தற்சார்பு பொருளாதாரத்தில் அடுத்து நாம் மறுபயன்பாடு பற்றிப் பார்க்க இருக்கிறோம்.
எப்படி பொருட்களை முழுவதுமாகப் பயன்படுத்துவதால் பணத்தை மிச்சம் பிடிக்க முடியுமோ அதேபோல மறுபயன்பாடு மூலமும் பணத்தை சேமிக்கலாம்.
செய்தித்தாள் தரும் செய்தி இது!!!
படித்துமுடித்த பழைய செய்தித்தாள்கள் பலரது வீட்டில் மலை போலக் குவிந்திருக்கும். இவற்றைப் பழைய பேப்பர் வாங்குபவரிடம் எடைக்குப் போட்டால் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்றாலும், இதனைத் தாண்டி இந்தப் பழைய செய்தித்தாள்களால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
குறிப்பாக துர்நாற்றத்தை உறிஞ்சிக்கொள்ளும் திறன் இந்த செய்தித்தாள்களுக்கு உண்டு. எனவே பழைய செய்தித்தாள்களை பந்துபோல உருட்டி வீட்டில் இருக்கும் ஷூக்களில் வைத்துவிடுங்கள். ஷூக்களில் இருக்கின்ற கெட்டவாடை நீங்கிவிடும். அதேபோல முகம்பார்க்கும் கண்ணாடி மற்றும் கண்ணாடிக் கதவுகளை பழைய செய்தித்தாள் கொண்டு துடைத்துப் பாருங்கள். டல்லான கதவு டாலடிக்க ஆரம்பித்துவிடும்.
இதில் மட்டும் அலட்சியம் வேண்டாம்!
நெகிழியால் ஆன தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்திய பின்னர் தயவுசெய்து தூக்கிஎறிந்து விடாதீர்கள். நிலத்தில் குவியும் நெகிழிக் கழிவுகள் பூமியின் நீர்வளத்தையே சூறையாடிவிடக்கூடியவை. இந்த பூமியை அச்சுறுத்தும் மிக முக்கிய வில்லனே நெகிழித் தண்ணீர் பாட்டில்கள்தான். எனவே பயன்படுத்தி முடித்த தண்ணீர் பாட்டில்களின் மேல்பாகத்தை மட்டும் கத்தரியால் வெட்டி நீக்கிவிட்டு அதன் அடிப்பாகத்தில் முடிந்த மட்டும் செடிகளை வளருங்கள்.

அதேபோல நெகிழித் தண்ணீர் பாட்டில்களின் மூடி மேல் சிறுசிறு துளைகளைப் போற்று அவற்றைப் பூவாளிகள் போலப் பயன்படுத்தி மென்மையான செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றலாம்.
ஆனால் இப்படி மறுபயன்பாடு செய்து முடித்தபிறகு கொஞ்சம் மெனக்கெட்டு எஞ்சியிருக்கும் நெகிழிக் கழிவுகளை ஒன்றுசேர்த்து மறுசுழற்சி செய்யும் இடத்தில் சேர்க்க மறக்காதீர்கள்.
மாங்கொட்டையிலும் மாயம் செய்யலாம்!
கீறல் விழுந்த சி.டி, பயன்படுத்திய ஐஸ்க்ரீம் குச்சிகள், பழச்சாறு அருந்தப் பயன்படுத்திய குழல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி எனது தோழி ஒருவர் விதவிதமான கலை அலங்காரப் பொருட்களைச் செய்வார். இவ்வளவு ஏன்? சப்பிவிட்டுப் போட்ட மாங்கொட்டைகளைக்கூட கீழே போடாமல் அதற்கு வண்ணமடித்து பொம்மைகளாக மாற்றிவிடுவார்.
தேங்காய் துருவிய பிறகு கொட்டாங்கச்சிகளைத் தூக்கிப்போட மாட்டார். அதனை நன்கு பாலிஷ் செய்து வண்ணமடித்து வெகுஅழகான பேனா ஸ்டான்ட்டாக மாற்றிவிடுவார். இவரது இதுபோன்ற கைவேலைகளே இவருக்கு முகநூல் பக்கத்தில் தற்போது தனித்த அடையாளத்தைக் கொடுத்துவருகின்றன.
பழங்கள் சீக்கிரம் பழுக்கணுமா?
நெகிழிப் பயன்பாட்டிற்குத் தடை இருப்பதால் பேப்பர் பைகள் அதிக அளவில் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. எனவே இனி வீட்டில் சேகரமாகும் பேப்பர் பைகளைத் தூக்கி எறிந்துவிடாதீர்கள். பழங்களை வெகுசீக்கிரமாகப் பழுக்க வைக்க பேப்பர் பைகளைப் பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே தயாரித்த பாப்கார்ன், நொறுக்குத்தீனி வகைகளைப் பேப்பர் பைகளில் வைத்து அழகாகப் பரிமாறலாம்.
உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசை பேப்பர் பைகளில் கலைநயத்துடன் சுற்றிக் கொடுத்துப் பாருங்கள், அது ஒரு தனி அழகுடன் இருக்கும்.
அலமாரியாகும் சூட்கேஸ்!
வீட்டில் பழைய சூட்கேஸ் இருக்கிறதா? தூக்கிப் போட்டு விடாதீர்கள்.அந்த சூட்கேஸின் நான்கு புறமும் கால்களைப் பொருத்தி அதனை ஒரு அழகான மேசை போன்ற தோற்றத்திற்குக் கொண்டுவந்துவிடுங்கள். பின்னர் இந்த சூட்கேஸில் உங்களது புத்தகங்கள், நோட்டுக்கள், கோப்புகள் போன்றவற்றை வைத்துப் பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு மிக அழகாகவும், வித்தியாசமாகவும் இது இருக்கும்.
இவ்வளவு ஏன்? உங்களிடம் பழைய லெதர் சூட்கேஸ் இருந்தால் அதனை நெடுக்குவாட்டில் வைத்து சில நகாசு வேலைகளைச் செய்து அதனை மருந்துகள் வைத்துக்கொள்ளும் அலமாரியைப் போலவும் பயன்படுத்தலாம்.
கணினி ஆகிவிட்டது மீன்தொட்டியாக!
நண்பர் ஒருவர் இதுபோன்ற மறுபயன்பாடு விஷயத்தில் கெட்டிக்காரர். இனிமேல் சரிசெய்யவே முடியாது என்று ஆகிவிட்ட தனது பழைய கணினியின் திரையை(monitor) வைத்து மீன்தொட்டி தயாரித்துவிட்டார். கணினித் திரைக்குள் உள்ள தண்ணீரில் துள்ளி ஓடும் மீன்களைப் பார்த்து நாங்கள் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனோம்.
ஜீன்ஸில் இவ்வளவு செய்யலாமா?
வீட்டில் உடுத்திக் கிழித்த பழைய ஜீன்ஸ் நிறைய இருக்கிறதா? உங்களுக்காத்தான் இந்தச் செய்தி. ஜீன்ஸின் மேல்பாகத்தை மட்டும் தனியாகக் கத்தரித்து அதில் பற்பசை, பல்துலக்க உதவும் பிரஷ் போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம். கீழ்ப்பகுதியில் உள்ள துணியை வெட்டி கடிதங்களை வைத்துக்கொள்ள உதவும் அழகான லெட்டர் ஹோல்டர்களை உருவாக்கலாம்.
உங்களுக்குத் தையல்கலை தெரிந்திருப்பின் மென்மையான காட்டன் ஜீன்ஸை பெண்கள் உடுத்துகின்ற ஓவர்கோட்டாக உருமாற்றலாம். திக்கான துணி என்பதால் இதை வைத்து அழகழகாக கைப்பைகளையும் உருவாக்கலாம். இவ்வளவு ஏன்? பழைய ஜீன்ஸ் துணியைக் கொண்டு விதவிதமாக அணிமணிகளையும், டெட்டி பியர் போன்ற பொம்மைகளையும் செய்கிறவர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன்.
அட…இதை இப்படிக்கூட மாற்றலாமா?
இறகுப்பந்து விளையாடும் மட்டையில் உள்ள வலை அறுந்துபோய்விட்டதா? உடனே அதைக் குப்பையில் போட்டு விடாதீர்கள்.வலை இருந்த இடத்தில் கண்ணாடியை வைத்துப் பொருத்திவிடுங்கள். பிறகு இதைச் சுவரில் மாட்டினால் மிகமிக அழகான, வித்தியாசமான முகம் பார்க்கும் கண்ணாடி தயார்.
பந்தே பையானது!
இறகுப்பந்தைப் பற்றிப் பேசும்போது அமெரிக்காவில் இருக்கும் என் உறவினர் ஒருவரது ஞாபகம் வருகிறது. பதின்பருவ வயதுகளில் இருக்கும் அவரது மகன் ஒரு விளையாட்டுப் பிரியன். குறிப்பாக கூடைப்பந்து விளையாட்டை ரசித்து விளையாடுவான். பொதுவாகச் சற்று விலைமலிவாக வாங்கும் கூடைப்பந்தில் காற்று நீண்ட காலம் நிற்காது.
அதேபோல காற்று இறங்கிய கூடைப்பந்தில் பழையபடி காற்றை நிரப்பவும் முடியாது. அப்படிப்பட்ட பந்துகளை மறுபடியும் பயன்படுத்தவும் முடியாது. குப்பையில்தான் போடவேண்டும். இதையெல்லாம் பார்த்தார் என் உறவினர். அதுபோன்ற உபயோகமற்ற கூடைப்பந்துகளை சிலபல மாற்றங்களுக்கு உட்படுத்தி கைப்பையாக மாற்றிவிட்டார். இப்போது அவரது பதின்ம வயது மகன் தனது தந்தை உருவாக்கிக் கொடுக்கும் வண்ணவண்ண கூடைப்பந்துப் பைகளைத்தான் பயிற்சியின்போது ஸ்டைலாக எடுத்துக்கொண்டு செல்கிறான்.
பட்டன் இப்போது பிரேஸ்லெட்!
பயன்படுத்துகின்ற பொருட்கள் லேசாகப் பழுதடைந்தாலே அவற்றைத் தூக்கிப் போடும் ஆட்கள் இருக்கின்ற இதே உலகத்தில் அறுந்துவிழும் பட்டன்களைக்கூட ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் மனிதர்களும் இருக்கிறார்கள். அன்று என் தோழி அவள் கைகளில் மிக அழகான பிரேஸ்லெட்டை அணிந்திருந்தாள். “எங்கே வாங்கினாய்” என்று கேட்டேன்.
“வாங்கினேனா? என்னுடைய உடைகளிலிருந்து அறுந்துவிழுந்த பெரியபெரிய பட்டன்கள் மற்றும் வீட்டிலிருந்த எலாஸ்டிக் துண்டை வைத்து இந்த பிரேஸ்லெட்டை நானே உருவாக்கினேன்” என்று அவள் கூறியபோது வியந்துபோனேன்.
பல வண்ண மிதியடி!
இவ்வளவு ஏன்? வீட்டில் பயன்படுத்தவே முடியாத பழைய ட்-ஷர்ட்கள் நிறைய சேர்ந்துவிட்டதா? என்ன செய்வதென்று குழம்பாதீர்கள்.அவற்றைக் கத்தரித்து பலவண்ண மிதியடிகளை உருவாக்கிவிடுங்கள். சமையலறை,குளியலறையின் முகப்பு போன்றவற்றில் இந்த மிதியடியைப் பயன்படுத்துங்கள். நான் அப்படித்தான் செய்துவருகிறேன்.
நாங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் எல்லாமே சில உதாரணங்கள்தான். இதுபோல பல ஆயிரக்கணக்கான வழிகளில் பொருட்களை மறுபயன்பாடு செய்யமுடியும். உங்களுக்கு மறுபயன்பாடு குறித்த ஆர்வமும்,மெனக்கெடலும் இருந்தால் போதும், உங்களுக்கு வழிகாட்ட எத்தனையோ DO IT YOURSELF தளங்கள் இருக்கின்றன. முயற்சிக்கலாமே நண்பர்களே….
(வளரும்)