சென்னை, நவ.11: உள் நாட்டுத்தொழில் துறை என்பது உள்ளூர் தேவை, பருவநிலை, பண்டிகை காலம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது. அதற்கு ஒருவிதமான தகுதி, திறமை, அனுபவம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் ஏற்றுமதித் தொழில் சார்ந்த தேவை, வழங்கல், திறமை, அனுபவம் ஆகியவை முற்றிலும் வேறு.
பொதுவாக ஏற்றுமதி சந்தை என்பது இரண்டு வகையான ‘தேவை’ நிலைகளை உருவாக்கும். முதலாவது, ஆண்டு முழுவதும் தேவைப்படும் பொருட்கள். இரண்டாவது, குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தேவைப்படும் பொருட்கள். நாம் பேசவிருப்பது இரண்டாவது வகையான பொருட்கள் குறித்துத்தான்.
வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலம்தான் விழாக்காலம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய திருநாட்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் கடைகளில் வணிகம் சூடுபிடிக்கும் காலம் இது.
எனவே, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் அந்நாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். அந்தவகையில் தற்போது நிறைய வெளிநாட்டு வர்த்தக ஆர்டர்கள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 61.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருட்களை நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இவ்வாண்டு அக்டோபர் மாத உத்தேச நிலவரப்படி இது 73.2 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இறக்குமதியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் 77.3 பில்லியன் டாலராக இருந்த நமது இறக்குமதி இந்த அக்டோபரில் 83.3 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிக அளவுக்கு இறக்குமதி செய்கிறது.
கைவினைப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், பொறியியல் சாதனங்கள், ரத்தினக்கற்கள், நகைகள், ஜவுளி, தோல் பொருட்கள், சணல், வேதிப்பொருட்கள் ஆகியவற்றைப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
-ம.விஜயலட்சுமி.