இந்தத் தளம், தரவுகளுக்கான விக்கிபீடியா

இந்தத் தளம், தரவுகளுக்கான விக்கிபீடியா

(இந்தத் தளம் தெரியுமா?– தொடரின் 6 ஆம் பகுதி)

 

இணையத்தில் நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களை பட்டியலிட்டால், ஸ்டாடிஸ்டா (https://www.statista.com/ ) தளம் அந்த பட்டியலில் முன் வரிவரிசையிலோ, பின் வரிசையிலோ நிச்சயம் இடம்பெறும். ஏனெனில், முன்னணி இணையதளங்கள், முக்கிய இணையதளங்கள், பயன்பாடு சார்ந்த இணையதளங்கள் என எப்படி பட்டியல் தயாரித்தாலும், அதில் ஸ்டாடிஸ்டா வந்து நிற்கும்.

நீங்களும் கூட ஸ்டாடிஸ்டாவை அறிந்திருக்கலாம். அல்லது உங்களை அறியாமலே கூட இந்த தளத்தை பயன்படுத்தியிருக்கலாம். அதாவது இதன் தரவுகளை எதிர்கொண்டிருக்கலாம்.

ஆம், தரவுகள் தான் ஸ்டாடிஸ்டாவின் அடிப்படை. இந்த தளம் சுட்டிக்காட்டும் தரவுகள் அடிப்படையிலான தகவல்கள் இணையத்தில் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, இணையத்தில் தரவுகள் சார்ந்த தகவல்கள் தேவைப்படும் போதெல்லாம் பலரும் முதலில் நாடும் தளமாகவும் இருக்கிறது.

பல நேரங்களில் ஆய்வுக்கான துவக்கப்புள்ளியாகவும் விளங்குகிறது. இதுவே ஸ்டாடிஸ்டாவின் சுய வர்ணனையாகவும் அமைகிறது.

ஸ்டாடிஸ்டாவை ’தகவல் பெருங்கடல்’ என்றும் வர்ணிக்கலாம். பல்வேறு இடங்களில் இருந்து புள்ளிவிவரங்களையும், தரவுகளையும் திரட்டி தொகுத்தளிக்கும் பணியை செய்வதால் இப்படி வர்ணிக்க வைக்கிறது. அதே நேரத்தில் தரவுகளில் இருந்து பெறக்கூடிய தகவல்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், காட்சி வடிவிலும் தருகிறது. அந்த வகையில் தரவுகளுக்கான விக்கிபீடியா என்றும் வர்ணிக்கலாம்.

புள்ளிவிவரங்கள் என்று வரும் போது ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற தளங்கள் இருக்கின்றன. அரசு அமைப்புகளும் அவற்றுக்கான தரவுகளை வெளியிட்டு வருகின்றன. இப்படி பொதுவெளியில் பெறக்கூடிய பல்வேறு துறை சார்ந்த தரவுகளை எல்லாம் திரட்டி ஒரே இடத்தில் எண்ணற்ற தலைப்புகளில் ஸ்டாஸ்டா தொகுத்தளிக்கிறது. 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தரவுகளை திரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெறும் திரட்டியாக மட்டும் அல்லாமல், தரவுகளில் இருந்து புதிய உள்ளொலியை அளிக்க கூடிய தகவல்களை பிரித்தெடுத்து அவற்றை பொருத்தமான தலைப்புகளில் அளிக்கிறது. இதை அலுப்பூட்டும் வகையில் நீளமான அறிக்கையாக அளிக்காமல், வரைபடங்கள், பட்டியல்கள் என எளிதாக அணுகும் வகையில் வழங்குகிறது.

ஆக, தரவுகளை தொகுப்பதோடு அவற்றை அலசி ஆராய்ந்து பொருள் சொல்கிறது எனலாம். பொதுவெளியில் கிடைக்கும் தரவுகள் மட்டும் அல்லாமல் சொந்தமாக நடத்தப்படும் ஆய்வுகள், கருத்துக்கணிப்புகள் சார்ந்த தகவல்களையும் அளிக்கிறது.

உலக நாடுகளில் சமூக ஊடக பயன்பாடு, ஐரோப்பாவில் இறைச்ச நுகர்வு போக்குகள், டிக்டாக் அழகு சாதன உலகை மாற்றி அமைக்கும் விதம்… இத்தகைய தலைப்பிலான தகவல்களை ஸ்டாடிஸ்டா தளத்தில் காணலாம். இதே போன்ற தலைப்பில்லான கட்டுரைகளை இணையத்தில் நீங்கள் அடிக்கடி எதிர்கொண்டிருக்கலாம். உள்ளே சென்று பார்த்தீர்கள் என்றால் அநேகமாக அந்த கட்டுரையில் ஸ்டாடிஸ்டா விவரம் என மேற்கோள் காட்டப்பட்டிருக்கலாம்.

பல்வேறு துறைகளின் போக்குகளையும், மாற்றங்களையும் சுட்டிக்காட்டும் வகையிலான தகவல் வரைபடங்களும், கட்டுரைகளும் ஸ்டாடிஸ்டாவில் தொடர்ந்து வெளியாவதால், இவற்றை அடிப்படையாக கொண்டு பல செய்திக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

இப்போது கூட, இந்தியாவில் பிரதமர் மோடி அடிக்கடி பயணிக்கும் மாநிலங்கள் எனும் தகவல் கட்டுரை பிரதமரின் அலுவலக பயணங்கள் தொடர்பான அரசு தரவுகள் அடிப்படையில் வெளியாகியுள்ளது. பிரதமர் பெரும்பாலும் ஆளும்கட்சி பா.ஜ.க ஆதரவு மாநிலங்களுக்கே அதிகம் பயணம் செய்வதாக தரவுகள் உணர்த்துவதாக இந்த கட்டுரை தெரிவிக்கிறது. தகவல் வரைபடத்தின் மூலம் இது அழகாக உணர்த்தப்பட்டுள்ளது.

எனவே, ஆய்வாளர்கள், வர்த்தக புள்ளிகள், செய்தியாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அடிக்கடி சென்று பார்க்க கூடிய தளமாக இது விளங்குகிறது. ஆய்வாளர்கள் என்றில்லை, சராசரி வாசகர்களும் கூட அவ்வப்போது இந்த தளத்தில் எட்டிப்பார்த்தால் தங்களுக்கு ஆர்வம் உள்ள தலைப்புகளில் புதிய சுவாரஸ்யமான போக்குகளை தெரிந்து கொள்ளலாம். இணையத்தில் மற்ற இடங்களில் வெளியாகும் முன்பாகவே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இதன் முகப்பு பக்கத்தில் கூகுள் போன்ற தேடல் கட்டத்தில் நமக்கு தேவையான தலைப்பில் தேடலாம். அதிகம் தேடப்படும் தலைப்புகள் அதன் கீழ் சுட்டிக்காட்டப்படுகின்றன. பிரபலமான தலைப்புகளில் இருந்தும் தேடலை துவங்கலாம். செய்தி அறிக்கைகள், சந்தை தகவல்கள் என தனித்தனி பகுதிகள் உள்ளன. இப்போது ஏஐ சார்ந்த புதிய பகுதியும் அறிமுகம் ஆகியுள்ளது.

ஆய்வு நேரத்தை மிச்சமாக்கி, தரவுகளில் இருந்து தேவையான தகவல்களை தொகுத்தளிப்பது ஸ்டாடிஸ்டாவின் பயன்பாடு என புரிந்து கொள்ளலாம்.

ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் இந்த சேவையை நடத்தி வருகிறது. தரவுகளை திரட்டித்தரும் ஆகச்சிறந்த தளம் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், இதன் தகவல்கள் எந்த அளவு நம்பகமானவை? இந்த கேள்விக்கு நேரடி பதில் இல்லை. ஸ்டாடிஸ்டா தரவுகள் நம்பகமானவை தான் என்று சொல்லலாம். ஏனெனில் பல்வேறு இடங்களில் இருந்து மூலத்தரவுகளை திரட்டி தொகுத்தளிப்பதால் இது நம்பகமானதே. ஆனால், மூலத்தரவுகளை கண்டறிவது சிக்கலானது.

கூடுதல் தகவல்களை பெறுவது அல்லது மூலத்தரவுகளை அடையாளம் காண கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. அதோடு எல்லா நேரங்களிலும் இதன் சேவை தேவைப்படும் வாய்ப்பில்லை. எனவே கட்டண சேவை அதிகமாகவே இருக்கலாம்.

கட்டண சுவர் கட்டுப்பாடு இருப்பதால் இதன் நம்பகத்தன்மையை முழுமையாக அலச வழியில்லை. ஆனால், பல தளங்களில் மூல தரவுகள் பற்றிய குறிப்பு இல்லாமல் ஸ்டாடிஸ்டா தகவல் மேற்கோள் காட்டப்படுவதையும் பார்க்கலாம். ஆய்வு நோக்கில் இந்த தளத்தின் பயன்பாடு பற்றி விரிவான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ரெட்டிட் மற்றும் குவோரா தள விவாதங்களில் இவற்றை அணுகலாம்.

ஆனால், எந்த தலைப்பிலும் ஆய்வு மற்றும் தகவல்களுக்கான துவக்கப்புள்ளி ஸ்டாடிஸ்டா என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இந்த பயணத்தில், மூலத்தரவுகளுக்கான இடங்களையும், பயனுள்ள மாற்று வழிகளையும் தெரிந்து கொள்ள முடிந்தால் நீங்கள் உங்கள் துறையில் வல்லுனர் என கொள்ளலாம்.

-சைபர் சிம்மன்.

(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர்.- https://cybersimman.substack.com/ )

(Image from Pixabay)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *