மதுரையில் இன்று ( அக்.5) டிஜிட்ஆல் சங்கமம் 2024 முழுநாள் கருத்தரங்கு நடக்கிறது. ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனரும் தொடர் தொழில்முனைவோருமான சி.சிவசங்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பின் இலக்கு இயக்குநர் சிவராஜா ராமநாதன், தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் இலக்கு இயக்குநர் ஐயன் கார்த்திகேயன் முதலிய பலரும் சிறப்புரையாற்றுகின்றனர்.
தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸின் ஒரு அங்கமான டிஜிட்ஆல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்ஆல் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முழுநாள் உச்சி மாநாடாக டிஜிட்ஆல் சங்கமம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டுக்கான டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

இதுகுறித்து டிஜிட்ஆல் அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து கூறுகையில், ”டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புதிய மாற்றங்களையும், பயன்களையும் தொழில் வணிக வளர்ச்சிக்கும், தனிமனித மேம்பாட்டுக்கும் வழங்கும் நோக்கில், முன்னாள் குடியரசு தலைவர் மேதகு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களால் 18-07-2015 அன்று துவங்கப் பெற்று, 100 ஆண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒரு அங்கமாக டிஜிட் ஆல் அமைப்பு செயல்பட்டு வருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமேசான் வெப் சர்வீசஸ் மூலம் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றங்கள் குறித்து அமேசான் வெப் சர்வீசஸ் தலைவர் தனசிங்; செயற்கை நுண்ணறிவின் அடுத்த அத்தியாயம் குறித்து ஜெயபிரகாஷ் காந்தி; அடுத்து வரவிருக்கும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து மவுனியம் ஏஐ நிறுவனர் செந்தில் நாயகம்; பீப்புள்டெக் நிறுவனர் ஜி.சுரேஷ்குமார், அமேசான் வெப் சர்வீசஸ் பிரவீன் ஜெயகுமார், ஸ்டார்ட்நெட் நிறுவனர் எம்.கே.இளங்கோ ஆகியோர் விவாதிக்க உள்ளனர். இந்த விவாத களத்தை ஜியோ வியோ தலைமை நிர்வாக அதிகாரி எம்.செந்தில்குமார் ஒருங்கிணைக்கவிருக்கிறார்.
அதேபோல, ‘அந்த நாலு பேருக்கு நன்றி’ என்ற தலைப்பில் ப்ளாக்ஷிப் நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் பேசுகிறார். மேலும் டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றிக் கதைகள் குறித்து போரம் ஆப் டிஜிட்டல் பாலிடிக்ஸ் அமைப்பின் தேசிய செயலர் தேடல் ஆனந்தன், சத்யம் குரூப் ஆப் கம்பெனிகளின் நிறுவனர் சத்யம் வி. செந்தில்குமார், இப்போ-பே இணை நிறுவனர் மோகன் கருப்பையா, வர்த்தக ஆலோசகர் மணிமாறன் ராமலிங்கம் ஆகியோர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
டிஜிட் ஆல் சங்கமம் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.என்.ஜெகதீசன் கூறுகையில், ”தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தால் துவக்கப்பட்ட அமைப்புகளில் டிஜிட்ஆல் அமைப்பும் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டிஜிட்ஆல் அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்ஆல் சங்கமம் மாநாட்டினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. சரியாக ஒரு தலைமுறை இடைவெளியில் தகவல் தொழில்நுட்ப புரட்சி மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு சங்கமம் நிகழ்வில் பல்வேறு விதமான சுவாரஸ்யமான தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேசவுள்ளனர். அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
-அருண்மொழி.
(முகப்புப்படத்தில்: திரு.ஜே.கே.முத்து)