அன்பு வாசகர்களே,
உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். ஒரு மே தின நன்னாளில் ஒரு எளிய பூ விற்கும் தொழிலாளியின் கையால் தொடங்கப்பட்டது முனைவு.காம் இணைய இதழ். பெரிய அளவுக்கு பொருளாதார பின்புலம் ஏதுமின்றி மிகச்சிறிய குழுக்கள், சுதந்திர இதழாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகளால் மட்டுமே முனைவு இவ்வளவு தொலைவு பயணித்துவந்திருக்கிறது. விளம்பர வருவாயோ, வேறு எவ்விதமான வருவாயோ இன்றி கடந்த 9 ஆண்டுகளாக தன் கையாலேயே கரணமடித்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறது உங்கள் முனைவு.
இவ்விதழின் எளிய பணியால் பயன்பெற்றவர் பலர். சுவைமிகு கதைகள் பல நம்மிடம் உண்டு. எதிர்வரும் காலங்களில் நாங்கள் நேரிலேயே உங்களிடம் அவற்றைப் பகிர்வோம். பல்வேறு நடைமுறை காரணங்களால் செய்தி வெளியீட்டில் சுணக்கம் ஏற்பட்டதை உணர்கிறோம். வருந்துகிறோம். அண்மையில் முனைவின் வீச்சை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆம். முனைவுக்கு இனி புது ரத்தம் பாய்ச்சப்படும். இனி தொடர்ச்சியாக முனைவில் உங்கள் விருப்பமான தொழில் வணிகச் செய்திகள், புதிய தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், வெற்றிகண்டோரின் நேர்காணல்களை நீங்கள் படிப்பீர்கள். சொன்னது இவ்வளவுதான். சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. போகப்போக உங்களுக்கு வியப்பூட்டும் நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.
ஒவ்வொரு தமிழ் இளைஞனையும்/இளம்பெண்ணையும் தொழில் முனைவோராக ஆக்கும் அறப்பணியில் ஈடுபட்டுவரும் இதழ் முனைவு ஆகும். இதில் பாதி அளவுக்கு வெற்றிபெற்றால்கூட தமிழகத்தில் சிறு-குறு-நடுத்தரத் தொழில் முனைவோரின் எண்ணிக்கை பெருகும். நாட்டின் வரி வருவாய் உயரும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.
இதுவரை இப்பயணத்தில் நம்பிப் பயணித்த அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். முனைவின் முன்னாள் ஆசிரியர்கள், இந்நாள் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நலம் விரும்பிகள், ஆலோசகர்கள் என்று அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்…
வாருங்கள். நான்கு கால் பாய்ச்சலுக்குத் தயாராவோம்!
என்றென்றும் அன்புடன்,
ம.விஜயலட்சுமி
ஆசிரியர்-பதிப்பாளர்
(Image by Michal Jarmoluk from Pixabay)