சாதாரண மக்களும் தனியார் துறையில் வேலைசெய்வோரும் இனி முதல் நிம்மதியான நிதி நெருக்கடியில்லாத ஒரு ஓய்வுகாலத்தை அனுபவிக்கலாம். எப்படி என்று கேட்கிறீர்களா ? இவர்களுக்காகவே இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் – (எல்ஐசி) ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஓய்வுகாலத்திற்கான சேமிப்பு மற்றும் வருமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தனி நபர்/ தம்பதியினருக்கு என நமக்கேற்ற வகையில் முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தின் பாலிசிதாரர், தேசிய ஓய்வூதிய அமைப்பின்- (NPS) சந்தாதாரராக ஆகிவிடுகிறார் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
இந்தத் திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் முதலீடு செய்யலாம் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் செலுத்தி இந்த பாலிசியை வாங்கலாம், பாலிசி தொகைக்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது.
மாதா மாதம் ரூ.1000, காலாண்டுக்கு ரூ.3000, அரையாண்டுக்கு ரூ.6000, ஆண்டுக்கு ரூ. 12000 என்ற முறையில் வசதிக்கேற்ப விசுவாசத்தொகையை பாலிசிதாரர் பெற முடியும் (இது குறைந்த பட்ச தொடக்க நிலைத் தொகைதான்).
இந்த பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால், அவரது நியமனதாரருக்கு (நாமினி) மொத்த தொகை கொடுக்கப்படும். அல்லது, மாதா மாதம், காலாண்டு போன்ற தவணை முறையில் நாமினியின் விருப்பத்திற்கேற்பவும் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது, அந்தத் தொகையை, மற்றொரு வருடாந்திர திட்டமாகவும் மாற்றிக் கொள்ளலாம். 5, 10,15 ஆண்டு தவணைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல, பணத் தேவை இருப்பின் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசி வாங்கிய தொகையின் 60% தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்து 3 மாதங்களுக்கு பிறகு பாலிசிதாரர்கள் கடன் வசதியைப் பெறலாம்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.