தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2021-ம் ஆண்டு முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தை ஒரு தொழில் கோட்டமாக மாற்றும் முயற்சியில் பல திட்டங்களை அறிவித்துள்ளார். 2030-ஆம் ஆண்டுக்குள் பல புதிய முதலீடுகளை ஈர்த்து தொழிற்துறையில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காகப் தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு டெக் நிறுவனங்களுக்கு டைடல் பார்க் மூலம் அலுவலக இடங்களையும், சிப்காட் மூலமாக தொழிற்சாலைகளுக்கு இடங்களை பல வருடங்களாக வழங்கி வருகிறது. இப்போது இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பெயரில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு பயன்படும் வகையில் பகிர்வு பணியிடம் (கோ வொர்க்கிங் ஸ்பேஸ்) சேவையை தொடங்கி உள்ளது.
கோவிட் எனும் பெருந்தொற்று காலத்தில் பணியிடத்தின் பிரச்சனக்கு தீர்வுக்காண ‘ரெடி டு ஈட்’ உணவு போல ‘ரெடி டு மூவ்-இன்’ அலுவலக கலாச்சாரத்தை இதுவரை தனியார் நிறுவனங்கள் மட்டும் தான் ஸ்டார்ட்அப் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு அளித்துவந்தன. தற்போது பகிர்வு பணியிட (கோ வொர்க்கிங் ஸ்பேஸ்) சேவையை அளிக்க தமிழ்நாடு அரசும் களமிறங்கியுள்ளது.
இந்த கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவை பெரிய நிறுவனங்களுக்கு அளிக்காமல் சிறிய நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கும் என்ற முக்கிய நிபந்தனையும் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறிய நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும்.
தமிழ்நாடு அரசு டைடல் பார்க் வாயிலாக டெக் நிறுவனங்களுக்கு அலுவலக இடங்களையும், சிப்காட் வாயிலாகத் தொழிற்சாலைகளுக்கான இடங்களையும் பல வருடமாக அளித்து வரும் வேளையில், முதல் முறையாகத் தமிழ்நாடு அரசு முதல்வர் படைப்பகம் என்ற பெயரில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவையை அளிக்கிறது.
வட-சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு (ஜிசிசி- Greater Chennai Corporation) பெரு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 2.85 கோடி மதிப்பீட்டில் துவங்கிய இந்த முன்னெடுப்பு சிறிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை மட்டுமே கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நவம்பர் 11-ம் தேதி புதிய இளைஞர் பயிற்சி மையமான முதல்வர் படைப்பகத்தில் தொடங்கப்பட்டது.
இந்த முன்னெடுப்பு தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் பல சிறு தொழில்முனைவோர்கள் இங்கே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். இந்த திட்டம் பெண் தொழில்முனைவோர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். தொழிற்துறையில் அனைவருக்கும், அனைத்து விதிமான வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுவும் பெண் தொழில்முனைவோர்கள் வாய்ப்பு பெற வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது.
அதுமட்டுமல்ல இந்த ‘முதல்வர் படைப்பகம் மையம்’ இளைஞர்களின் திறமையை மேம்படுத்தி, தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2400 சதுரடியில் அமைக்கப்பட்ட தரைதளம் மற்றும் 2 மேல் தளம் என்று மூன்று தளங்களை கொண்டுள்ளது.
முதல்வர் படைப்பகத்தின் கீழ்தளத்தில் 38 பேர் அமரும் வகையில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் மற்றும் 4-6 பேர் பயன்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்துள்ள 3 மாநாட்டு அறைகள் உள்ளன. முதல் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள வசதியாக சுமார் 2000 போட்டித் தேர்வு புத்தகங்கள், 3 கணினி மேசை வசதிகளுடன் 51 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் தேநீர் மற்றும் சிற்றுண்டி விற்கப்படும் உணவகங்களுடன், 30 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ண இருக்கை வசதிகளுடன், பார்க்கவே ஒரு பெருநிறுவன அமைப்பில் அமைந்துள்ளது.
மேலும் இங்கே இருக்கைகளை நாள், வார, மாத அடிப்படையில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையில் முன்பதிவு செய்து பயன்படுத்த முடியும். அரைநாளுக்கு ரூ. 50/ – , நாள் ஒன்றுக்கு ரூ.100/- மாதம் ஒன்றுக்கு ரூ.2500/- என்ற பிரிவுகளில் முன்பதிவு செய்து அமைதியான நல்ல பணியிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏற்கனவே ஒரு சொந்தமாக வணிக நிறுவனம் நடத்துபவர் கூட அவரவர்களின் பணியிடங்களில் வணிக சந்திப்புகளுக்கு சரியான இட வசதியில்லை என்றால் ரூ.150 கட்டணம் செலுத்தி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு இளைஞர்களுக்காக உள்ள கற்றல் மையத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தொழில்நுட்ப பயிற்சி, மென்பொருள் மேம்பாடு, மொழி பயிற்சி, தலைமைத்துவ பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் இடம்பெறும். இதன் மூலம் இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளைப் பெற தகுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இந்த மையத்தில் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறி, பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும்.
இந்த பகிரும் பணியிடத்தை இணையம் வழியாக முன்பதிவு செய்ய வசதியும் உள்ளது, மேலும் விவரங்களுக்கு https://gccservices.chennaicorporation.gov.in/muthalvarpadaippagam என்ற தளத்தை பார்க்கவும்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(Featured Image by freepik)