கடன் அட்டை இல்லாமலேயே கடனுதவி: ரிசர்வ் வங்கி புது வசதி

நமக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வோம்? தெரிந்தவர்களிடம் கைமாற்றாகப் பணம் வாங்குவோம். அல்லது கையில் உள்ள நகைகளை அடகுவைத்துப் பணப் பெற முயல்வோம். அல்லது தனிநபர்க் கடன் வாங்குவோம். கடன் அட்டை எனப்படும் கிரடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதனைப்பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதையோ அல்லது ஏ.டி.எம். மூலம் ரொக்கக்கடன் பெற்றோ நிலைமையை சமாளிப்பார்கள்.

மேற்கண்ட ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு சவால், நடைமுறைகள் உண்டு. எனவே, எளிதில் ரொக்கக்கடன் பெறும் வசதி ஒன்றை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிரடிட் லைன் அல்லது லைன் ஆஃப் கிரடிட் என்பது அதன் பெயர். யு.பி.ஐ. மூலம் கடன் வழங்க சிறு நிதி வங்கிகளை (small finance banks)  ரிசர்வ் வங்கி அனுமதித்தது.   அதாவது தற்போது கிரடிட் கார்டுகள் மூலம் வழங்கப்படும் கடன்கள் இனி முதல் ஜிபே முதலிய யு.பி.ஐ  செயலிகள் மூலம் கிடைக்கும்.

கடந்த செப்டம்பரில் அமல்படுத்தப்பட்ட கிரடிட் லைன் வசதியை ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, இந்தியன் வங்கி, கர்நாடகா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி முதலிய வணிக வங்கிகள் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.  ரிசர்வ் வங்கியின் தற்போதைய முடிவின்படி இனி சிறு நிதி வங்கிகளும் ஊரக வங்கிகளும்  இக்கடன் வசதியை வழங்க அனுமதிக்கப்படும் என்பதால் கணிசமான அளவுக்கு பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும்.

கிரெடிட் லைன் என்றால் என்ன?

கிரடிட் லைன் என்பது கடன் சேவைகள் அனைவருக்கும் கிடைக்க ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்படும் முன்-அங்கீகரிக்கப்பட்ட (Pre-approved) கடன் சேவையாகும். தேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய விதத்தில்  நிர்ணயிக்கப்பட்ட தொகையை உடனுக்குடன் கடன் வழங்க வங்கிகள் முன்கூட்டியே ஒதுக்குகின்றன.  தேவைப்படும்போது  தனி நபர்களும் சிறு தொழில் நிறுவனங்களும்  விரைவாக இக்கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

pic courtesy: FB page of RBI

இதுவரை ​​வங்கி கணக்குகளை இணைப்பதன் மூலம் யு.பி.ஐ. சேவைகள் கிடைத்துவருகின்றன அல்லவா… தற்போது, கூகிள் பே (Google Pay), ஃபோன் பே (Phone Pay) போன்றவற்றை கிரடிட் லைனுடன் இணைப்பதன் மூலம், யுபிஐ செயலிகளே கடன் அட்டைகளாக மாறிவிடும்.  கைநிறைய கடன் அட்டைகளை எடுத்துச்செல்வதையும் இனி தவிர்த்துவிடலாம்.

கிரெடிட் லைனை எப்படி இணைப்பது?

இந்திய தேசிய கட்டண முறை நிர்வாகக் கழகத்தின் (National Payments Corporation of India – NPCI) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள  வழிமுறைகள் இவை: 

*ப்ளே ஸ்டோரில் இருந்து UPI செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்யவும்.

*UPI செயலியின் இடது பக்கத்தில் உள்ள சுயவிவரப் பிரிவில் சொடுக்கவும்.

*உங்கள் கிரெடிட் லைன் இருக்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.

*இதற்கு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தவும்.

*இணைத்த பிறகு UPI பின்னை அமைக்கவும். பின்பு இது விருப்ப கட்டண முறையாக  கிரெடிட் லைனை செயல்பட துவங்கும்.

*இந்த செயலி செயல்படுத்தப்பட்டவுடன், விருப்ப பண பரிவர்த்தனை மூலம் கடன் வாங்கலாம்.

இப்படி கிரெடிட் லைன் மூலம் கடன் பெறும்போது உடனடியாகக் கடன் கிடைக்கும் என்பது ஒரு நல்ல விஷயம்தான். அதேவேளையில் ‘நடைமுறையைச் சுருக்கிவிட்டேன். இனி நான் சொல்வதுதான் வட்டி வீதம்’ என்று வங்கிகள் களமிறங்கிவிடக்கூடாது. வங்கிச்சேவை எளியோர் கைக்குச் செல்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல அவரகளின் கைகளைக் கடிக்காமல் இருப்பதும் முக்கியம். அதுதான் நிறுவனங்களின் உண்மையான ‘சமூகப் பொறுப்பாகவும்’ (corporate social responsibility) இருக்கும்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *