பிஎஸ்என்எல் நிறுவனம் நமது நாட்டின் தனித்துவமான ஒரு தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
கடந்த காலங்களில் வெள்ளம், மழை, புயலென்று எந்தவிதமான இயற்கை இடர்களைச் சந்தித்தாலும் மற்ற தனியார் நிறுவனங்களின் சேவை பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட பிஎஸ்என்எல்-லின் சேவை பாதிக்கப்படவில்லை. அதற்கு காரணம் அதனுடைய வலுவான தொலைத்தொடர்பு கோபுரங்களும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பும் தான்.
இருப்பினும் மற்ற தனியார் நிறுவனங்களான ஜியோ, வோடோஃபோன், ஏர்டெல் முதலிய நிறுவனங்களின் தொழில்நுட்ப வேகத்துக்கேற்ப ஈடுகொடுக்க முடியாமல் பிஎஸ்என்எல் திணறியதும் உண்மைதான்.. மற்ற நிறுவனங்கள் எல்லாம் வேகமாக 4G, 5G என்று சேவைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பிஎஸ்என்எல்- நிறுவனத்தால் அடுத்தகட்ட நிலைக்கு நகர முடியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தனது செல்ஃபோன் கோபுரங்களை அதிகப்படுத்துவது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என்று களமிறங்கியிருக்கிறது. இதற்குப் பிறகு நடந்ததுதான் சுவையான சேதி.
சமீபத்தில் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை 12 விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரை உயர்த்தியிருக்கின்றன. இதனால், மாதந்தோறும் கணிசமான அளவுக்கு ஒவ்வொரு தொலைபேசிக்கும், அதாவது செல்பேசிக்கும் கூடுதலாக செலவிட வேண்டி வருகிறது. ஒரு வீட்டில் நான்கு செல்பேசிகள் இருந்தால் மாதந்தோறும் ரூ.500லிருந்து ரூ.700 வரைக்கும் அல்லது ரூ. 1000 வரைக்கும் கூடுதலாக செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் உடனடியாக தனது விலைக்குறைப்பு திட்டத்தைத் நடைமுறைப்படுத்திவிட்டது. அதன்படி, மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வசதியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்திருக்கிறது.
அனைத்து நிறுவனங்களும் அதிகபட்சமாக 25 விழுக்காடு வரை கட்டணத்தைக் கூட்டியிருக்கிற வேளையில் பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணம் குறைப்பில் ஈடுபட்டிருப்பது அனைத்து தனியார் நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மிகப்பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிறுவனங்கள் பெரிய சவாலை சந்திக்க வேண்டிய சூழலை இன்று பிஎஸ்என்எல் ஏற்படுத்திவிட்டது.
தனியார் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் தற்போது பிஎஸ்என்எல்-லின் அருமையை உணர்ந்து வெகுவேகமாக நம்பர் போர்ட்டபிலிட்டி எனப்படும் ’ எண்களை மாற்றாமல் வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும்’ வசதிக்கு மாறி வருகிறார்கள்.
அதேபோல, புதிதாக பிஎஸ்என்எல் செல்ஃபோன், சிம்கார்ட்டுகளை வாங்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-லின் பக்கம் வந்திருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் மட்டுமே 2 லட்சமென்று சொல்லப்படுகிறது.
இதே வேகத்தில் போனால், வெகு சீக்கிரத்தில் நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் உருவெடுத்துவிடும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஒரு நாட்டின் முக்கியமான அடிப்படை கட்டுமானமான தகவல் தொடர்பு, தொலைதொடர்பு ஆகியவை அரசிடம் இருக்கிற பொழுது அது பொதுமக்களுக்கு எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்குமென்பதற்கு மக்கள் பிஎஸ்என்எல்-லின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியிருப்பதே ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.
இப்போது ஏற்பட்டிருக்கிற சவாலை எப்படி தனியார் நிறுவனங்கள் சமாளிக்க போகின்றன என்று தான் ஒட்டுமொத்த வணிக உலகமும் தொலைதொடர்பு நிறுவன உலகமும் அறிய ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.
-அருண்மொழி.
(முகப்புப்படம்: நன்றி: பி.எஸ்.என்.எல்)