இன்றைய உலகில், ஒவ்வொரு நாளும் நாம் இணையத் தாக்குதல் குறித்த பல பயமுறுத்தும் செய்திகளைக் கேட்கிறோம். தனி மனிதராக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனங்களாக இருந்தலும் சரி…. ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது இன்றைய கால கட்டத்தில் முக்கியமானது. ஏனென்றால், இணையம் இல்லாமல் இன்றைய உலகம் இல்லை.
கணிப்பொறி பாதுகாப்புக்காக ஒரு நாளையே (நவ.30) கடைபிடிக்கிறார்கள் அமெரிக்காவில். அதாவது ‘தேசிய கணிப்பொறி பாதுகாப்பு நாள்’. இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட உலக நாடுகள் பலவும் (இந்தியா உட்பட) இதனைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள்.
நடந்த கதை
1988 ஆம் ஆண்டு நவம்பர் 2-ல், அன்று இரவு சுமார் 8:30 மணியளவில் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழக மாணவரான ராபர்ட் டாப்பன் மோரிஸ் என்பவரால் ஒரு வைரஸை உருவாக்கினார். அதற்குத் தன் பெயரிலேயே ’மோரிஸ் புழு’ என்று பெயரும் இட்டார். இந்த வைரஸ் தானாகவே பரவவும் திறன் கொண்டதாக இருந்தது. அதனை மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கணினிகளுக்குள் ஊடுருவச் செய்தும் விட்டார். இதனை விளையாட்டுக்காகச் செய்ததாக அவர் சொன்னார்.
பலவீனமான கடவுச்சொல் கொண்ட யூனிக்ஸ் போன்ற இயக்குதளங்களை பெரிதாக பாதித்தது. 6000க்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை சோதனை வலையமைப்பு தொழில்நுட்பப்– (ARPANET- Advanced Research Projects Agency Network Experimental Technology)பிணைப்பையும் தாக்கியது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக பல சேவைகள் தடைபட்டன.
அப்போதுதான் இதுபோன்ற தாக்குதலைத் தடுக்க, கணினித் தொற்றுகளை எதிர்க்க ‘கணினி அவசர உதவிக் குழு’ ஒன்று அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. 1988-ல் கணினிப் பாதுகாப்பு தினத்தை அமெரிக்காவின் “கணினிப் பொருட்களுக்கான சங்கம் -Association for Computing Machinery (ACM)” என்ற அமைப்பு அறிமுகம் செய்தது.

சைபர் குற்றங்கள் மற்றும் வைரஸ்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் நோக்கம். அதனால் அந்நாளை நினைவுகூரும் வகையில் நவம்பர் 30ஐ கணினி பாதுகாப்பு தினமாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
கணினிப் பாதுகாப்பு ஏன் முக்கியம்?
இன்றைய உலகத்தில் கணினி மிக முக்கியமான ஒரு கருவியாகிவிட்டது. வேலை செய்ய, ஆன்லைன் வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்ய, மின்னஞ்சல் அனுப்ப, படிக்க, விளையாட, அல்லது நண்பர்களுடன் தொடர்பில் இருக்க இன்றைய காலத்தில் கணினி நாம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எனவே, நாம் நமது வங்கித்தகவல்கள், புகைப்படங்கள், குடும்ப வீடியோக்கள், கணக்கு வழக்குகள் என்று பலவற்றையும் கணினிகளிலும் இதர சாதனங்களிலும் சேமித்து வைக்கிறோம். இதனால், கணினியில் உள்ள தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக அவசியமாகிறது.
கொஞ்சம் நாம் அசட்டையாக இருந்தால் உங்கள் தகவல்கள் தவறான கைகளுக்குச் செல்லும். அப்புறம் என்ன? உங்கள் தகவல்களை எவர் எவரோ திருடி, தவறாகப் பயன்படுத்தக்கூடும். இதனால் பண இழப்பு, நம் பெயர், கண்ணியம் கெடுவது முதலிய பல தொந்தரவுகள் வரலாம்.
அடுத்தவரால் உங்கள் தகவல்களை திருட முடியாமல் இருக்க, தினசரி பாதுகாப்பு பழக்கங்களை கடைபிடிப்பது முக்கியம். கணினிப் பாதுகாப்பு என்பது ஒரு விருப்பம் அல்ல; அது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். நம்மையும் நம் தகவல்களையும் பாதுகாக்க இது மிகவும் அவசியம்!
செய்ய வேண்டியவை என்னென்ன?
- 3-6 மாதங்களுக்கு ஒரு முறையாவது கடவுச்சொற்களை (passwords) மாற்றியமைக்கவும்.
- வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் புதுப்பிக்கவும்.
- முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக கிளவுட் வசதியைப் பயன்படுத்தி (எ.கா: கூகிள் டிரைவ், டிராப் பாக்ஸ், ஐ கிளவுட், ஒன் டிரைவ் முதலியவற்றில்) சேமிக்கவும்.
- பதிவிறக்கம் செய்யும் கோப்புகள் நம்பகமானவையா என்பதை உறுதிசெய்யவும். உங்களது ஆண்டிவைரஸ் மென்பொருள் எச்சரித்தால், அந்தக் கோப்பைக் கவனத்துடன் கையாளவும்.
- பாதுகாப்பான இடமா என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில் பொது வை ஃபை வசதியைப் பயன்படுத்த வேண்டாம்.

- ஸ்கேன் செய்யாமல் பென் டிரைவ், ஹார்ட் டிரைவ்களை கணிப்பொறியுடன் இணைக்க வேண்டாம்.
- மிகவும் ரகசியத்தன்மை மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் கொண்ட கணிப்பொறி உங்களுடையது என்றால் வி.பி.என். சேவையைப் பயன்படுத்துங்கள். தகவல் திருடர்களால் உங்களைப் பின் தொடர முடியாது.
- பாதுகாப்பான இணையதளங்களை மட்டுமே பார்வையிடுங்கள், இணைப்புகளை சொடுக்குங்கள்.
- கூகிள் குரோம், மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் தவிர வேறு சில உலவிகளும் ( Browsers) உள்ளன. அவற்றிலும் தனி நபர் தகவல்களைத் திரட்டாத, சேமிக்காத உலவிகளைப் (எ.கா. சஃபாரி, ஒபேரா, டக் டக் கோ, யாண்டெக்ஸ் முதலியவை) பயன்படுத்தலாம்.
- மென்பொருட்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
- உங்கள் ஆசையைத்தூண்டும் போலியான விளம்பரங்களைச் சொடுக்கிவிடாதீர்கள்.
- செல்போன்க்ளை புதிய இடங்களில் சார்ஜ் செய்யும்போது கேபிள்களின் வாயிலாக சார்ஜ் செய்யாமல், உங்களது சொந்த சார்ஜர்களை மின் இணைப்பில் இணைத்து சார்ஜ் செய்வது நல்லது. யு.எஸ்.பி சார்ஜிங் கேபிள்கள் வழியாகவும் தகவல் திருட்டு இப்போது நடக்கிறது.
- தொழில் செய்வது முக்கியம்….அதைவிட முக்கியம் பாதுகாப்பாக இருப்பது. சரிதானே!?
-ஜெயபால் ரவி அஜய்
(Lead Image by Cliff Hang from Pixabay)





