authory.com: இது உங்களுக்கான இணைய பக்கம்

authory.com: இது உங்களுக்கான இணைய பக்கம்

நீங்கள் பேஸ்புக்கை பயன்படுதலாம், இன்ஸ்டா, வாட்ஸ் அப் உள்ளிட்ட பிரபலமாக உள்ள இன்னும் பல சேவைகளை பயன்படுத்தலாம். ஆனால் இந்த தளங்கள் மட்டுமே போதுமானவை என நினைத்து விடக்கூடாது. இவைத்தவிர உங்களுக்கான இணையதளங்களையும் நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

உங்களுக்கான இணையதளம் என்றால், உங்கள் உள்ளடக்கத்தை பாதுகாக்கும் இணையதளம். ஆத்தரி (https://authory.com/ ) இதற்கான உதாரணம்.

பேஸ்புக், இன்ஸ்டா எல்லாம் இலவச சேவைகள். இவற்றில் நீங்கள் விரும்பிய எந்த வடிவிலும் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ளலாம். அவற்றின் தனியுரிமை, காப்புரிமை போன்ற நுட்பமான பிரச்சனைகள் தவிர இன்னொரு முக்கிய பிரச்னையும் இருக்கிறது.

ஏதேனும் ஒரு காரணத்தினால், உங்கள் உள்ளடக்கம் இந்த தளங்களில் இருந்து நீக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? அல்லது, நீங்கள் பயன்படுத்தும் வேறொரு சமூக ஊடக சேவை திடிரென மூடப்பட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் உள்ளடக்கம் என்னாகும்?

இப்படி எல்லாம் யோசித்திருக்கிறீர்களா? இனி யோசியுங்கள். ஏனெனில் இணைய வெளியில் எதுவும் நிரந்தரம் இல்லை. பலவித காரணங்களினால் இணையத்தில் உங்கள் உள்ளடக்கம் அவற்றின் சுவடே இல்லாமல் காணமால் போகலாம். வலைப்பதிவுகளுக்கும் இது பொருந்தும். ஊடக தளங்கள், இணையதளங்களில் வெளியாகும் கட்டுரைகளுக்கும் இது பொருந்தும். காணொலிகளுக்கும் இது நிகழலாம்.

உதாரணம் வேண்டுமா என்றால் அண்மையில், பிரபல இணையதளமான கார்ட்டூன் நெட்வொர்க் தளம் மூடப்பட்டதால் அதிலிருந்த கார்ட்டூன் படங்கள் எல்லாம் ஒரே நாளில் இணையத்தில் இருந்து மறைந்துவிட்டன. கார்ட்டூன் அபிமானிகள் இனி அவற்றை அணுகுவது கடினம் தான்.

இது ஒருவிதமான இழப்பு என்றால், வலைப்பதிவு சாம்ப்ராஜ்யம் என ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட காக்கர் மீடியாவும் (Gawker.com,) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வசம் இருந்த ஜெஸிபல் (Jezebel) எனும் பெண்ணிய இணைய இதழ் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. இந்த தளங்கள் ஆவண வடிவில் கூட பரமாரிக்கப்படாததால் பழைய கட்டுரைகளை படிப்பது சாத்தியம் இல்லை.

வாசகர்களுக்கு இது ஒருவித இழப்பு என்றால், இந்த இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதிய எழுத்தாளர்கள், இதழாளர்கள் நிலையை யோசித்துப்பாருங்கள். அவர்கள் ஆக்கங்களுக்கான பிரதி அவர்களிடம் இருந்தால் உண்டு, இல்லை என்றால் அவற்றின் மூல வடிவத்தை இனி அணுக முடியாது.

தொழில்முறையாக அல்லது வேறு காரணங்களுக்காக அவர்கள் தங்கள் எழுத்துக்களை அடையாளம் காட்ட விரும்பினால் அதற்கான வழி இருக்காது.

இது இணைய ஆவணமாக்கலின் அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில்,தனிப்பட்டவர்கள் தங்கள் ஆக்கங்களை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

இந்த இடத்தில் தான் ஆத்தரி இணைய சேவை வருகிறது. அடிப்படையில் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோருக்கான படைப்பு விளக்க (portfolio) தளம் என்றாலும், அவர்களது உள்ளடக்கத்தை பாதுகாக்கும் வகையிலும் அமைகிறது.

அபவுட்..மீ உள்ளிட்ட தளங்களில் அறிமுகம் பக்கம் அமைத்துக்கொள்வது போலவே, இந்த தளத்திலும் பயனாளிகள் தங்களுக்கான அறிமுக பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். இந்த பக்கத்தில் தங்களது மிகச்சிறந்த கட்டுரைகள், ஆக்கங்களை காட்சிக்கு வைக்கலாம். அதே நேரத்தில், இந்த ஆக்கங்கள் அனைத்தும் பாதுகாப்பாக பிரதியெடுக்கப்படும். எனவே,மூல தளங்களில் கட்டுரைகள் மறைந்து போனாலும் இந்த தளத்தில் அதன் நகல் சேமிப்பு இருக்கும். இது எழுத்தாளர்களுக்கும், இதழாளர்களுக்கும் மிகவும் உதவியாக அமையும்.

மேலும், புதிய கட்டுரைகள் எழுதும் போது அவை இந்த தளத்தில் புதுப்பிக்கப்படும். இந்த பக்கத்தை தனிப்பட்டதாகவும் வைத்திருக்கலாம் அல்லது மற்றவர்களோடு பகிரவும் செய்யலாம். இந்த தளத்தில் சேமிக்கப்படுவதை தனியே கம்ப்யூட்டரிலும் பிரதி எடுத்துக்கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்பதால் உள்ளடக்கம் பாதிப்புக்குள்ளாகாது.

எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் தவிர, தொழில்துறை பிரமுகர்களும் தங்களது முக்கிய ஆக்கங்களைப் பாதுகாக்க இந்த சேவையைப் பயன்படுத்தலாம். இலவச சேவை உண்டென்றாலும் வரம்புகள் கொண்டது, கட்டணச்சேவை கூடுதல் அம்சங்கள் கொண்டது.

அதைவிட இணையத்தில் பகிரும் உள்ளடக்கங்களின் நிலையற்ற தன்மை குறித்து அறிந்திருப்பது இன்னும் அவசியம்.

சைபர் சிம்மன்.

(கட்டுரையாளர், இணையமலர் மின்மடல் ஆசிரியர், பத்திரிகையாளர்.- https://cybersimman.substack.com/ )

Image by GraphicMama-team from Pixabay

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *