சென்னை, டிச.15: சென்னை அருகே உள்ள பூவிருந்தவல்லியில் இயங்கிவரும் பார்வையற்றோருக்கான தொழிற்பயிற்சி மையத்தில் புக் பைண்டிங் பயிற்சி வழங்கப்பட்டுவந்தது. ஆண்டுதோறும் 21 பேர் இப்பயிற்சி பெற்றுவந்தனர். இவர்களுக்கு அரசு, தனியார் அச்சகங்கள், பதிப்பகங்களில் பணி கிடைக்கும்.
இந்நிலையில் நூலகங்கள் பலவும் கணினிமயமாக்கப்பட்டு வருவதால் இப்பயிற்சியை நிறைவு செய்வோருக்குப் பணி வாய்ப்புகள் அருகிவிட்டன என்று கூறி, இப்பயிற்சியை நிறுத்துவதாகத் தமிழக அரசு சொல்லி, அப்பயிற்சியை நிறுத்திவிட்டது.
இதுகுறித்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அவ்வழக்கில் தமிழக அரசு நேர்நிலையாகி, “மேற்கண்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுவிட்டது. புக் பைண்டிங் பயிற்சி தொடரும். மேலும் கூடுதலாக 7 பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன” என்று கூறிவிட்டது. அதனையடுத்து இவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டுவிட்டது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மென்மேலும் கூடுதலான நவீன பயிற்சிகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
(pic courtesy:Myriams-Fotos from Pixabay)