இன்றைய தொழில்முனைவோர் பலரிடமும் அபாரமான தொழில் யோசனைகள் இருக்கின்றன. பிரச்சனைகள் என்னவென்று அலசி ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்கும் வழிகளையும் கண்டறிந்து பிரமிக்க வைக்கின்றனர். அதே நேரத்தில் கணிசமானோருக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அதுதான், தொடர்புகளை உருவாக்கி பலப்படுத்திக்கொள்ளும் (networking) திறன் இல்லாதது. “நாம பாட்டுக்கு நம்ம வேலை உண்டு நாம உண்டுன்னு இருக்கோம்….யார் வம்பு தும்புக்கும் போறதில்லை” என்று அச்சத்தில் பிதற்றுவாரில்லையா ஒரு நகைச்சுவைக்காட்சியில்… அதேபோன்ற மனோபாவத்தை இவர்களின் மனப்பாங்குடன் ஒப்பிடலாம்.
‘நாம் உண்டு வேலை உண்டு’ என்று இருந்தால் உற்பத்தி அதிகரிக்கலாம்… தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆனால், வளர்ச்சி? அது நிகழ வேண்டுமானால் சமூகத்தோடு ஒன்றி வாழவேண்டுமே தவிர ஆமைப்போல ஓட்டுக்குள் ஒளிந்துகொள்ளக்கூடாது.
இதனைத்தான் நமது முன்னோர், ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்றும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்றும் சொல்லி வைத்தனர். நெட்வொர்க்கிங் எனப்படும் சமூகத்தொடர்புக்கலையைத் தொழில் முனைவோர் அனைவரும் கற்றுக்கொண்டு தேறவேண்டும். அதனால் விளையும் பயன்கள் பல. அவற்றுள் சில….
*தொழில் சார்ந்த நட்பு வட்டத்தைப் பெருக்குவதன்மூலமான தேவையற்ற நட்பு வட்டம் சுருங்கிவிடும். ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், ஒவ்வொரு நேரடி சந்திப்பும் நம்மையும் நமது தொழிலையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்லும். அதாவது, பின்னோக்கிப் பார்க்கவே நேரம் இல்லாத அளவுக்கு நாம் சுறுசுறுப்பாக இயங்குவொம்.
*நெட்வொர்க்கிங் என்பது வேறொன்றுமில்லை. உங்கள் தொழில் சார்ந்த புதிய நட்புகளை உருவாக்கிக்கொள்வது, பழைய நட்பைப் புதுப்பிப்பது, அதனைப்பேணுவது, உங்களால் மற்றவர்களுக்கு மற்றவர்களால் உங்களுக்கும் பயன் கிடைக்கும் வண்ணம் திறந்த மனதுடன் நடந்துகொள்வது ஆகியவையே ஆகும்.
*ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதுதான் நெட்வொர்க்கிங்கின் அடிப்படை. சுயநலமாக மனிதர்களைப் பழகி அவர்களின் திறன்களையோ, வளங்களையோ உறிஞ்சிக்கொள்வதன்று. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டால், தொழில் சார் நட்பு நீண்டநாட்கள் வாழும்.
*உங்கள் தொழிலில் ஏற்கனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் தலைவர்களுடன் உங்களுக்கு அறிமுகம் ஏற்படும்போது அவர்களின் பட்டறிவு, நமக்குப் பகிரப்படும். நமது திறன்கள், சிக்கல்கள் குறித்து அவர்களிடம் பேசித்தெளிவு பெறலாம். பல்ளி, கல்லூரியில் படிக்காத வாழ்க்கைப் பாடத்தை அனுபவசாலிகள் நமக்கு சொல்லித் தருவார்கள்.
*ஒரே துறைசார்ந்த பலர் சேரும்போது, அது ஒரு ‘தொழில் துறையின் குரல்’ ஆகிறது. உங்கள் துறை சார்ந்த கோரிக்கைகளை அரசிடம் வைக்க இது உதவும்.
*செலவுக்கட்டுப்பாடு, அடக்க விலையைக் குறைப்பது, லாபத்தை அதிகரிப்பது ஆகியவற்றை தொழில் ரீதியிலான நண்பர்கள்மூலம் கற்றுக்கொள்ளமுடியும். மூலப்பொருட்கள் திரட்டுவது, புதிய சந்தையைக் கண்டறிவது ஆகியவையும் இதன்மூலம் சாத்தியப்படும்.
*நெட்வொர்க்கிங் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் நண்பர்கள் உங்கள் தொழிலில் முதலீடு செய்யும் முதலீட்டாளராக ஆவதற்கும் வாய்ப்பு உண்டே! அதேபோல, பொருத்தமான கூட்டாளிகள் கிடைத்தால் அது கூட்டுத்தொழிலுக்கு இன்னும் நல்லதாயிற்றே..
*உங்கள் தொழிலாளிகள் என்ன நினைக்கிறார்கள் என்று உங்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்காது. ஆனால், நெட்வொர்க்கிங் மூலம் கிடைக்கும் நண்பர்கள் உங்கள் முகத்துக்கு நேராக விமர்சனம் செய்வர். இது, உங்களது தவறுகளைத்திருத்திக்கொள்ளவும் உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
*நல்ல, திறமையான ஊழியர்களைக் கண்டறிய நெட்வொர்க்கிங் உதவும். மற்ற தொழில் நிறுவனர்களும் இதில் பங்களிப்பர்.
*’நாம் தனியாக இல்லை…நமக்கு ஆதரவளிக்க நிறையபேர் இருக்கின்றனர்’ என்ற என்ணம் தொழில் முனைவோரின் தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது. அது, தொழிலின் வளர்ச்சியையும் சேர்த்தே அதிகரிக்கிறது.
-ம.விஜயலட்சுமி.
(Image by Gordon Johnson from Pixabay_