இதோ, 2025 புத்தாண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு என்றால் உறுதிமொழி இல்லாமலா?
ஒவ்வோர் ஆண்டும் நாம் என்ன செய்கிறோம்? கடந்த காலங்களில் செய்த தவறுகளை வருமாண்டில் செய்யாமல் இருப்பது, புதிய திட்டங்களுக்கு ஏற்ப நாம் நம் நேர ஒழுங்குகளை வடிவமைத்துக்கொள்வது, புதிய இலக்குகளை நிர்ணயம் செய்துகொள்வது (!) இருக்கிறோம் என்பதும் மதிப்பீட்டின் ஒரு அங்கம்தாம்.
சரி, இந்த ஆண்டுக்கான உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ள சில யோசனைகள் உங்களுக்காக…
*உங்கள் அலுவலக மேசையோ, வீட்டிலுள்ள அலுவலக அறையோ, தொழிற்கூடமோ-எதுவாக இருப்பினும் அது சீர்குலைந்து கிடந்தால், நிதானமாக அதனை ஒழுங்கு செய்யுங்கள். அலுவலக மேசையை குப்பைகள், கோப்புகள் இல்லாத வண்ணம் காலியாக வையுங்கள். பழையன கழிதல் என்பது புத்தாண்டில் முக்கியமான உறுதிமொழியாக இருக்கட்டும்.
*சொந்தத்தொழில் தொடங்குவது குறித்து நீண்ட நாட்களாக யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் யோசித்துக்கொண்டிருப்பீர்கள்? ஒரு கட்டத்தில் களத்தில் குதித்துவிடுங்கள். அதற்கு முன்பாக தெளிவாகத்திட்டமிட்டுக்கொள்ளுங்கள். ஓராண்டுக்கான குடும்ப செலவுக்கான சேமிப்பு கையில் இருந்தால் ஒழிய, செய்துவரும் வேலையை விட்டுவிடாதீர்கள்.
*’இரும்பு உடல் எனக்கு!’ என்று பெருமிதம் கொள்பவரா நீங்கள்? ரொம்ப நல்லது. எப்படிப்பட்ட உடல் நலம் கொண்டோரையும் ஒரு கிருமி பதம் பார்த்துவிடும். ஒரு சிறிய விபத்து நம்மை முடக்கிவிடும். எனவே, போதுமான அளவுக்கு காப்பீடு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் உடனடியாக ஒரு டெர்ம் பாலிசி, குடும்பத்துக்கான மருத்துவக்காப்பீடு (ஃப்ளோட்டர் பாலிசி) ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளலாம்.
*வீட்டுக்கடன் தவணைகளைச் செலுத்திவருபவரா நீங்கள்? 15-20 ஆண்டுகள் மொத்த தவணை செலுத்த இருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் கடனைவிட இன்னொரு மடங்கு தொகையை வட்டியாக செலுத்த இருக்கிறீர்கள் என்று பொருள். வீட்டுக்கடனின் அடிப்படையே அப்படித்தான். ஆனால், இந்த சுமையிலிருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. எப்போதெல்லாம் உங்களிடம் கொஞ்சம் பணம் சேர்கிறதோ, அப்போதெல்லாம் கடன் கணக்கில் அதனைச் செலுத்திவிடுங்கள்.
பொதுவாக 4 தவணைகளுக்கு இணையான தொகைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் அதிகரிக்கும் தொகைக்கு சிறிய கட்டனம் வசூலிக்கப்படும். ஒருமுறை 4 தவணைகளுக்கு இணையான தொகையை செலுத்திவிட்டால் சுமார் ஓராண்டு உங்கள் கடன் தவணைக்காலம் கழிக்கப்பட்டுவிடும். அதற்கு பதிலாக, நீங்கள் மாதத்தவணையைக் குறைத்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டால், அதனையும் செய்து தருகின்றனர். ஆனால், சில ஆயிரங்கள் மட்டுமே குறையும். அது லாபமல்ல. உங்கள் முதலீட்டு ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்து இது தொடர்பான முடிவுகளை எடுக்கலாமே!
*அடுத்த 6 மாதங்களுக்கான திட்டம், ஓராண்டுக்கான திட்டம், அடுத்த 3 ஆண்டுகள், 5 ஆண்டுகளுக்கான திட்டம், 10 ஆண்டுகளுக்கான திட்டம் என்று திட்டமிடலை மேற்கொள்ளலாம். இது குடும்பம் தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமல்ல, சொந்த தொழில் இலக்குகளுக்கும் பொருந்தும்.
*இப்புதிய ஆண்டில் உங்கள் தகுதிகள், திறன்களை வளர்த்துக்கொள்ள புதிதாக எதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். இணைய வழியில் பல்வேறு வகுப்புகள் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் கிடைக்கின்றன. அவற்றில் சேரலாம். நேரம் கிடைத்தால் நேரடி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். அரசுத்துறைகளும் பல்வேறு திறன்சார் பயிற்சிகளை அளிக்கின்றன.
இவையெல்லாம் உங்கள் சிந்தனையைத் தூண்டுவதற்காகத்தான். இவைபோல உங்களுக்கு ஏதாவது உறுதிமொழி யோசனைகள் இருந்தால் நீங்களும் பகிரலாம்.
-கா.சு.துரையரசு.