ஆங்கிலம் கற்றுக்கொள்ள அட்டகாச இணைய தளம்!

ஆங்கிலம் கற்றுக்கொள்ள அட்டகாச இணைய தளம்!

(இந்தத் தளம் தெரியுமா?– தொடரின் 8 ஆம் பகுதி)

 

நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினால் எண்ணற்ற இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றில் எந்த தளத்தை தேர்வு செய்வது எனும் குழப்பம் இருந்தால் ஆண்டிமூன் (https://www.antimoon.com/) ஆங்கில வழிகாட்டி தளத்தை நீங்கள் நாடலாம்.

ஆண்டிமூன் தளம் வழக்கமான ஆங்கில மொழி கற்றல் தளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இந்த தளத்தில் ஆங்கில வகுப்புகளோ, இலக்கண பாடங்களோ கிடையாது. மாறாக, இந்த தளம் ஆங்கில மொழியை கற்றுக்கொள்வதற்கான ’சரி’யான வழி காட்டுகிறது. அந்த வழியில் பயணித்தால் ஆங்கிலம் கற்று தேர்ச்சி பெறலாம்.

ஒருவிதத்தில் வழக்கமான ஆங்கில கற்றல் தளங்களுக்கு எதிரான தளமாகவும் இதை கருதலாம். வழக்கமான வழிகளில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது சாத்தியம் இல்லை என்றும் இந்த தளம் கருதுகிறது. இதையே, ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினால், வழக்கமான வழிகளை நாடாமல், ’கற்றலை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்கிறது.

வழக்கமான ஆங்கில கற்றல் வழிகளை எல்லாம் இப்படி ஓரேடியாக புறந்தள்ளிவிட முடியுமா? என்பதை விட்டுவிடலாம். இந்த முறைகளில் இருக்கும் சிக்கல்களையும், வரிசையாக இலக்கண பாடங்களை படித்து விதிகளை மனப்பாடம் செய்து, அவை கைகொடுக்காமல் பலரும் பாதியில் ஆங்கிலம் கற்பதை கைவிடும் நிலை இருப்பதை மட்டும் கருத்தில் கொண்டால், அதற்கான மாற்று வழியை இந்த தளம் முன்வைப்பதை புரிந்து கொள்ளலாம்.

அப்படி என்ன வழி என்றால், ஆறு அம்சங்களை அடிப்படையாக கொண்டதாக அமைகிறது. முதல் அம்சம், ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஊக்கம் தேவை.

இதற்காக, ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் நபராக மாறுங்கள் என்பதே முதல் வழியாக அமைகிறது. இதற்கான காரணங்கள் தனியே அழகாக விளக்கப்பட்டுள்ளன. தினமும் ஒரு மணி நேரம் ஆங்கில புத்தகம் வாசிப்பது, அகராதியில் ஆங்கில வார்த்தைகள் பொருளை அலசுவது உள்ளிட்ட பழக்கங்கள் கொண்டதாக உங்கள் வாழ்க்கையை சற்று மாற்றிக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது நல்லதொரு ஆங்கில அகராதி வாங்கி அதை எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்பது.

மூன்றாவது வழி, தவறுகள் செய்யாமல் கற்பது. இதுவே மிகவும் கடினமானது. பொதுவாக புதிதாக மொழி கற்பவர்களிடம் தவறு செய்தால் பரவாயில்லை பழங்குகள் என்று சொல்லப்படுவதற்கு மாறாக, தவறுகளை பொருட்படுத்தவில்லை எனில் தவறாகவே கற்றுக்கொள்வீர்கள் என எச்சரிப்பதாக இந்த வழி அமைகிறது.

நான்காவது வழி எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. வார்த்தை உச்சரிப்பில் கவனம் செலுத்துங்கள் என்பது. இது எளிதாக தோன்றாலும், ஆங்கில சொற்கள் உச்சரிப்பு தொடர்பான நுண்ணக்கமான விளக்கங்கள் லேசாக தலை சுற்ற வைக்கலாம். ஆனால், இந்த குறிப்புகள் ஆங்கில அகராதியை பயன்படுத்துவது தொடர்பாகவும் வழிகாட்டுகிறது. உதாரணம், ஆங்கில அகராதி விளக்கத்தில், ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளுடன், அதன் ஒலிக்குறிப்பை உணர்த்தும் குறியீடு சுட்டிக்காட்டப்பட்டிருப்பது.

ஐந்தாவது வழி, ஆங்கிலத்தை அதிகமாக உள்வாங்கி கொள்ளச்சொல்கிறது. நிறைய படிப்பது அல்லது கேட்பதாக இது அமைகிறது.

ஆறாவது வழி ஆங்கில கற்றலுக்கான பிரத்யேக மென்பொருள் தொடர்பானது.

இவைத்தவிர, ஆண்டிமூன் உங்களுக்கு ஏற்றதா? எனும் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

இலக்கண வகுப்புகள், பயிற்சி திட்டங்கள் போன்றவை எல்லாம் இல்லாமல் இந்த தளம் அமைந்திருப்பது ஆங்கிலம் கற்க முயற்சிப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கலாம். இந்த முறையை விளக்கும் எளிய கட்டுரைகள் மேலும் உற்சாகம் அளிக்கலாம்.

போலந்து நாட்டைச் சேர்ந்த டாமஸ் ஸினால்ஸ்கி என்பவர் (Tomasz P. Szynalski,) தான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பயன்படுத்திய வழிகளை கொண்டு இந்த முறையை உருவாக்கியிருக்கிறார். மைக்கேல் எனும் அவரது நண்பரும் இதில் கூட்டு.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் அந்நிய மொழியான ஆங்கிலத்தை கற்றுக்கொண்ட சொந்த அனுபவத்தில் உருவான இந்த முறை, பாரம்பரிய ஆங்கில கற்றலை விட பலருக்கு ஏற்றதாக இருக்கலாம்.

இந்த தளத்தின் முக்கிய அம்சம், இதில் உள்ள எந்த சொல்லை தேர்வு செய்தாலும் அதற்கான அகராதி விளக்கத்தை தனியே பார்க்கலாம் மற்றும், பிழையில்லாத ஆங்கில தரவுகள் கொண்ட தளங்களில் தேடுவதற்கான தூய ஆங்கில தேடியந்திரம். அதோடு, ஆங்கில மொழி கற்றல் தொடர்பான பழைய விவாத அரங்கில் பகிரப்பட்ட தகவல்களையும் அணுகலாம்.

நீங்களும் முயன்று பாருங்கள்.ஆல் தி பெஸ்ட்!

சைபர் சிம்மன்.

(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர். https://cybersimman.substack.com/ ) 

(pic courtesy: Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *