வருமான வரி திட்டமிடல்: முனைவர். ஏ.வி.செந்தில் வழிகாட்டுகிறார்.

வருமான வரி திட்டமிடல்: முனைவர். ஏ.வி.செந்தில் வழிகாட்டுகிறார்.

2023-24 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று. அப்படி செய்ய தவறினால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரிந்த செய்திதான். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வருமான வரியைச் செலுத்தித்தான் ஆகவேண்டும். அது நமது சமூகக்கடமை. வரி விகிதங்களில் நமக்கு கருத்து வேறுபாடுகள், எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அது தனிக்கதை.

இருக்கட்டும்.  இனி அடுத்த நிதி ஆண்டிலாவது சீராக வருமான வரியை தாக்கல் செய்ய நம்மைக் கொஞ்சம் முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்வோம். அதற்கு நிதித்திட்டமிடல் நிபுணரை நிச்சயம் அணுகத்தான் வேண்டும். 

‘முனைவு’  வாசகர்களின் தேவைகளை அறிந்துக் கொண்டு நிதி துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த பிரபல நிதி திட்ட நிபுணர் முனைவர் ஏ.வி.செந்தில் அவர்களை சந்தித்தது.   

முனைவர் ஏ.வி.செந்தில், மிக அனுபவம் வாய்ந்த நிதி திட்ட நிபுணர், தனது ஆர் ஆர் ஆர் தேஜஸ் என்ற தனியார் நிறுவனம் வாயிலாக நிதி ஆலோசனை, வணிக ஆலோசனை, நிர்வாக பயிற்சி, வாழ்க்கை பயிற்சி, பெருநிறுவன பயிற்சி மற்றும் செல்வ மேலாண்மை சேவைகளை  சென்னையிலிருந்து வழங்கிவருகிறார். 

 

முனைவர். ஏ.வி.செந்தில்

முனைவு : உங்கள் சேவைகள் குறித்து சொல்லுங்கள். 

ஏ.வி.செந்தில்: எங்கள் சேவை ஒரு முதலாளி – தொழிலாளி என்ற வட்டத்துக்குள் இருந்துவிடாமல் புதிதாக வரும் தொழில்முனைவோருக்கு, சிறு-குறு தொழில் செய்வோருக்கு, தனி நபர்களின் தனிப்பட்ட நிதி ஆலோசனை அதாவது அவர்களுக்கு அதிக முதலீடு இல்லாமலே எளிதாக வாகனம் மற்றும் வீடு வாங்க , அதிக சிக்கல் ஏதுமில்லாமல் கல்வி/ வாகன/ இதர கடனுதவி பெற , பிள்ளைகளின் கல்விக்காக நிதி திரட்டும் வழிமுறை அதுமட்டுமில்லாமல் அவர்களின் படிப்புக்கு என்னென்ன தேவையோ அறிந்து அதற்கான ஏற்பாடுகள் செய்வது , ஓய்வு பெறும் முதியோருக்கு பணி ஓய்வு திட்டம் குறித்து … இப்படி பல ஆலோசனைகள் உதவிகள் வழங்கி வருகிறோம். 

முனைவு: இன்று வருமான வரி தாக்குதல் செய்ய வேண்டிய கடைசி நாள். யாரெல்லாம்  வருமான வரி தாக்கல் கட்டாயம் செய்ய வேண்டியவர்கள்? 

முனைவர் ஏ.வி.செந்தில்: ஜூலை 31 அன்று, தனி நபர் , சிறு-குறு தொழில் செய்வோர், ரூபாய் 20 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டும் வணிகர் ஆகியோர் ஐடிஆர் சமர்ப்பிப்பது மிக அவசியம். யாருடைய வருமான கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதோ அவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அதாவது அவர்கள் – (செப்டம்பர் 30 – அக்டோபர் 31) என்ற இந்த காலகட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்தால் போதுமானது. 

நீங்கள் ஒரு வணிகர் என்றால் நிச்சயம் கணக்கேடுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். அப்படி தணிக்கை செய்யப்பட வேண்டுமேயானால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. அதாவது செப்டம்பர் 30 – அக்டோபர் 31வரை .  

மாறாக வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு கணக்கேடுகள் தணிக்கை செய்ய வேண்டிய அவசியம்  ஏற்படவில்லை  என்று கொள்வோம். அவருக்கு ரூ.20 லட்சத்துக்கு கீழே தான் ஆண்டு வருமானம் உள்ளதென்றால் அவர் கட்டாயம் வருமான வரி கணக்கை (ITR – Income Tax Return) தாக்கல் செய்வது மிக அவசியம்.   இந்த கடைசி தேதியை தவறவிட்டால், ஐடிஆர் தாக்கல் செய்யும்போது ரூ.5000வரை அபராதம் கட்ட வேண்டி வரும். 

முனைவு: வருமான வரி தாக்கல் செய்ய நிதி ஆலோசகரை அணுக வேண்டுமா அல்லது தானாகவே இணையத்தில் செய்ய முடியுமா ?

ஏ.வி.செந்தில்: யார் வேண்டுமானாலும் இணையம் வழி வருமான வரி தாக்கல் செய்து கொள்ளலாம். 

முதலில் , https://eportal.incometax.gov.in/tec/foservices/#/login என்ற இணைய முகப்பில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் [பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டுடன் ஆதார் எண் மற்றும் பான் கார்ட் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 

அப்படி இல்லையென்றால், உள்நுழைந்தவுடன் ‘மை ப்ரொபைல்’ சென்று ஆதார் எண் இணைந்திருக்கிறதா என்று பாருங்கள். அதேபோல, உங்களுடைய மொபைல் எண் மற்றும் ஈமெயில் ஐடி  ஆகியவை சரியாக இருக்கின்றனவா என்று  சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

அதேபோல,  வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்பு நீங்களாகவே ஒரு தயாரிப்புப் பணியைச் செய்துகொள்ள வேண்டி வரும். அதனை முடிக்க கிட்டத்தட்ட 5-10 நிமிட நேரம் எடுக்கும். இதனைச் சரியாக செய்தால் செய்பவருக்கு எந்தவிதமான நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது. இந்த முகப்பில் நுழைந்த பின் services என்கிற ஆப்ஷன் மேலே இருக்கும். அதை தட்டினால் AIS (Annual Information Statement) இருக்கும்.

 இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படி செய்வதால் என்ன நன்மை என்றால்,  ஐடிஆர் தாக்கல் செய்யும் நீங்கள் கொடுக்கும் ரொக்க தொகைக்கும் AIS அறிக்கையிலுள்ள தொகையில் சிறிதேனும் வேறுபாடு இருந்தால், வருமான வரித்துறையிலிருந்து அடுத்த 30/40 நாட்களுக்குள்ளோ அல்லது 3 மாதத்திற்குள்ளோ அல்லது 1 வருடத்திற்குள்ளோ வரி செலுத்துவோருக்கு ஒரு நோட்டீஸ் வரும்.

 அப்போது அதை திருத்தம் செய்ய வசதி உள்ளது. இதற்கு அருகில் TIS (வரித் தகவல் சுருக்கம்) என்ற மற்றொரு அறிக்கையில் வரி செலுத்துவோரின் சம்பளத்தொகை , வீட்டுச் சொத்திலிருந்து பெற்ற வருமானம், பெறப்பட்ட மூலதன ஆதாயங்கள், பெறப்பட்ட ஆதாயங்கள், ஈவுத்தொகை, நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் எவ்வளவு என அனைத்துத் தகவல்களும் இருக்கும். இந்த அறிக்கையை பரிசோதித்து வருமான வரி தாக்கல் எந்தவிதமான தவறுகளுமின்றி நாமாகவே சொந்த முயற்சியில் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியும்.

 ஒரு 45 நிமிடம் அல்லது 1 மணி நேரத்திற்குள் முழுமூச்சாக கவனம் செலுத்தி இந்த பணியை முடித்து விடலாம். அப்படி இல்லை, சொந்தமாக செய்வது சிக்கலாக உணர்ந்தால் நிபுணர்களின் உதவியை அணுகி செய்து கொள்வதே சிறப்பு. 

இருந்தும், இந்த ஜூலை 31 க்குள் தாக்கல் செய்ய தவறிவிட்டால், அவர்கள் தங்கள் சம்பளத்தொகைக்கு ஏற்ப பிழை கட்ட வேண்டி வரும். ஆனால், இந்த ஜூலை 31 என்ற கடைசிக்கெடு நீட்டிக்க வாய்ப்பு கிடையாது என்பது இப்போதைய நிலை (கடைசிநேரத்தில் ஏதாவது சலுகை கிடைக்கலாம். ஆனால் அதனை உறுதியாகச் சொல்ல முடியாது). அதனால் எல்லோரும் இந்த ஜூலை 31 என்ற காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வதே சிறப்பு. 

முனைவு: வரி விலக்குக்கு , எதில் முதலீடு செய்யலாம்? 

ஏ.வி.செந்தில்: முதலீடு செய்வதற்கான வாய்ப்பு, (investment cut off) மார்ச் 31-உடன் முடிந்துவிட்டது. அதனால், இப்போது கடைசி நேரத்தில் எங்கு முதலீடு செய்தாலும் எந்த பயனுமில்லை. 

இனி 2024-25 நிதி ஆண்டுக்காக முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.  இப்போது,  புதிய வரி விதிப்பு, பழைய வரி விதிப்பு என்று இரண்டு முறைகள் உண்டு. இந்த புதிய வரி விதிப்பு குறைந்த வரி விகிதங்களை கொண்டுள்ளது அதுமட்டுமில்லாமல், எந்த விதமான சான்றுகளும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இது வரி செலுத்துவோருக்கு எளிதான முறை. 

அதேபோல வரி விலக்குக்காக எந்தவிதமான முதலீடும் செய்ய அவசியமும் இல்லை. அடிப்படையான விஷயங்களைச் செய்தாலே போதும், எல்லாவிதமான தள்ளுபடிகளும் கழிவுகளும் கழித்துக்கொள்ளப்படும். இந்த முறை 67 விழுக்காடு மக்களுக்கு உதவியாக உள்ளது.   

யாருக்கு இந்த பழைய வரி விதிப்பு முறை பயனுள்ளதாக இருக்கிறது என்று பார்க்கப் போனால் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குவது சரியாக இருக்கும். நடுத்தர வயதுடைய (35-40) கணவன் -மனைவி இருவரும் சேர்ந்து 40 லட்சம் அளவுக்கு வீட்டுக்கடன் வாங்கியிருப்பதாகக் கொள்வோம். 

 அவர்கள் இருவருமாக சேர்ந்து வருடத்துக்கு ரூ. 2 லட்சம்  வரை கட்டுகிறவர்கள் என்று கொள்ளுங்கள்.  அவர்களுடன் வயதான 65 வயதை கடந்த பெற்றோர்களுக்காக மருத்துவக் காப்பீடு  எடுத்திருக்கிறார்கள் என்றால் 80 -யின் கீழ் வரி விலக்கு கோரலாம். அதேபோல, அவர்களுடைய 2 பிள்ளைகளின் கல்விக்காக ஓராண்டில் ரூ. 1.5 லட்சத்துக்கு மேல் செலவிடும் தொகையிலும் வரி விலக்கு கோரலாம்,

பணி ஓய்வுக்காக நேஷனல் பென்சன் ஸ்கீமில் பணம் போட்டிருந்தாலும் விலக்கு உண்டு. இப்படி 4 விதமாக செலவு செய்தாலே வரி விலக்கு கோர முடியும்.இப்படி செய்து ஒருவர் 3-4 லட்சத்திற்கு மேலாகவே வரி விலக்கு பெற முடியும். சேமிப்பு/ குழந்தைகளுக்கான கல்வி செலவு/எல்ஐசி பாலிசி/என்டிஎஸ்ஈ முதலீடு திட்டம் செய்து அவை 1-2 லட்சத்துக்கும்  கூடுதலாக உள்ளது என்றால் கட்டாயம் பழைய வரி விதிப்பு முறை பயனுள்ளதாக இருக்கும். செலுத்த வேண்டிய வரி குறையும். இவையெல்லாம் செய்தாலே அடுத்த நிதி ஆண்டில் செலுத்த வேண்டிய வரியைக் குறைக்க முடியும்.    

  முனைவு: சம்பளதாரர்களுக்கு ஃபார்ம் 16 தாக்கல் செய்யும் போது 80G யின் வரி விலக்கு உண்டா? 

ஏ.வி.செந்தில்: 80G இன் கீழ் முதலீடுகள் நன்கொடைகளாகும். 2 வகைகள் உள்ளன. இந்திய அரசின் நிவாரண நிதி என்றால் – அது 100% வரி இல்லாத PM நிதி, நீங்கள் தெரிந்த சிலருக்கு நிவாரண நிதி வழங்கினால், அது 80G யின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் 50% வரி இலவசம் மட்டுமே கிடைக்கும்… இவை அனைத்தும் பழைய வரி முறையின் கீழ் வரும்.

 

முனைவு: ஓய்வூதியம் பெறுவோர் 15G/15H தாக்கல் செய்வது எதற்கு?

ஏ.வி.செந்தில்: TDS பிடிக்க கூடாதென்றால், அவர்கள் நிச்சயமாக 15G/15H கொடுப்பது அவசியம். ஒரு எடுத்துக்காட்டாக, மூத்த குடிமகன் ஒருவரிடம் ரூ. 1 கோடி உள்ளது. அவர் அதை அஞ்சல் அலுவலகம்/ எல்ஐசியில் வைப்புத்தொகை போன்ற பல்வேறு இடங்களில் முதலீடு செய்கிறார் என்றால்,  15G/15H கொடுக்க வேண்டியதில்லை. அதற்கு 8% என்ற வட்டி விகிதப்படி 8 லட்சம் வட்டி கொடுக்க வேண்டி வரும்.

முனைவு: பெற்றோர் மிகவும் வயதானவர்களாகவும், மகன்/மகள் சம்பளம் வாங்குபவர்களாகவும் இருந்து அவர்களின் கூட்டு வங்கி கணக்கில் நிதி இருப்பு திரள்வதால் பாதிப்பு உண்டா?

ஏ.வி. செந்தில்: முதியோர் 2 வகையாக கூட்டு வங்கி கணக்கு திறக்க வேண்டும்

1. மூத்த குடிமகனின் பெயர் முதலில் வரும்படி அதாவது அவர் முதன்மை கணக்கு வைத்திருப்பவராக இருத்தல், அவரின்  மகனின்/ மகளின் பெயர் கீழே வரும்படி இருக்க வேண்டும். 2.அதேபோல் மகனின் கூட்டு வங்கி கணக்கில் அவரது பெயர் முதலில் மற்றும் பெற்றோரின் பெயர் 2 வதாக இருத்தல் நன்று. இதில் முதன்மை கணக்கு வைத்திருப்பவர் தான் வரி செலுத்த வேண்டும். மகனோ/ மகளையோ பாதிக்காது.

முனைவு: குறு-சிறு தொழில் மிக குறைவான லாபம் ஈட்டும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டுமா?

ஏ.வி.செந்தில்: MSME யாராக இருந்தாலும், அவர்கள் 3 லட்சத்துக்குமேல் சம்பாதிப்பவர்களாக இருந்தால், வரவு செலவு கழித்து மிச்சம் வரும் சேமிப்பு 3 லட்சத்துக்கு அதிகமாகும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இப்படி இரண்டு வருடம் செய்தால் நிச்சயம், இதன் சான்றாக நிறுத்தி அவர்களின் தொழில் விரிவாக்கத்திற்காக கடனுதவி பெறலாம்.        

முனைவர் ஏ.வி.செந்தில் அவர்களைக் கூடுதலாக  அறிய/அணுக:

https://www.linkedin.com/in/avsenthil/

https://linktr.ee/avsenthil 

https://avsenthil.com/

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *