ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நம் கண்முன் கொண்டு வரும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வைத் தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது. ‘ஆதி கலைக்கோல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இது, டிசம்பர் 1,2 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு நாட்களாக நடைபெறவிருக்கும் இவ்விழாவுக்கு நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. பழங்குடி மக்களின் வரலாறு, புகைப்படக் கண்காட்சி, கலை மற்றும் சிற்பங்களின் கண்காட், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கருத்தரங்கு ஆகியவை அந்நிகழ்வில் இடம்பெறும்.
பழங்குடி மக்களின் உணவை சுவைக்கவும் அதுகுறித்து அறிந்துகொள்ளவும் நேரடி சமையல்கூட வசதி உண்டு. அது போல் அவர்களின் பாரம்பரிய உடைகள், இசைக்கருவிகள் மற்றும் புத்தகக் காட்சி ஆகியவையும் இடம்பெறும்.

பல்லாங்குழி, பரமபதம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் குழந்தைகளுக்கென்று தனி விளையாடுமிடமும் இங்கு உள்ளது. இவ்விழாவில் பாடகர் தெருக்குறள் அறிவு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா . எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், இமையம், ஸ்டாலின் ராஜாங்கம், கவிஞர் சுகிர்தாராணி முதலிய பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மொத்தம் 25,000 பேர் இந்நிகழ்வில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. இவ்வமைப்பின் சார்பில் இப்படியொரு பண்பாட்டு-கலைத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
சமூக நீதி அரசியல், வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுவது மிகவும் பொருத்தமானதும் இக்காலத்தின் தேவையுமாகும்.
இந்நிகழ்வு வெற்றிபெற முனைவு உளமாற வாழ்த்துகிறது. இந்நிகழ்வை உருவாக்க சிந்தித்தோர், செயல்படுவோர் அனைவருக்கும் முனைவின் வாழ்த்துகள்!
(புகைப்படங்கள்: நன்றி: https://aadhikalaikol.com/)