Time Deposit): இத்திட்டத்தில் தொடக்கத்தில் ரூ.1000 இட வேண்டும். பின்னர் ரூ.100ன் மடங்குகளாக முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. ஓராண்டு முதலீட்டுக்கு 6.7% வட்டி உண்டு. 2 ஆண்டுகள் என்றால் 7% வட்டியும் 3 ஆண்டுகள் என்றால் 7.1%ம், 5 ஆண்டுகள் என்றால் 7.5% வட்டியும் கிடைக்கும்.
*தேசிய சேமிப்பு-மாதாந்திர வருவாய்த் திட்டம் (National Savings Monthly Income Scheme): இதில் தொடக்க கட்ட முதலீடு ரூ.1000. அதன்பின்னர் ரூ.1000ன் மடங்குகளாக முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு ரூ.9 லட்சம். முதலீட்டுத்தொகைக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படும். இத்தொகையை வகுத்து, மாதாந்திர வருவாயாகத் தந்துவிடுவார்கள்.
(அக்.30: உலக சிக்கன நாள்)
-ம.விஜயலட்சுமி.