(இந்தத் தளம் தெரியுமா?-தொடரின் 10 ஆவது பகுதி)
இப்போது நாம் பார்க்க இருக்கும் சிட்டிசன்.ஓஎஸ் (https://citizenos.com/ ) தளத்தின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் எனில், இணைய வாக்கெடுப்பு நடத்த உதவும் சேவைகள் சிலவற்றை நினைத்துப்பார்க்க வேண்டும். இந்த பிரிவில் சர்வே மங்கியும், ஜாட்பிரசும் பிரபலமாக இருக்கின்றன. இவ்வளவு ஏன், நீங்கள் விரும்பினால் எக்ஸ் தளம் அல்லது, கூகுள் பார்ம்ஸ் மூலமாக கூட கருத்துக்கணிப்பை நடத்தலாம். இப்போது கேன்வாவிலும் இதற்கான எளிய வசதி இருக்கிறது.
இவை எல்லாமே வாக்கெடுப்பு அல்லது கருத்துக்கணிப்பை நடத்துவதை எளிதாக்கி இருந்தாலும், இவற்றின் பயன்பாடும் எளிமையானது தான். மாறாக, தீவிர உரையாடலை ஊக்குவித்து, செறிவான கருத்துக்களை சேகரித்து, அர்த்தம் நிறைந்த வகையில் முடிவுகளை மேற்கொள்ள விரும்பினால், சிட்டிசன்.ஓஎஸ் சேவை ஏற்றதாக இருக்கும்.
ஒரு வகையில் பார்த்தால், இணைய பாராளுமன்ற கூட்டங்களையும், மின்னணு நகராட்சி விவாதங்களையும் நடத்துவதற்கான இணைய சேவையாக இதை கருதலாம். அந்த நோக்கத்தில் தான் சிட்டிசன்.ஓஎஸ் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது, மக்களாட்சியின் ஆதார அம்சமான நேரடியாக தேர்ந்தெடுக்கும் உரிமையை, மக்கள் நலன் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் கொண்டு வந்து இணைய வழி பங்கேற்பையும் வாக்கெடுப்பையும் சாத்தியமாக்குகிறது இந்த சேவை.
இன்னொரு விதமாக பார்த்தால், சமூக ஊடக காலத்தில் நமக்கு மிகவும் தேவையான சேவை என்றும் வர்ணிக்கலாம். பேஸ்புக் உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடக சேவைகள் கருத்து பகிர்வுக்கு வழி செய்தாலும், அவற்றில் பயனாளிகள் தனிப்பட்ட நலன் அல்லது கருத்து வெளிப்பாடே முன்னுரிமை பெறுகின்றன. மாறாக, பொது நலன் நோக்கிலான திட்டங்கள் அல்லது பிரச்சனைகள் சார்ந்த ஜனநாயக முறையிலான பங்கேற்பும், கலந்துரையாடல் அல்லது கூட்டு விவாதத்திற்கான சமூக ஊடக சேவையாக சிட்டிசன்.ஓஎஸ் விளங்குவதை உணரலாம்.
எஸ்டோனியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த குடிமை தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தளம், மக்கள் கருத்துக்களை அறிய விரும்பும் திட்டங்கள் அல்லது உரையாடலுக்கான மேடையாக அமைகிறது.
உதாரணமாக, உள்ளூரில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதை செயல்வடிவம் பெறச்செய்வதும் முக்கியம். அதைவிட முக்கியம் இந்த செயல் மேலிருந்து கீழே செயல்படுத்தப்படும் முன்னெடுப்பாக இல்லாமல், தொடர்புடைய அங்கத்தினர் அனைத்தும் ஆர்வத்தோடு பங்கேற்று, எண்ணங்களை வெளிப்படுத்தி, இந்தக் கூட்டு உரையாடலின் அடிப்படையிலான பொது புரிதல் சார்ந்த வகையிலான சமூக செயல்பாட்டை சாத்தியமாக்க, இந்த மேடையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்தகைய இணைய ஜனநாயகம் சார்ந்த செயல்பாட்டுக்குத் தேவையான அம்சங்களையும், வசதிகளையும் இந்த மேடை கொண்டிருக்கிறது.
ஒரு திட்டத்திற்கு தேவையான எண்ணத்தை பயனாளிகள் பங்களிப்போடு வளர்த்தெடுப்பது முதல், இணைய வழி விவாதங்கள், வாக்கெடுப்பு என பலவிதமாக இந்த தளத்தை பயன்படுத்தலாம்.
முதல் கட்டமாக, திட்டம் அல்லது விவாதத்துக்கான தலைப்பைத் தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகு, அந்த தலைப்பு தொடர்பான பயனாளிகளின் கருத்துக்களை கோரலாம். இதற்கான குழுக்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துக்களும், அவை தொடர்பான விவாதங்களும் கூட்டு முடிவுக்கான புரிதலை உண்டாக்கும்.
இதே போலவே, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தலாம். அதே போல, இணையவழி கூட்டங்களை நடத்தலாம். மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்தலாம்.
அரசு அமைப்புகளும், துறைகளும், உள்ளாட்சி மன்றங்களும் மேலும் மக்கள் பங்கேற்புடன் தங்கள் செயல்பாடுகள் அமைய விரும்பினால் அதற்கான இணைய மேடையாக இந்த சேவையை அணுகலாம். இதே நோக்கத்தோடு, சாமானியர்களும், செயற்பாட்டாளர்களும் தங்கள் திட்டங்களுக்காக இந்த சேவையை பயன்படுத்தலாம்.
குடியிருப்பு சங்கங்கள் போன்றவையும் பயன்படுத்தலாம்.
இதே போன்ற பங்கேற்பு அம்சங்கள் கொண்ட சேவைகள் ஒரு சில இருந்தாலும், அவை வர்த்தக நோக்கில் கட்டணம் வசூலிப்பவை. ஆனால், சிட்டிசன்.ஓஎஸ் தளம் பொதுநலன் நோக்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. மக்களாட்சியின் பங்கேற்பு தன்மையை சமூக செயல்பாட்டில் மேலும் பரவலாக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இணைய ஜனநாயகம் உள்ளிட்ட செயல்பாடுகளில் முன்னோடியாக விளங்கும் எஸ்டோனியாவை மையமாக கொண்டு இந்த தளம் உருவாகியுள்ளது பொருத்தமானது. இதன் நிறுவனர்களில் ஒருவரான எஸ்டோனியாவின் இவா டுவேர்க் (Eva Truuverk ), இந்த மேடையை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்காமல் உறுதியாக இருப்பது பற்றி ஈடுபாட்டுடன் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, மக்களுடன் இணைந்து முடிவெடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன எனும் கேள்வி எழுந்த போது, இந்த தளத்தை உருவாக்கும் எண்ணம் பிறந்ததாக அவர் குறிப்பிடுகிறார். பாராளுமன்றத்திற்கு மாற்று என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும், மக்கள் பங்கேற்புடன் திட்டங்களை அணுகுவதற்கான இணையதளம் என்பதில் சந்தேகமில்லை.
(pic courtesy: freepik.com)
-சைபர் சிம்மன்.
(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர். https://cybersimman.substack.com/ )