கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கூடியிருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுத்தள்ளினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் இந்த மனிதத் தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டித்தன. ஐ.நா சபையும் இந்த மிருகத்தனமான தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
பயங்கரவாதிகளின் தாக்குதலிருந்து சுற்றுலாப்பயணிகளை உள்ளூர் காஷ்மீரவாசிகள் காப்பாற்றியிருக்கின்றனர். ஒரு பெண் பயணியைக் காப்பதற்காக, பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கிய இஸ்லாமிய உள்ளூர்வாசி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காயமடைந்த குழந்தைகளை உள்ளூர் மக்கள் சிகிச்சைக்கு முதுகில் ஏந்திச்சென்று காப்பாற்றியிருக்கின்றன. மனிதத்தன்மை மிகுந்த இச்செயல்பாடுகளை சுற்றுலாப்பயணிகளும் சமூகத்தில் அமைதியை விரும்பும் மக்களும் ஆதரித்து வாழ்த்துகின்றனர். இது, சிலருக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.
இந்த தாக்குதலை ஒரு குறிப்பிட்ட மதத்தின்மீதான வெறுப்புணர்வைப் பரப்ப ஒரு சாரார் கடுமையாக முயன்று வருகின்றனர். குறிப்பிட்ட மதத்தவர்கள்தான் தீவிரவாதிகள் என்று தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இதனை சமூக நல்லிணக்கத்தை விரும்புவோர் கண்டிக்கவும் செய்கின்றனர்.
இது ஒருபுறமென்றால், காஷ்மீரத்தாக்குதலுக்கு இந்தியாவின் எதிர்வினை எப்படி இருக்கப்போகிறது என்று உலகமே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் போரிட வேண்டும் என்று ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பலரும் பேசக் காண்கிறோம். ஒரு போரின் விளைவு என்னவென்று தெரியாமல் பேசும் பேச்சு அது. போர் நடக்கும் எந்த நாட்டிலும் அமைதி, பொருளாதாரம் ஆகியவை நீடிக்க இயலாது. சமூகத்திலும் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. குறிப்பாக, போர்கள் எப்போதும் குழந்தைகள், முதியோர், பெண்கள் ஆகியோருக்கு எதிரானதாகவே இருக்கின்றன. புதிய மாற்றுத்திறனாளிகளை உருவாக்குகின்றன. எனவே, மனித குலத்துக்கு விரோதமான போர் எங்கும் நடக்கவே கூடாது என்பதே அமைதியை நாடுவோரின் நிலைபாடாக இருக்க வேண்டும்.
நதிநீர் ஒப்பந்த ரத்து, சிம்லா ஒப்பந்த ரத்து, இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள முறையே மற்ற நாட்டு சுற்றுலாப்பயணிகளை நாடு கடத்துவது ஆகிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதன் உச்ச கட்டமாக பாகிஸ்தான் நாட்டு நோயாளிகள்கூட நாட்டைவிட்டு வெளியேறப் பணிக்கப்படுவதாக செய்திகள் வந்திருக்கின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். சிபிஎம் கட்சி இதனை வன்மையாகக் கண்டித்துள்ளது.
உள்நாட்டுப்பாதுகாப்பு, எல்லைப்பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாப்பு, வெளியுறவுத்துறைகளே நிர்வகிக்கின்றன. ஒரு வன் தாக்குதலுக்கு எப்படி பதில் தாக்குதல் தருவது என்பதை அவர்கள் முடிவு செய்யலாம். மாறாக, சிவில் சமூகம் பாதிக்கும் வகையில் இரு நாடுகளுமே நடவடிக்கை எடுக்கக்கூடாது. காந்தியின் தேசம் இது. இந்தியாவிலிருந்து நாம் உலகுக்கு அனுப்பும் செய்தி, ‘அன்பு, சமாதானம்’ என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
கெட்ட போரிடும் உலகம் நமக்கு வேண்டாம். அன்பான சமூகம்தான் வேண்டும்…