பண நலனையும் பாருங்க!

பண நலனையும் பாருங்க!

நம்மில் பலருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யும் வழக்கம் இருக்கும். மாறிவரும் வாழ்க்கைப்பாணி, உணவுப்பழக்கத்தின் விளைவாகப் புதுப்புது நோய்கள், பிரச்சனைகள் வருகின்றன. இவற்றிலிருந்து நம்மைக் காப்பது அவசியம். தொழில் முனைவோர் எப்போதும் இரட்டைக்குதிரை சவாரி செய்பவர்கள். தொழில் ஒருபுறம்,  குடும்பம் ஒரு புறம். இரண்டையும் சரியாக சமன் செய்து பயணிக்கவேண்டும். உடல் நலக்குறைவோ, உயிரிழப்போ எது நேர்ந்தாலும் குடும்பத்தையும் தொழிலையும் அது கடுமையாகப் பாதித்துவிடும். எனவே, ஆண்டுக்கு ஒருமுறையாவது உடல் நலப்பரிசோதனை செய்துகொள்வது நல்லதுதான்.

”ஹெல்த் செக் அப் செய்வது நல்லதுதான். அதேபோல வெல்த் செக் அப்பும் செஞ்சுக்கிட்டீங்களா?” என்று என் நண்பர் ஒருவர் கேட்டபோது அது எனக்கு புதுச்சொல்லாக இருந்தது. அவர் ஒரு முதலீட்டு ஆலோசகர். “வாங்க சொல்றேன்” என்று அவரது அலுவலகத்துக்கு வரச்சொன்னார். நானும் சென்றேன்.

Image by Daniel Joshua from Pixabay

”உங்களுடைய அனைத்து முதலீடுகள், சேமிப்புகள், சொத்துகள், கடன்கள் என்று எல்லாவற்றையும் நான் ஸ்கேன் செய்யவேண்டும்” என்றார் சிரித்தபடி. நானும் தகவல்களைக் கொடுத்தேன். அது போதாது என்றார். எனது வீட்டிலுள்ள அனைவரின் வயது, குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்திட்டங்கள் என்று எல்லாவற்றையும் கேட்டார். சலிக்காமல் அவற்றையும் சொல்லிவைத்தேன். எனது ஓய்வுகால வயதை விவாதித்தோம். அந்த வயதில் எனக்கு மாதந்தோறும் எவ்வளவு பணம் தேவைப்படும், தற்போதுள்ள சேமிப்பு, முதலீடு  ஆகியவை அதற்கேற்ப பயணிக்கின்றனவா என்று ஆராய்ந்தார். அதற்குத்தனியாக மென்பொருளும் வைத்திருக்கிறார். எனக்கு வியப்பாக இருந்தது.

குழந்தைகளின் உயர்கல்வி, அவர்களின் திருமணம், எனக்கும் என் மனைவிக்கும் எதிர்கால நோய் வாய்ப்பு, கைவசமுள்ள காப்பீட்டுத்திட்டங்கள் போதுமானவையா என்றெல்லாம் ஆராய்ந்தார். அதிக வட்டியுள்ள கடன்களை குறைந்த வட்டியுள்ள கடன்களாக மாற்றிவிடுமாறு ஆலோசனை சொன்னார். ”எண்டோமெண்ட் பாலிசிகளை விட்டுவிட்டு டெர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். முதலீட்டுக்கு பரஸ்பர நிதித்திட்டங்களில் கண் வைக்கச் சொன்னார். 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது முதலீடுகளின் போக்கை கவனித்து பரிசீலிக்கச் சொன்னார்.

அற்புதமான யோசனைகள்…எல்லாமே அறிவியல்பூர்வமானவை. தொழில்ரீதியிலானவை. எனக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. எல்லாம் முடிந்தபிறகு மிகுந்த அன்போடு வணக்கம் சொல்லிப் புறப்படத் தொடங்கினேன். உடனே அவர், “நன்றியெல்லாம் வேண்டாம். தொழில்முறை ஆலோசனைக்கான கட்டணம் கொடுங்கள்” என்றார். நானும் சிரித்தபடியே கட்டணம் கொடுத்துவிட்டு வந்தேன்.

உங்களுக்கும் இதையேதான் சொல்கிறேன் நண்பர்களே… உலகில் எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை. எனவே, நமது நிதி மேலாண்மை சரியான திசையில் பயணிக்கிறதா என்பதை தொழில்முறை ஆலோசகர்களிடம் உரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளுங்கள். அந்த செலவு, உண்மையில் உருப்படியான முதலீடு!

நான் சொல்வது சரிதானே!

-அருண்மொழி.

(முகப்புப்படம்:  Shakti Shekhawat from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *