இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் முதலில் சிந்திப்பது செலவைப் பற்றியே. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் செலவைக் குறைத்தால்தான் அது லாபமாக மாறும். புதிய தொழில் முனைவோர் தங்கள் தொழிலில் எவ்வாறு செலவைக் குறைக்கலாம் என்பதைப் பற்றி இங்கு பார்க்கப் போகிறோம்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால்கூட பணத்தை மிச்சம் பிடித்துவிடமுடியும். இதோ, உங்கள் மூளைக்குக் கொஞ்சம் வேலை…
காகிதம் இல்லாப் பதிவேடுகள்
அலுவலகப் பணிகள் அனைத்துக்கும் காகிதத்தால் ஆன பதிவேடுகள், வெள்ளைத்தாட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, மின்னணு பதிவேடுகளைப் பயன்படுத்தலாம். இணையத்தில் பதிவு செய்யலாம். கூகுள் டாகுமென்ட், எம்.எஸ் வேர்ட், கூகிள் ஷீட் முதலிய செயலிகள் மிகவும் பயனுள்ளவை. நாட்குறிப்புக்கு பதிலாக நினைவூட்டும் செயலிகள், கூகிள் காலண்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். பணம் செலுத்துவது மற்றும் பெறுவது போன்ற செயல்களுக்கு ஜிபே, போன் பே முதலிய செயலிகளைப் பயன்படுத்தினால் கணக்கு விபரங்களைத் தனியே எழுதி வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது.
மாத செலவுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்
மாத செலவுகளை கடந்த மாத செலவுகளோடு ஒப்பிட்டு மதிப்பிடு செய்தல் ஒரு முக்கியமான பணி. பணியாளர் சம்பளம்,மின்சார கட்டணம்,வாகன செலவுகள்,அலுவலக சில்லறை செலவுகள் போன்றவற்றை மதிப்பீடு செய்து குறைக்க முயற்சி செய்வது முக்கியம். மூன்று மாதங்கள்/ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இதற்கான செலவுத்தணிக்கையை மேற்கொள்ளலாம்.
பயன்படுத்திய கருவிகளை வாங்குதல்
புதிதாகத் தொழில் துவாங்கும்பொழுது அனைத்து இயந்திரங்களையும் புதிதாக வாங்காமல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்துகொண்டு வாங்கலாம். அதேபோல அலுவலகத்துக்குத் தேவையான மேஜை, நாற்காலி, கணினி, பிரிண்டர் போன்றவற்றை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்தாலும் வாங்கலாம் .
உத்தரவாத காலம் மீதமிருந்தால் ரொம்பவே நல்லது. இருப்பினும் குறைந்தபட்ச உத்தரவாதத்தைக் கேட்டுப் பெறலாம். மிகவும் பழுதுபட்ட பொருட்களை வாங்கினால் பழுது நீக்கத்துக்கே அதிகம் செலவு பிடித்துவிடும். எனவே, அதனைத் தவிர்த்துவிடுவது உத்தமம்.
பயண செலவுகளை குறைக்கவும்
வங்கிக்கு பணியாளர்களை அடிக்கடி அனுப்புவதற்கு பதிலாக இணையவழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்களையும் அதற்குப் பழக்கலாம். அதேபோல ஊழியர் சந்திப்பு, வாடிக்கையாளர் சந்திப்புகளை நேரடியாக நடத்தும்போது தங்குமிடம், போக்குவரத்து செலவு, உணவு செலவு ஆகியவை ஏற்படும். அதற்கு மாறாக, இணையதளம் வாயிலாக இச்சந்திப்புகளை மேற்கொண்டால் நேரமும் பணமும் மீதமாகும்.
புதிய நிறுவனத்திடம் கொள்முதல் செய்யவும்
ஏற்கனவே சந்தையில் உள்ள நிறுவனத்தின் பொருட்கள் சற்று அதிக விலையில் இருக்கும் எனவே புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் தமது வாடிக்கையாளரை ஈர்க்க வேண்டும் என்று நோக்கத்தில் தரமான பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்வதுண்டு. அவர்களிடம் நாம் பொருட்கள் வாங்கும் பொழுது நமது செலவு சற்று குறையும் .
மதிப்பாய்வு செய்யலாம்
நாம் துவங்க இருக்கும் தொழிலுக்குத் தகுந்தாற்போல் அலுவலகக்கட்டடம் மற்றும் பொருட்கள் ஆகியவற்றைக் கொஞ்சம் மதிப்பாய்வு செய்து, பின்னர் வாங்கலாம் .அத்தியாவசியத் தேவை உள்ள பொருட்களை மட்டும் புதிதாக வாங்கிக்கொண்டு மற்றவற்றைப் பயன்படுத்திய பொருட்களாக வாங்கிக் கொள்ளலாம்.
அலுவலகத்துக்குத் தேவையான பணியாளர்கள் எத்தனை பேர்?; அவர்களின் பணிகள் என்னென்ன?; இதில் செலவுக்குறைப்பை செய்ய முடியுமா?; தரமான ஊழியர்களைப் பணியமர்த்தினால் கூடுதல் உற்பத்தி கிடைக்குமா?-என்பன போன்றவற்றை மதிப்பீடு செய்தல் வேண்டும். அனுபவமுள்ள பணியாளர்களைப் பணியமர்த்தினால், பயிற்சி தரும் செலவும் நேரமும் மிச்சமாகும்.
சில சேவைகளை வெளியிலிருந்து பெறலாம்
அலுவலகத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்வதற்கு பணியாட்களை தேர்வு செய்யாமல் சில பணிகளை வெளியில் கொடுத்தும் செய்யலாம். பகுதி நேரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதன்மூலம் நீண்டகால செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கலாம் . அதேவேளை விசுவாசமும் உண்மையான உழைப்பையும் செலுத்தும் ஊழியர்களை எப்போதும் தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும். அவர்கள்தாம் நிறுவனத்தின் சொத்து.
உங்கள் நிறுவனத்தில் இதுபோன்ற யோசனைகளை செயல்படுத்துகிறீர்களா?
-ம.விஜயலட்சுமி.
(முகப்புப்படம்: Angelo Esslinger from Pixabay)