இணையம் ஒரு கடல் மாதிரி. அதில் நாம் எந்த அளவுக்கு நம் நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கிறோம் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கு நாம் உதட்டைப் பிதுக்கித்தான் பதில் கொடுப்போம். ஏனென்றால், நாம் இணையத்தை அதிகம் பயன்படுத்துவது நிறைய பொழுதுபோக்குக்கு….கொஞ்சூண்டு அலுவலகம்/தொழில் சார்ந்த பணிகளுக்கு….
அவ்வளவுதான்!
உண்மையில் நமது வாழ்க்கையை எளிதாக்கும் பல பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் (apps) இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமோ?
அந்தக்கேள்விக்கு விடைதான் இந்தப்புதிய தொடர். இதுகுறித்த உங்கள் விமர்சனங்கள், ஐயங்களை எங்களுக்கு எழுதுங்கள்.
நினைத்ததை முடிக்க ஊக்கம் தரும் தளம்:பொமடாரோ டைமர்
கைநிறைய இலக்குகளும், செயல்களும் இருந்தாலும், விரும்பியதை செய்து முடிப்பதில் கவனச்சிதறல் ஏற்படுகிறதா? எண்ணத்தில் இருக்கும் உறுதி காரியத்தை இல்லை என நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள், உங்களுக்கு ஊக்கம் அளித்து, சிறப்பாக செயல்பட வைப்பதற்கு என்றே பொமடாரோடைமர்.ஆன்லைன் (https://pomodorotimer.online/ ) எனும் இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தை பார்ப்பதற்கு முன், இந்த தளம் எப்படி உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு முன், முதலில் தக்காளி வழி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொமடோரா வழி!
பொதுவாக செயல்திறனில் உள்ள பிரச்சனை என்னவெனில், ஒரு செயலைத் துவக்கிய பின் ஏற்படும் கவனச்சிதறல்கள்தாம். அதே நேரத்தில் செயலிலேயே மூழ்கிவிட்டால் களைப்பு உண்டாகி சோர்வாகலாம். இதற்கு தீர்வு தான், பொம்டோரா வழி.
செயல்வீரர்களாக விரும்புகிறவர்கள் தங்களை மிகவும் வருத்திக்கொள்ளாமல், அதே நேரத்தில் வேலையில் உரிய கவனம் செலுத்த வழி செய்யும் முறை இது. வேலையையும், ஓய்வையும் சரி விகிதத்தில் கலந்து, செய்ய நினைக்கும் வேலையை திறம்பட நிறைவேற்றுவதற்கான எளிய முறை.
நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் வேலையைச் சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, 25 நிமிடங்களுக்கு அந்த முதல் பகுதியில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும். இப்போது ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் மீண்டும், 25 நிமிடங்கள் வேலையில் ஈடுபட வேண்டும். உடனே மீண்டும் ஐந்து நிமிடம் ஓய்வு. இப்படி நான்கு முறை செய்த பிறகு, இன்னும் சற்று கூடுதலாக 20 அல்லது 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
இப்படிச் செயல்களைப் பிரித்துக்கொண்டு, 25 நிமிட இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொண்டு செயல்படும் முறையே பொமடாரோ உத்தி (Pomodoro Technique ) என்று சொல்லப்படுகிறது. படைப்பூக்கம் மிக்க பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்ற வழி என்றாலும், செயல்வீரராக விரும்பும் எவரும் பின்பற்றிப் பார்க்கலாம். இவ்வளவு ஏன், தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்குக்கூட பரிந்துரைக்கலாம்.
இந்த முறையை செயல்படுத்த உங்களுக்கு ஒரு கடிகாரக் கருவி தேவை. அந்த கருவியில் நேரத்தை அமைத்துக்கொண்டு, மணி ஒலிக்கும்போது ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் பணியில் ஈடுபடலாம்.
இத்தாலியைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ கிரில்லோ (Francesco Cirillo) என்பவர் தனது மாணவப் பருவத்தில் இந்த முறையைக் கண்டறிந்து பயன்படுத்தி பிரபலமாக்கினார். அதன் பிறகு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த வழியைப் பின்பற்றிவருகின்றனர்.
கிரில்லோ இந்த முறையில் நேரத்தை கணக்கிட பொமடாரோ எனும் நேரம் காட்டும் கருவியை பயன்படுத்தியுள்ளார். அந்தக் கருவியின் தோற்றம் தக்காளி வடிவில் இருந்ததால், இத்தாலி மொழியில் தக்காளியைக் குறிக்கும் இந்தச் சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
ஆக, பொமடாரோ முறையை முயன்று பார்க்க நீங்கள் தயார் என்றால், உங்களுக்கான நேரம் காட்டும் கருவியை மேலே சுட்டிக்காட்டிய இணையதளமே வழங்குகிறது. இதில் உங்களுக்கான நேரத்தை குறித்து செயலைத் துவக்கலாம். பொருத்தமான பின்னணி இசையை தேர்வு செய்யும் வசதியை அளிப்பதோடு, செய்து முடிக்க செயல்களை பட்டியலிடவும் வழி செய்கிறது.
முயன்று பார்த்து சொல்லுங்கள், செயல்களை பட்டியலிட போட உதவும் செய் பட்டியல் தளங்கள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
-சைபர்சிம்மன்
(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர்.- https://cybersimman.substack.com/ )
My sincee gratitude for the detailed and insightful explanation. Your writing made the concept easy to understand and highlighted its practical benefits. The way you described breaking tasks into focused intervals, combined with breaks, really resonated with me. It’s a method I’m eager to try out, especially since I often struggle with staying focused on my tasks.
Thank you for sharing such a useful technique. Your article was not only informative but also inspiring, and I’m sure it will help many others like me.