’நோ’ சொல்ல கற்றுத்தரும் இணையதளம்
(இந்தத் தளம் தெரியுமா?– தொடரின் 3 ஆம் பகுதி)
நீங்கள் தொழில்முனைவோராக இருந்தாலும் சரி, அலுவலகத்தில் பணி புரிபவராக இருந்தாலும் சரி, முடிவெடுக்கும் திறன் முக்கியம் என்பதை ஒப்புக்கொள்வீர்கள். முடிவு எடுக்கும் திறன் என்பது, கோரிக்கைகளை அல்லது வேலைகளை ஏற்பதா? வேண்டாமா? என தீர்மானிப்பதும் தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
ஆம், பல நேரங்கள் நாம் எல்லாவற்றுக்கும் ’ஆம்’ சொல்ல பழகியிருக்கிறோம். இதற்கு, எப்படி மறுத்துச்சொல்வது எனும் தயக்கம் அல்லது அச்சம் காரணமாக இருக்கலாம். சந்திப்புகளுக்கும், அழைப்புகளுக்கும் இது பொருந்தும்.
எப்போதும் ஆம் சொல்வது நமக்கு நல்லப்பெயர் வாங்கித்தரலாம். அல்லது அப்படி நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், சில நேரங்களில், ’நோ’ சொல்வது அவசியமாகலாம். நேரம் குறைவாக இருக்கும் போது, முக்கியமில்லாத அல்லது தேவையில்லாத கோரிக்கையை மறுப்பது உங்கள் நேரத்தை மிச்சமாக்கும்.
மறுப்பதன் அவசியத்தை நீங்களும் கூட உணர்ந்திருக்கலாம். ஆனால், மேலதிகாரியோ, நெருங்கிய நண்பரே ஒரு வேலையை சொல்லும் போது, எப்படி மறுத்துச்சொல்வது என்று தான் தெரியவில்லை என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் கவலையை விடுங்கள், எந்த சூழலில் யாரிடம் எப்படி நோ செல்வது என்று ஆலோசனை சொல்வதற்காகவே ஒரு இணையதளம் இருக்கிறது.
ஸ்டார்ட் அப்களுக்கான வழிகாட்டுதலை வழங்கும் ’ஸ்டார்ட்டர் ஸ்டோரி’ தளம் தான் (https://www.starterstory.com/how-to-say-no) இதற்கான பகுதியை கொண்டிருக்கிறது.
முதலீட்டாளர்களிடம் எப்படி மறுப்பது, விற்பனை பிரதிநிதிகளும் எப்படி மறுப்பது, பணியிடத்தில் எப்படி மறுப்பது என பலவித சூழல்களுக்கான யோசனைகளை இந்த தளம் முன்வைக்கிறது.
உதாரணத்திற்கு, சந்திப்புகளுக்கு மறுப்பு சொல்ல நவல் ரவிகாந்த் எனும் இணைய பிரமுகர் சொல்லும் வழி இது:
வணக்கம்,
முன்னதாகவே சொல்லிவிடுகிறேன்.
பரிவர்த்தனை அல்லாத சந்திப்புகளை விரும்புவதில்லை. தெளிவான நோக்கம் இல்லாத கூட்டங்களையும் விரும்புவதில்லை, அவசியம் எனும் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்கிறேன்.
ஸ்டார்ட் அப் வழிகாட்டிகளில் ஒருவரான பால் கிரகாம், தொலைபேசி கோரிக்களை மறுப்பதற்காக சொல்லும் எளிய வழி இது:
வணக்கம்,
எது பற்றி பேச விரும்புகிறீர்கள்?
எடுத்த எடுப்பில் இப்படி கேட்பதன் மூலம், மறுமுனையில் இருப்பவர்களிடம் இமெயில் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுமாறு கூறி முடித்துக்கொள்ளலாம்.
நன்கொடைக்கு மறுப்பு தெரிவிக்கும் வழி:
வணக்கம்
உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், எனது நோக்கம் வேறாக இருப்பதால், சிக்கனத்தை கடைப்பிடிக்கிறேன்.
இப்படி பல்வேறு சூழல்களில், பலரும் கையாளும் மறுப்பு தெரிவிப்பதற்கான வழிகளை இங்கு காணலாம்.
இந்த மறுப்புகளில் கவனிக்க வேண்டிய விஷயமாக எல்லாமே, ஏற்கத்தக்க வகையில் துவங்கி, மறுப்பதற்கான காரணத்தை பொருத்தமாக முன்வைப்பது தான். இந்த யோசனைகள் உங்களுக்கு வழிகாட்டலாம், அதைவிட முக்கியமாக எப்போது தேவையோ அப்போது மறுப்பதன் அவசியத்தை உணர்த்தலாம்.
என்ன சொல்கிறீர்கள்? உடன்பாடு இல்லை எனில் இதையும் மறுக்கலாம்.
(வளரும்)
-சைபர் சிம்மன்.
(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர்.- https://cybersimman.substack.com/ )