புதுசா தொழில் தொடங்கறீங்களா? அப்படீன்னா இந்த 10  விஷயங்களைப் பண்ணாதீங்க…

புதுசா தொழில் தொடங்கறீங்களா? அப்படீன்னா இந்த 10  விஷயங்களைப் பண்ணாதீங்க…

எந்த ஒரு மனுஷனுக்கும் சுதந்திரம்னா ரொம்பப் பிடிக்கும் இல்லையா… யாருக்கும் கைகட்டி வாய் பொத்தி பதில் சொல்லாம, நாமளே நம்மளோட சுதந்திரத்தை வெச்சுக்கறது பெரிய கொடுப்பினைதான். ஒரு நாள் விடுமுறைக்கோ, ஒரு மணி நேரம் சொந்த வேலைக்கோ மேலாளர்கிட்ட மண்டையை சொறிஞ்சுகிட்டு நிற்கிறது ஒரு பெரிய வேதனைதான்.

அப்படி இல்லாம….நம்மளோட விடுமுறையை நாமளே முடிவு பண்றது பிரமாதம்தான். அதேபோல எந்த அளவுக்கு உழைக்கிறோமோ, அந்த அளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும்ங்கறதும் நமக்கு ஒரு ஊக்கம் தரும் ஆற்றல்தானே…

அதனாலதானே சொந்தமாகத் தொழில் தொடங்கலாம்னு ஒரு முடிவு எடுத்திருக்கீங்க….வாழ்த்துகள்…

புதுசா தொழில் தொடங்கறவங்களுக்கு ‘என்னவெல்லாம் செய்யணும்’னு நிறைய அறிவுரைகள் கிடைக்குமில்லீங்களா…நாம அதுக்குள்ள போகப்போறதில்ல.

அதுக்கு பதிலா என்னவெல்லாம் செய்யக்கூடாதுன்னு சில விஷயங்கள் இருக்கு. அதுல ஒரு 10 எடுத்துக்குவோம்….

பண்ணக்கூடாத 10:

1.நம்ம பக்கத்து வீட்டுக்காரர் ஒரு தொழில் செஞ்சு சூப்பரா செட்டில் ஆயிட்டாரே…. நாமகூட அதை செஞ்சா என்னன்னு யோசிச்சு தடார்னு அதை செய்றதுக்குப் பேரு தொழில் இல்லீங்க. ஆர்வக்கோளாறு. ஒருத்தருக்கு சாத்தியப்படுற விஷயம் இன்னோருத்தருக்கு கைகூடாம போகலாம். உங்களோட ஆர்வம், திறமை, அனுபவம் -இதையெல்லாம் வெச்சுத்தான் நீங்க தொழில் தொடங்கணும். மத்தவங்களைப் பார்த்து சூடு போட்டுக்கக் கூடாது.

Image by Adrian from Pixabay

2.உங்க கையில எவ்வளவு காசு இருந்தாலும் தொழில் தொடங்க அது தகுதி இல்லீங்க. உங்ககிட்ட எந்த அளவுக்கு அனுபவம் இருக்கோ, அதுதான் தகுதி. புதுசா ஒரு தொழிலில்ல இறங்கறீங்கன்னா அந்த தொழில் சார்ந்த நிறுவனத்துல நீங்க சில ஆண்டுகளாவது வேலை செஞ்சு அனுபவத்தை சேகரிச்சு வெச்சுக்கணும். முதலீடு போட்டு அதில இருந்து அனுபவம் கத்துக்கிட்டா அதுக்குப் பேரு பள்ளிக்கூடம். சொந்தத் தொழில் கிடையாது.

3.இப்பவெல்லாம் இணையத்தைத் திறந்தாலே வெற்றிக்கதைகளா வந்து கொட்டுது. ’கொஞ்சூண்டு முதலீடு போட்டு கோடிக்கணக்கில் அள்ளும் தொழிலதிபர்’ கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. அதைமட்டும் படிச்சுட்டு/பார்த்துட்டு வந்து தொழில் பண்றேன்னு இறங்கிடாதீங்க.

வெற்றி பெற்றவங்களோட பின்புலம், மன ஆற்றல், அவங்களுக்கு வந்த நெருக்கடிகள், அதையெல்லாம் அவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு வெற்றிக்கதையில முழுசா சொல்லியிருப்பாங்களாங்கறது சந்தேகம்தான். அதனால வெறும் கதைகளை மட்டும் நம்பி அந்த சூட்டோட சொந்தத் தொழில்ல இறங்காதீங்க. உங்களோட பலத்துல இறங்குங்க. ஊக்கம் தருவதற்கு வெற்றிக்கதைகள் பக்கம் அப்பப்போ ஒதுங்குங்க.

4.கண்ணை மூடிக்கிட்டு கடன் வாங்கித் தொழில் செய்யாதீங்க. இ.எம்.ஐ தொந்தரவுல இருந்து வெளிவரணும்னுதானே நீங்க தொழில் தொடங்கறீங்க….அப்படி இருக்கும்போது புதுக்கடனுக்கும் ஒரு மாதாந்திர தவணை வருமில்ல… அதானாலதான் சொல்றேன்… ஒன்னுக்கு பத்து முறை யோசிச்சுட்டு தொழில் கடன் வாங்குங்க.

Image by Jatinder Jeetu from Pixabay

கடன் தவணை கட்டத் தொடங்கற காலத்தை எவ்வளவு காலம் தள்ளிப் போட முடியும்னு (moratorium) உங்க வங்கி/சம்பந்தப்பட்ட துறையில கேட்டு அதை உங்களுக்கு வசதியா வாங்கிக்கோங்க. மாத வட்டியைக் கேட்டு சந்தோஷப்பட்டு உள்ளூர் கடன் வாங்காதீங்க. 1 ரூபாய் வட்டி, 50 பைசா வட்டின்னு சொல்லி உங்கள ஈர்ப்பாங்க. அதெல்லாம் மாச வட்டிதான். அதை 12 ஆல பெருக்குங்க. அதுதான் உண்மையான வருஷ வட்டி. மறக்காதீங்க.

5.நமக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கும். ஆனா அதுல நமக்கு திறனோ, அனுபவமோ இருக்காது. அதேமாதிரி நமக்கு ஒரு விஷயத்துல நல்ல பரிச்சயம் இருக்கும். ஆனா, அதுல சொந்தத் தொழில் தொடங்கறது பத்தி யோசிச்சே இருக்க மாட்டோம். என்னைக்கேட்டா இரண்டாவது விஷயத்தைத்தான் நீங்க எடுக்கணும்னு சொல்வேன். நமக்குப் பிடிச்ச எல்லாத் தொழிலுக்கும் நம்மளையும் பிடிச்சு இருக்கணும் இல்லையா….

6.சொந்தத்தொழில்னு எடுத்துக்கிட்டோம்னா, சுமார் 3 வருஷமாவது பொறுத்திருந்து உழைக்கணும். 3 வருஷத்துக்கும் மேல அது தன்னைக் காப்பாத்திக்கலன்னா அத விட்டுடணும். இது ஒரு பொன் விதின்னு சொல்லுவாங்க. மந்திரத்தால மாங்கா விழணும்னு நினைக்கக்கூடாது. நிறையப்பேர் ஒரு வருஷத்துலயே சோர்ந்து போயிடறாங்க. அந்தப் பட்டியலில் நீங்க இருக்கக்கூடாது. உழைப்பும் நிதானமும் முக்கியம்.

Image by Gerd Altmann from Pixabay

7.புதுத்தொழில் முனைவோர் ஒரு தப்பு பண்ணுவாங்க. என்ன தெரியுமா அது…? எல்லா வேலையையும் அவங்களே செய்யணும்னு நினைப்பாங்க. இது ரொம்ப தப்பு. வேலைப்பளு, மன உளைச்சல் ஏற்பட இது ஒரு முக்கியக் காரணம். குறைந்த பட்ச ஊழியர்களை வெச்சு, அவங்ககிட்ட பொறுப்பைக் கொடுத்து நிர்வாகம் பண்றதுதான் சரியான நடைமுறை.

8.முதலீடு கிடைக்குதேன்னு பலரும் அவங்களோட நண்பர்களை பங்குதாரராகப் போட்டு கூட்டுத்தொழில் செய்வாங்க. அதைத்தவிர்க்கணும். கூடுமானவரை நீங்களே தனிநபரா தொழில் தொடங்கலாம். இல்லாட்டி, குடும்ப உறுப்பினர்களைப் பங்குதாரராக சேர்த்துக்கலாம். வெளி நபர்களை கண்ணை மூடிக்கிட்டு சேர்த்தீங்கன்னா நட்பும் பாதிக்கலாம்….தொழிலும் பாதிக்கலாம். இதே பாணியில உங்க நண்பரும் யோசிக்கிற ஆளா இருந்தா , நீங்க யோசிக்காம அவரைப் பங்குதாரரா சேர்த்துக்கலாம்.

9.ஒரு தொழில் நல்லா ஓடிக்கிட்டு இருக்கும்போதே இன்னொரு தொழில்ல கை வைக்கக் கூடாது. வேணும்னா உங்க தொழிலோட கிளைகளைப் பெருக்கி விரிவுபடுத்தலாம்.  ஏன்னா, அது உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம். அதைப் பெரிசுபடுத்தறீங்க. அதுல இடர் (ரிஸ்க்) குறைவு.

10.ஆயிரம்பேர் ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே உங்கமேல தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்காதீங்க. இன்ஃப்ளூயன்ஸ் ஆகறதுன்னு சொல்வாங்கள்ல…அதுதான். கஷ்டமோ நஷ்டமோ, லாபமோ நீங்கதான் அனுபவிக்கப் போறீங்க…எல்லார்கிட்டயும் ஆலோசனைகளை வாங்குங்க. ஆனா உங்க முடிவை நீங்க எடுங்க. உங்களோட முடிவை மத்தவங்க எடுக்க அனுமதிச்சீங்கன்னா அதுக்கு பதிலா உங்களோட 10-5 மணி வேலையிலேயே தொடரலாம் இல்லீங்களா!

-கா.சு.துரையரசு.

(Covr image by e_stamm from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *